×

சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி

அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி

``விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு
வேதம்‌ சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு;
அவ்வழிகிடக்கப்‌
பழிக்கே சுழன்றுவெம்‌ பாவங்களே செய்து,
பாழ்நரகக்‌
குழிக்கே அழுந்தும்‌ கயவர்தம்‌ மோடென்ன
கூட்டினியே?’’
எழுபத்தி ஒன்பதாவது அந்தாதி
“ஆதியாக”

இப்பாடலானது அபிராமிபட்டரின் பிரார்த்தனையை நிறைவேற்றிய பாடல். தை அமாவாசை அன்று அபிராமியின் அருளைப் பெற்ற பாடல். உமையம்மை தன் தோட்டை பட்டருக்காக விண்ணை நோக்கி எறிந்து அதையே நிலவாக ஆக்கி அருள்செய்த பாடல். அபிராமி பட்டரின் பிறவித் துன்பத்தை விலக்கி, அவர் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கி அருள்செய்த பாடல். இறையுணர்வு அனுபவமாக சான்று தந்த பாடல்.

இந்தப் பாடலின் பெருமையை படிப்போர்க்கு உமையம்மையின் அருளை பெற்றுத்தருவது எழுபத்து ஒன்பதாவது பாடல். இது பதினாறு செல்வத்தையும் பெற்றுத் தரும் பாடல். பதினாறு அட்ஷரங்களை கொண்ட மந்திரங்களுக்குரிய உண்மையை வெளிப்படுத்திய பாடல். வேதாகமம் சொன்ன வழியை மேற்கொண்டு வலியுறுத்திய பாடல். ஒவ்வொரு மனிதனும் சாத்திரத்தால் அதன் பொருளை அறிந்து பின்பற்றுவதால் தேவதையின் அருளால் சிறக்கச் செய்யும் பாடல். உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இதைப் பற்றி என்னால் சொல்ல முடிந்தது இவ்வளவுதான். இனி பாடலுக்குள் செல்வோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”
* விழிக்கே
* அருளுண்டு
* அபிராமவல்லிக்கு
* வேதம் சொன்ன வழிக்கே வழிபட
* நெஞ்சுண்டு எமக்கு
* அவ்வழி கிடக்க
* பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து
* பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்
* கயவர் தம்மோடு
* என்ன கூட்டினியே

இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

“விழிக்கே”
என்னும் சொல்லால் உமையம்மையின் கண்ணைப் பற்றி பதினொரு இடங்களில் பேசுகின்றார். இதன் மூலம் சில கருத்தை வெளிப்படுத்துகிறார். அதை ஒவ்வொன்றாய்க் காண்பது என்பது இச்சொல்லின் பொருளை உணர்ந்துகொள்ள உதவியாக இருக்கும்.

* “விழியின் அமைப்பு’’

உமையம்மையின் கண்ணானது வடிவத்தால் தாமரையை ஒத்ததாக குறிப்பிடுகின்றார். இதை ‘தகைசேர்நயனக் கருணாம் புயமும்’ (58) என்பதனால் உணரலாம்.

* “பார்வையின் ஆற்றல்’’

உமையம்மையின் பார்வையானது மானுட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அருளும் ஆற்றலுடையது.

* “பார்ப்பதால் ஏற்படும் பயன்’’

உலகியலில் ‘தனம் தரும்.. கடைக்கண்களே’ (69). இந்த பதினாறு வகையான செல்வங்களையும் அருள வல்லது ‘அபிராமி கடைக்கண்களே’ (69) என்பதனால் அறியலாம்.

* “விழியின் செயல்’’

உமையம்மை பார்ப்பதனால், எம வாதனை தீரும் என்கிறது திருக்கடவூர் தலபுராணம். இதை ‘அந்தகன்பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு’ (39) என்பதனால் அறியலாம்.

* “வெவ்வேறு பயன்கள்’’

‘வாணுதற் கண்ணியை’ (40) என்பதனால் ஆணவம், கன்மம், மாயேயம், திரோதாயி என்ற ஆன்மாவை சார்ந்த வெவ்வேறு மலத்தை போக்கக் கூடியது. இதை நெற்றி கண்ணாக வடிப்பர். இந்த பார்வையானது சமய, விசேஷ, நிர்வாண, ஆசார்ய, சத்னிபாத என்ற ஐந்து வகை தீக்ஷா பலனை கொடுக்க வல்லது.

* “கண்களின் எண்ணிக்கை’’

உமையம்மைக்கு வலது, இடது, நுதல்வழி என்ற மூன்று கண்கள் உள்ளது. இதையே ‘ஒன்றோடிரண்டு நயனங்களே’ (73) என்பதனால் அறியலாம்.

*“விழியின் நோக்கு’’

உமையம்மை கருணையோடு பக்தர்களையும், சினத்தோடு அதர்மம் செய்யும் அரக்கர்களையும், ஊடலோடு கணவனையும், அருவருப்போடு கங்கையையும் நோக்குகிறாள். ஆகமங்கள் கங்கா விசர்ஜனர் என்ற மூர்த்தியில் உள்ள உமையம்மையை குறிப்பிடுகிறது. இதையே பட்டர் ‘பனிதரும், திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரும்’ (4) ‘தை வந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக் கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்தது எங்கே’ (98) என்று குறிப்பிடுவதனால் அறியலாம்.

*“அந்தப் பார்வையை பார்ப்பதனால் ஏற்படும் மாற்றம்’’உமையம்மையின் பார்வையானது பார்ப்பவர்க்குள் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. ‘கருத்தினுள்ளே தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ’ (19) என்பதனாலும் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் கண்ணை ‘உழையைப் பொருகண்ணும்’ (100) என்பதனால் அறியலாம்.

* ``துயில்’’

கண்ணின் செயல் அற்ற தன்மையை குறிப்பிடுகிறது. இந்த கண்ணானது ஆலயங் களில் பள்ளியறையில் உள்ள உமையம்மைக்கு வழக்கப்படும் பார்வையாகும். இதையே துயில் என்ற வார்த்தையினால் அறியலாம்.

* “ஊனக்கண்’’

மானுடர்களைப் போல கண்கள் இரண்டே உடைய சில தேவதைகளை குறிப்பிடுகின்றார். அணங்குகள் என்ற தேவதைகளின் பார்வை இரு கண்களைக் கொண்டது. ‘அணங்குகள் நின்பரி வாரங்கள்’ (81) என்பதனால் அறியலாம்.

* ``ஞானக்கண்’’

ஞானக்கண் என்பது உலகியல் ஞானம், ஆத்மஞானம், சிவஞானம் இந்த மூன்றையும் வழங்க வல்லது, உலகியல் ஞானத்தை, சரஸ்வதியும், ஆத்மஞானத்தை, இலக்குமியும், சிவஞானத்தை, மனோன்மணியும் வழங்க வல்லவர்கள். இதையே ‘முக்கண்ணியைத் தொழுவார்க்கு’ (நூற்பயன்) என்பதனால் அறியலாம். மேற்கண்ட பதினொரு ஆற்றலையும் ஒருங்கிணைந்த ஒரே வார்த்தையால் “விழிக்கே’’ என்கிறார்.

“அருளுண்டு’’

அருள் என்னும் சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகிறார் பட்டர். ஒரு தாயானவள் குழந்தையின் பசித் துன்பத்தை அறிந்து அழுகுரல் கேட்கும் முன்னமே பால் ஊட்டி அதன் துன்பத்தைப் போக்குவது போல, உமையம்மையானவள் விரைந்து அருள்புரிவாள் என்பதையே ‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேர் அருள்கூர்’ (9) உமையானவள், தான் நேரடியாக மக்களுக்கு அருள்புரிய சாத்திரங்களை உருவாக்கினாள்.

இந்த சாத்திரங்களில் சொன்ன வழியே தன்னை அடைய வழிவகையும் செய்தாள். உமையம்மையின் எண்ணத்தில் தோன்றிய உலக உயிர்களுக்கான உய்தலின் பொருட்டு சிந்திக்கப்பட்ட கருத்தே வேதங்கள், சாத்திரங்கள். இதையே ‘எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே அருளே’ (10) என்கிறார்.உமையம்மை நெஞ்சத்தில் உள்ள அழுக்கையெல்லாம் நன்கு துடைத்து, நற்குணங்களை இறையருளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதிற்குள் தோற்றுவிப் பதையே ‘நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை’ (27) என்று குறிப்பிடுகிறார். அருள் என்பது இரக்கமற்ற தன்மையின் எதிர்குணமாகும். ‘அருள் அற்ற அந்தகன்கைப் பாசத்தில்’ (32) என்பதனால் இதை அறியலாம்.

அருள் என்பது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் எழுந்தருளியிருக்கும் உமையம்மையின் பண்பைக் குறிப்பிடுவதாகும். உமையம்மை எழுந்தருளிய மனதில் அமைதி, இன்பம், துன்பமற்ற பண்பு, துணிவு, உறுதி போன்ற நற்பண்புகள் இயல்பாகவே தோற்றும். இதையே ‘என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்றன் அருள்’ (36) என்பதனால் அறியலாம்.

எப்பொழுதும் பாதுகாப்பு, எப்பொழுதும் செல்வம் அதைக் குறித்து இயங்கிக் கொண்டிருக்கக் கூடாது அதற்கு மாறாக இருக்க வேண்டும். இதையே ‘அரணம் பொருள்’ (51) என்று அருள் பண்பு இல்லாதவரை அசுரர் என்கிறார். அருள் குணத்தை உடையவர்களை கடவுள் என்கிறார். உயர்ந்த ஒன்றை ஒப்பில்லா ஒன்றை விலைமதிப்பற்ற ஒன்றை அருள் என்கிறார். இதை எதிர்மாறாக நமக்கு விளக்கம் தருகிறார்.

‘இதுவோ உன்தன் மெய்யருளே’ (57) என்று கேட்பதனால் துன்பத்தை நீக்கி மகிழ்ச்சியை பெற்று தரும் பண்பு அருள். நீ எனக்கு அதை தரவில்லை என்று கோபப்படுகிறார். அருள் அதன் அளவை பொறுத்து அதனால் பெரும் விளைவு அமைகிறது. உமையம்மையின் அருளானது கடல் போன்று பெரியது என்று நமக்கு வலியுறுத்துகிறார். அதையே ‘அருட்கடலே’ (95) என்பதனால் அறியலாம்.

இத்தனை அருட்பண்புகளை மனதில் கொண்டு அருள் உண்டு என்று நம் உள்ளத்துக்கு உறுதியளிக்கிறார். இதை சொன்ன பிறகே உமையம்மை தோன்றினால் அதனாலேயே ஆகமங்கள் ‘த்ருவந்தே’ உறுதியளிப்பாயாக என்று முதலில் உறுதியான மனநிலையை ப்ரார்த்தித்தே பூசனையை துவங்க சொல்லுகிறது‌.  அதையே அபிராமி பட்டரும் செய்கிறார். அதனால் அருள் உண்டு என்று சொன்ன அந்தக்ஷணமே உமையம்மை முன் தோன்றி தன் வயிரக்குழையை விண்ணை நோக்கி வீசினாள் என்பதையே “அருளுண்டு” என்கிறார்.

“அபிராமவல்லிக்கு’’ என்ற சொல்லால் திருக்கடையூரில் எழுந்தருளியிருக்கும் அபிராமியையே குறிப்பிடுகின்றார். அபிராமி என்கின்ற சொல்லிற்கு மனதுக்குள் தோன்றும் மகிழ்ச்சியாகத் திகழ்பவள் என்பது பொருள். வல்லி என்ற சொல்லிற்கு கொடி போன்றவள் என்பது பொருள். “அபிராமவல்லிக்கு” என்பதனால் மானுடர்களின் உடலுக்குள் இருக்கும் கொடி போன்ற அமைப்பை உடைய சுசும்னாநாடியின் [முக்கிய நரம்பு] நடுவில் எழுந்தருளியிருக்கும் உமையம்மைக்கு “அபிராமவல்லி” என்பது பெயர்.

அபிராமி என்பதற்கு அழகு என்பது பொருள். எண்ணி மகிழத்தக்க பேரழகை கொண்டவள் உமையம்மை ‘அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி’ (71) ‘எம்பெருமாட்டிதன் பேரழகே’ (70) உலகிலுள்ள அனைத்து அழகும் ஒரு காலத்தில் இருந்து காலப் போக்கில் குறைந்துவிடும். மேலும், ஒரே அழகைத் தொடர்ந்து காண்பதனால் சலிப்பும் ஏற்படும். அத்தகைய அழகை அபிராமிபட்டர் குறிப்பிடாமல் நிலைத்த சலிப்பற்ற ஆன்மஅழகையே பேரழகு என்கிறார்.

ஆகமங்கள் கூறும் இரண்டு விதமான பூசனை முறைகளில் அக வழிபாட்டில் வணங்கப்படும் உமையம்மைக்கு வல்லி என்று பெயர். புற வழிபாட்டில் வணங்கக் கூடிய உமையம்மைக்கு அபிராமி என்று பெயர். அகத்திலும், புறத்திலும் ஒருங்கிணைந்து வழிபாடு செய்வதனால் அருளும் தேவதையை “அபிராமவல்லி’’ என்கிறார். அகத்தில் வழிபட மனதில் உள்ள மாசு தீரும். புறத்தில் வழிபட உடலில் உள்ள வியாதி நீங்கும். ஆரோக்கியம் பெருகும். அகம் புறம் என்று அபிராமவல்லியை இரண்டு வகையிலும் வழிபட்டால் ஆத்மஞானம் வரும். அதனால், கர்மா அழிந்து புண்ணியம் உருவாகும். புண்ணியத்தால் பல நன்மைகள் நம்மை வந்து அடையும். ‘அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லி’ (71) ‘பேரழகே’ (70) என்பதையே “அபிராமவல்லிக்கு’’
என்கிறார்.

“வேதம் சொன்ன வழிக்கே வழிபட’’ வேதமானது உமையம்மையை வழிபட நான்கு விதமான வழிமுறைகளை குறிப்பிடுகிறது. புறப்பொருள்களை கொண்டு வேள்வி தீமூட்டி யாகங்கள் செய்து வழிபடுவது. இதை கர்மகாண்டம் என்பர். புறப்பொருள் ஏதுமின்றி எண்ணத்தினாலே உமையம்மையை தியானித்து வழிபடுவது. இதை ஞானகாண்டம் என்பர்.

மேலும், உமையம்மையே வகுத்த ஆகமங்களின் வழி வேத மந்திரங்களின் துணைகொண்டு பிற உயிர்களைத் துன்புறுத்தி வழிபடுவது. ஆகமத்தை மட்டும் கொண்டு உயிர்களைத் துன்புறுத்தாது சைவவழியில் பொருட்களை கொண்டு வழிபடுவது. இந்த நான்கு வழிபாட்டு முறையை பின் பற்றி மட்டுமே வழிபாடு செய்வதை “வேதம் சொன்ன வழிக்கே” என்கிறார். சமய நூல்களில் இந்த நான்கு வழிகளையும் நான்கு கலைச் சொற்களால் குறிப்பிடுகிறார்.

அபிராமிபட்டர் காலத்தில் இருந்த வழிபாட்டு முறைகளை தன் பாடல்களின் வழி ‘சுருதிகளின் பணையும்’ (2) என்பதனால் வைதீகத்தையும், ‘பதிகொண்ட வேரும்’ (2) என்பதனால் வேத மார்க்கத்தை ‘பரமாகம பத்ததியே’ (6) என்பதனால் பத்ததியையும் தாந்ரீக மார்கத்தை விளக்க ‘உயிர் அவி உண்ணும் உயர்சண்டி’ (77) ‘பலி கவர் தெய்வங்கள்’ (64) என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேதம் என்ற சொல்லானது சிற்ப சாஸ்திரத்தைப் பொறுத்தவரை நான்கு என்ற எண்ணிக்கையை உணர்த்த உதவுகிறது. இதை ‘வேத ஹஸ்தா பயானகா’ நான்கு கைகளையும் அச்சுறுத்தும் முகத்தையும் கொண்டவள் என்ற காளி தியானத்தால் அறியலாம். மேலும், சைவத்தில் உள்ளது போலவே சாக்தத்திலும் இந்த நான்கு வகை மார்கம் உள்ளதை விளங்குகிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி appeared first on Dinakaran.

Tags : Shakti Tattva-Abhirami Anthadi ,Ovvada Valli ,Abramavalli ,Gayavardham modenna kutini ,Abramibhatta ,Shakti Tattvam-Abrami Anthadi ,
× RELATED தயாமூலதன்மம்