ஆறுமுகநேரி: படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் செய்வதாக தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தெற்கு ரத வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (52). தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முத்துராஜ், 10ம் வகுப்பு படித்துவிட்டு தேர்வை எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஆறுமுகம், முத்துராஜிடம் அடிக்கடி தகராறு செய்து வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முத்துராஜ் நேற்று முன்தினம் இரவு ஆத்தூர் போலீசில் புகார் தெரிவிக்க சென்றுள்ளார். அங்கிருந்த போலீஸ்காரர்கள் முனியசாமி(32), முத்துராமலிங்கம் (31) மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேரும் முத்துராஜிடன் வீட்டிற்கு விசாரிக்க சென்றுள்ளனர். அங்கு ஆறுமுகத்தை வெளியே வரும்படி கூறினர்.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து போலீஸ்காரர்களை தகாத வார்த்தைகளால் பேசி முனியசாமி, முத்துராமலிங்கம் ஆகிய இருவரை சரமாரி வெட்டினார்.
இதில் முனியசாமிக்கு தோள் பட்டையிலும் முத்துராமலிங்கத்திற்கு கழுத்தின் பின்புறமும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரையும் காவலர் விக்னேஷ் மற்றும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து ஆத்தூர் போலீசார் விரைந்து சென்று ஆறுமுகத்தை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து எஸ்ஐ செல்வராஜ் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.
The post படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு appeared first on Dinakaran.