×
Saravana Stores

திருப்பம் தரும் திருப்புகழ்

பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர், முருகன் அடியார்களில் முதலிடம் பெற்று விளங்குகின்றார். அவர் பாடிய திருப்புகழ், பக்தர்களின் குறைகளை நீக்கி கோரிக்கைகளை நிறைவேற்றும் மகாமந்திரப் பனுவலாக விளங்குகிறது. ‘வாக்கிற்கு அருணகிரி! வாழ்க்கைக்கு திருப்புகழ்!’ என்றே ஆன்மிக உலகம் பாராட்டி மகிழ்கின்ற திருப்புகழ்ப் பாடல்கள், அற்புதமான தாளக் கட்டும் தத்துவச் செறிவும், அர்த்த புஷ்டியும் நிறைந்தவை! ஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகிய தேவார மூவரின் சிவஸ்தல யாத்திரை போலவே, அருணகிரி நாதரின் குகஸ்தல யாத்திரையும் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றுப் பொலிகின்றது.

‘‘கும்பகோணமொரு ஆரூர்
சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீர்காழி
நின்றிடு
கொன்றை வேணியர்
மாயூரமும்
பெறுசிவகாசி
கொந்துலா வியரா
மேசுரம் தனில்
வந்து பூஜை செய்
நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர்
பரங்கிரி தனில்
வாழ்வே!’’

இவ்வாறாக தரிசித்துப் பாடிய பல தலங்களின் பெயரையும், ஓசை நயம் சிறக்க சந்தம் பொருந்த அவர் பாடும் பாங்கு வியக்கத்தக்க ஒன்றாக விளங்குகின்றது. தாளம் தப்பாமல்பாடுவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். மகாகவி பாரதியார் குயில் பாட்டில் கூறுகிறார்.

“தாளம்! தாளம்! தாளம்!
தாளத்திற்கோர் தவறு உண்டாயின்
கூளம்! கூளம்! கூளம்!’’
சற்றும் பிசகாமல் சந்தம் இசைந்து வர சண்முகனைப் பாடிய அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல்கள் மொத்தம் “பதினாறு ஆயிரம்’’ என்று அருணகிரிநாதரைப் புகழ்ந்து பாடிய தற்சிறப்புப் பாயிரம் மொழிகின்றது.

“அருணகிரிநாதர் பதினாறாயிரம் என்று
உரைசெய் திருப்புகழ் ஓதீர்! – பரகதிக்கு
அஃது ஏணி! அருட்கடலுக்கு ஏற்றம்!
மனத்தளர்ச்சிக்குஆணி! பிறவிக்கு அரம்!’’

‘தீரப்படித்து திருப்புகழ் படி’ என்பது வழக்கத்தில் உள்ள ஒரு தொடர். அனைத்து புத்தகங்களின் சாரமாகவும், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் இணைந்தும், சமயக்குரவர், நால்வரின் பெருமைகள் இணைந்தும், சைவ, வைணவ, சாக்த நெறிகளும், வேதக் கருத்துக்களும் திருப்புகழில் ஒன்றிக் கலந்துள்ளதால் நிரம்ப நூலறிவு கொண்டவர்க்கே திருப்புகழின் சீர்த்தி புலனாகும். அதன் காரணமாகவே பல நூற்பயிற்சி உடையவர்களுக்கே திருப்புகழின் பூரண நுட்பம் புரியும்.

*வேதத்தின் கருத்துக்கள் திருப்புகழில் விவரிக்கப்பட்டுள்ளன.
* உபநிடதத்தின் உள்ளீடு திருப்புகழில் ஊடாடுகின்றது.
* புராணத்தின் சம்பவங்கள் திருப்புகழில் பொருந்தி உள்ளன.
* இதிகாச உண்மைகள் திருப்புகழில் இணைந்துள்ளன.
* பாயிரப் பாடல் ஒன்று கீழ்க்கண்டவாறு உரைக்கிறது.
* “வேதம் வேண்டாம்! சகல வித்தை வேண்டாம்!
* கீத நாதம் வேண்டாம்! ஞானநூல் வேண்டாம்! – ஆதி
* குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்

திருப்புகழைக் கேளீர் தினம்.’’

“பிறக்க முக்தி அளிப்பது திருவாரூர்!
இருக்க முக்தி அளிப்பது சிதம்பரம்!
இறக்க முக்தி அளிப்பது காசி!
நினைக்க முக்தி அளிப்பது
திருவண்ணாமலை!’’

– என்பது பலரும் அறிந்த பக்திச் சொற்றொடர்!

அண்ணாமலையில் அவதரித்தார் அருணகிரிநாதர்.
‘ஞானத் தபோதனரை வா என்று
அழைக்கும்மலை அண்ணாமலை!’
‘அண்ணாமலை தொழுவார் வினை
வழுவாவணம் அறுமே’!
‘ஸ்மரணா அருணாசலே!’

என்றெல்லாம் புகழப்படுகின்ற அண்ணாமலையில் பிறந்த அருணகிரியார், அந்த திரு அருணைக் கோயிலிலேயே திருமுருகனால் ஆட்கொள்ளப்பட்டு உபதேசமும் பெற்றார். முருகப்பெருமான் மலர் வாக்காலே உபதேசம் பெற்றவர்கள் மொத்தம் மூவரே!

“தேவர்களிலே சிறந்த சிவபெருமான்,
முனிவர்களிலே சிறந்த அகத்தியர்,
மனிதர்களிலே சிறந்த அருணகிரிநாதர்’’.
– இச்செய்தியை முருகர் அந்தாதி மொழிகின்றது.

‘‘வேலா! சரணம் சரணம்! என்மேல் இனி
மேலாயினும் கடைக்கண் பார்! பருப்பத
வேந்தன் மகள்
பாலா! குறுமுனியார்க்கும் திருப்புகழ்
பண்ணவர்க்கும்
ஆலாலம் உண்டவர்க்கும் உபதேசிக்க என்
ஆண்டவனே!’’

‘ஓம்’ எனும் மந்திரத்தின் உட்பொருளை சிவபெருமான், அகத்தியரோடு தாமும் பெற்றதை திருப்புகழில் அருணகிரியார் அற்புதச் சொற் பதங்களில் அழகுற பதிவு செய்கிறார்.

‘சிவனார் மனம்குளிர உபதேச மந்திரம்
இரு செவி மீதிலும் பரக்கச்செய் குருநாதர்!’’
‘‘சிவனை நிகர் பொதியவரை
முனிவர் அகம் மகிழ இரு
செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே!’’
‘‘பழைய நினது வழி அடிமையும்
விளங்கும் பழக்கு
இனிது உணர்த்தி அருள்வாயே!’’

கலியுக வரதனாகிய கந்தப் பெருமானைக் கண்ணாரக் கண்டும், காதார பிரணவ ரகசியத்தைக் கேட்டும், மகிழ்ந்த அருணகிரியார், `முத்தைத்தரு’ என ஆறு
முகனே அடியெடுத்துக் கொடுக்க அருவியென திருப்புகழ் பாடினார்.

“முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்தித்திறை சத்திச் சரவண
முத்திக் கொருவித்துக் குருபர என ஓதும்
முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்து மூவர்க்கத் தமரரும் அடிபேண
பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாகப்
பக்தர்க் கிரகத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தருபொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு
நாளே!’’

தமிழ் இலக்கியத்திலேயே தலையான ஓசை நலம் பொருந்திய உன்னதக் கருத்துக்கள் அடங்கிய ஒப்பற்ற பாடலாக அருணகிரியாரின் முதற்பாடலே வரலாறு படைக்கின்றது அல்லவா! அருணகிரியார்க்கு பின்பு இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பாம்பன் அடிகள் ‘ஓசை முனிவர்’ என்றே அருணகிரியார்க்குப் பட்டம் சூட்டுகிறார். அத்துடன், அமையாமல் அவர் எழுதிய எல்லா செய்யுள் நூல்களிலும் முடிவுப் பாடல் ஒவ்வொன்றிலும் அருணகிரி நாதரைப் போற்றிப் பாடாமல் அவர் இருந்ததில்லை. ஆறுமுகப்பெருமானால் ஆட்கொள்ளப் பெற்று, அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, தொனிக்க இனிக்கும் திருப்புகழ் பாடத் தொடங்கிய அருணகிரியார் அனுபூதி நிலையிலேயே அமர்ந்திருந்தார்.

‘‘பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே!’’
‘‘சகலமும் முதலாகிய அறுபதி நிலை
மேவிய தட மயில் தனில் ஏறிய பெருமாளே!’’
– என மொழிகின்றது திருப்புகழ்.

பல தலங்களிலும், படைவீடுகளிலும் எழுந்தருளியுள்ள தன்னை தரிசனம் செய்யாமல், மோன தவத்திலேயே
மூழ்கிவிடலாமா அருணகிரிநாதர்!

‘‘நம் வயலூர்க்குவா’ என
அசரீரியாக ஒலித்தது ஆறுமுகனின் குரல்!

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

The post திருப்பம் தரும் திருப்புகழ் appeared first on Dinakaran.

Tags : Arunagirinathar ,Murugan ,Tirupugaj ,Arunagiri ,
× RELATED திருப்பம் தரும் திருப்புகழ்! 11