×

சோதனைகளும் சாதனைக்கே!

நன்றி குங்குமம் தோழி

திருமதி தென்னிந்தியா

வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. சோதனைகள் நிறைந்த வாழ்க்கையை வியக்கும் சாதனைகளாக மாற்றுபவர்கள் வெகு சிலரே. அதிலும் மரணத்தின் வாயிலுக்கு சென்று வந்த ஒரு பெண் மக்கள் மனம் கவர்ந்த திருமதி தென்னிந்திய அழகியாக வெற்றி பெற்றது உண்மையில் பாராட்டுக்குரியது. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மிசஸ் தென்னிந்திய அழகிப் போட்டியில் மகுடம் சூடியவர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த கௌசல்யா கோபி. அழகிய பப்ளிமாஸ் கன்னங்கள், திராட்சைக் கண்களுடன் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் அமுல் பேபி போல் குழந்தை முகத்துடன் இருந்தாலும் இவருக்குள் நிறைந்திருந்த சோகங்களை மறைத்து இந்த சாதனையை செய்திருக்கிறார் இவர்.

‘‘ராசிபுரம்தான் என்னுடைய சொந்த ஊர். என் கணவருக்கும் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் என்னும் ஊர்தான். எங்களுக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். நான் காஸ்ட்யூம் அண்ட் ஃபேஷன் டெக்னாலஜி குறித்து இளங்கலை பட்டப்படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட். அதில் படிக்கும் போது அழகு பராமரிப்பு குறித்த படிப்பும் இருந்தது. எனக்கு அதில் தனிப்பட்ட ஆர்வம் உண்டு.

பி.எஸ்.ஸி முடித்து எம்.எஸ்.சி படிப்பதில் ஆர்வமாக இருந்த போது எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டது. அதில் என்னுடைய முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்பட்டு நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆறு மாதங்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்ேதன். அதன் பிறகு தான் மெல்ல மெல்ல குணமானேன். என் உடல் நிலை காரணமாக என்னால் மேலே படிக்க முடியவில்லை. அந்த வருத்தம் எனக்கு இருந்தது. ஆனால் அதையே நினைத்துக் கொண்டு இருக்காமல் என்னால் வேறு என்ன செய்ய முடியும்ன்னு யோசித்தேன். மல்டி மீடியா டிசைன் மற்றும் அழகு கலைக் குறித்து பயிற்சி எடுத்தேன். ஆன்லைன் முறையில் பேக்கரியும் கற்றேன்’’ என்றவர் திருமணம் வரை மல்டி மீடியா துறையில் ஐந்தாண்டு காலம் வேலைபார்த்துள்ளார்.

‘‘என் கணவருக்கு பெங்களூரில் வேலை என்பதால், என் வேலையை விட்டுவிட்டேன். ஆனால் அதன் பிறகு தான் நான் உடல் மற்றும் மனரீதியாக பல பிரச்னைகளை சந்தித்தேன். திருமணமாகி ஒரு மாதத்தில் கருவுற்றேன். ஆனால் மூன்றாம் மாதத்தில் கருவின் வளர்ச்சியில் பாதிப்பு இருந்ததால் கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அது என்னுடைய உயிருக்கே ஆபத்தாக மாறியது. அது என்னுடைய மனதை பெரிய அளவில் பாதித்தது.

ஒரு மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் நானும் என் கணவரும் சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். இங்கு வந்தவுடன் நானும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். மீண்டும் கருவுற்றேன். இந்த முறை குழந்தையும் நன்றாக இருப்பதாக டாக்டர் சொன்னதால், நானும் என் கணவர் இருவரும், அந்த பிஞ்சு வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் விதி வலியது. என் வாழ்வில் நடந்த அந்த துயர சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

இரண்டாம் முறை கருவுற்றபோது ஏழாம் மாதம் வளைகாப்பு நிகழ்வுக்காக ராசிபுரம் வந்தேன். டெலிவரிக்கு சரியாக ஏழு நாட்கள் இருந்த போது எனக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. டாக்டரிடம் சென்ற போது அவர் ஒரு மாதமாக எனக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக சொன்னவர், குழந்தையையும் என்னையும் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று கூறிவிட்டார். அதனால் ராசிபுரத்தில் இருந்து சேலத்தில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு வந்தோம்.

அங்கே கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக வயிற்றில் சிசுவுடன் நான் கோமா நிலைக்கு சென்றேன். ஆறு மணி நேரம்தான் உயிரோடு இருப்பேன் என்று டாக்டர்கள் என் உயிருக்கு கெடு வைக்க, அங்கிருந்து கோவையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு டாக்டர்கள் நான் கோமாவில் இருந்த போதும், வயிற்றில் இருந்த சிசுவை சுகப்பிரசவம் செய்தனர். அதில் அவர்களால் என்னை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. என் மகன் இறந்தே பிறந்தான்.

ஏற்கனவே ஒரு கருவை இழந்த நிலையில் இப்போது, மற்றொரு கருவினை குழந்தையாக இழந்து நின்றேன். மனதால் மட்டுமில்லாமல் உடலாலும் நான் பல வேதனைகளை சந்தித்தேன். என்னுடைய நிலை யாருக்கும் வரவேக்கூடாதுன்னு நான் இன்றும் கடவுளை வேண்டிக் கொள்வேன். வயிற்றில் உள்ள சிசு பிழைக்குமா பிழைக்காதா என்ற மன உளைச்சலின் தாக்கம் அதிகமாகி ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தேன்.

அந்த நிலையில் நானும் பிழைக்க மாட்டேன் என்று டாக்டர்கள் கூற கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்று மீண்டு வந்தேன் என்றுதான் சொல்லணும். 15 நாட்கள் கோமாவில் இருந்த நான் கண்விழித்த போது என் குடும்பத்தினர் என்னிடம் மிகவும் கவனமாக என் மகன் இறந்துவிட்ட செய்தியை சொன்னபோது உலகமே இடிந்தது போல் உணர்ந்தேன். தன் உயிரைக் கொடுத்து என் உயிரை காப்பாற்றிய மகனாக அவன் இன்றும் தெய்வமாகியிருக்கிறான். சரியாக ஒரு வருடம் கழித்து அவன் இறந்த அதே மாதம் என் வயிற்றில் மீண்டும் கரு தங்கியது. இந்த கருவுக்காகவே என் மனதை மாற்றிக்கொண்டு எப்படியாவது வாழ்ந்தாக வேண்டும் என்பதற்காக கடவுள் நம்மை நம்பி ஒரு மிகப்பெரிய பொறுப்பை தந்துள்ளார் என்று மனவலிமையுடன் எனது மகளை பிரசவித்தேன்’’ என்றவர் அழகிப் போட்டியின் அனுபவம் குறித்து பகிர்ந்தார்.

‘‘படிக்கும் காலத்திலேயே கல்லூரிகளில் நடக்கும் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு அழகுக்கலையில் ஆர்வம் இருந்ததால் தெரிந்தவர் மூலம் அகில இந்திய முடி மற்றும் அழகு சங்கத்தில் (AIHABA) உறுப்பினராக இணைந்தேன். அதன் மூலம்தான் சேலத்தில் நடைபெற்ற மிசஸ் சேலம் அழகிப்போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து நடைபெற்ற மிசஸ் தமிழ்நாடு பட்டம் வென்றேன். அதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மிசஸ் தென்னிந்தியா போட்டியில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடினேன். அதில் என்னால் மறக்க முடியாத நிகழ்வு என்றால், போட்டியின் நடுவரான நடிகை வடிவுக்கரசி அம்மா அவர்கள் என்னை அழைத்து ஆசையாய் கன்னத்தை தடவி ‘நம்ம கலாச்சாரம் பாதிக்காமல் நீ இருப்பது மகிழ்வாக உள்ளது’ எனப் பாராட்டினார்.

என்னுடைய ஒவ்வொரு கஷ்டமான நிலையிலும் என் கணவர்தான் எனக்கு முழு ஆதரவு அளித்தார். அவரால்தான் வேதனை நிறைந்த சூழலில் இருந்து என்னால் வெளி வந்து எனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அவர் தான் நான் இந்த போட்டிகளில் பங்கு பெற காரணம். எத்தனை சோதனைகள் வந்தாலும் முடங்கி விடாமல் தனக்கென்று சுய அடையாளத்தைப் பெற பெண்கள் திறமைகளை வளர்த்து சாதிக்க வேண்டும்.

அதற்கு நானே பெரிய உதாரணம். என் இரண்டாவது குழந்தை இழப்பில் இருந்து மீண்டு வர வீட்டில் இருந்த படியே ஆர்டரின் பெயரில் கேக் தயாரித்து கொடுத்தேன். அழகுக் கலை நிபுணராகவும் வலம் வந்தேன். கல்லூரிகளுக்கு ஸ்கில் டெவலப்மென்ட் பயிற்சிகள் அளித்து வருகிறேன். பேக்கரி மற்றும் அழகுக் கலை வகுப்புகளும் எடுக்கிறேன். அடுத்து மிசஸ் இந்தியா போட்டிகளில் கலந்து கொள்வதற்காக முனைப்புடன் பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார் கவுசல்யா.

தொகுப்பு: சேலம் சுபா

The post சோதனைகளும் சாதனைக்கே! appeared first on Dinakaran.

Tags : South ,India ,Southern ,
× RELATED இந்தியா-தெ.ஆப்ரிக்கா பெண்கள் தொடர்: இன்று பெங்களூரில் முதல் ஒருநாள்