அமேதி: உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 8 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் முடிவடைந்து விட்டது. இங்குள்ள அமேதி தொகுதியில் 5ம் கட்டமான மே 20 வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி மே 3ம் தேதி நிறைவடைகிறது. இந்த தொகுதியில் பாஜ வேட்பாளராக ஸ்மிருதி ரானி மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால் இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. இதனிடையே தொழிலதிபரும், காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து “ஸ்மிருதி ரானிக்கு எதிராக நான் போட்டியிட வேண்டும் என அமேதி மக்கள் விரும்புகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அமேதியில்பல்வேறு இடங்களில் ராபர்ட் வதேராவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “அமேதி மக்கள் குரல் தர வேண்டும். இந்த முறை ராபர்ட் வதேரா” என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமேதி பிரிவு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனில் சிங் கூறியதாவது, “இது வாக்காளர்களை குழப்பவும், காங்கிரஸ் குறித்து தவறான செய்தியை பரப்பவும் எதிர்க்கட்சியின் சதி” என்று குற்றம்சாட்டியுள்ளார். அந்த சுவரொட்டிகளை மாவட்ட நிர்வாகம் அகற்றியது.
The post அமேதி தொகுதியில் ராபர்ட் வதேரா போட்டி..? ஆதரவு சுவரொட்டிகளால் பரபரப்பு appeared first on Dinakaran.