புதுடெல்லி: ராஜஸ்தானில் காங்கிரசை விமர்சித்து பிரதமர் மோடி பேசிய வெறுப்பு பேச்சுகள் குறித்த புகார்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் கடந்த ஞாயிறன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று கடந்த 2006ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.
தனிநபர்களின் சொத்துக்கள், நம் பெண்களுக்கு சொந்தமான தங்கம்,பழங்குடியின பெண்களின் வெள்ளி பொருட்கள்,அரசு ஊழியர்களின் நிலம்,பணம் ஆகியவற்றை கண்டறிந்து மறு பங்கீடு செய்ய கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி இப்போது அறிவித்திருக்கிறது. அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்று கொண்ட முஸ்லிம்களுக்கும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் சொத்துக்கள் பகிர்ந்தளிப்பு செய்யப்படும் என காங்கிரஸ் கூறுகிறது என முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாக பேசினார். இவரது வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மத உணர்ச்சிகளை தூண்டி, வெறுப்பு பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்விகளை தவிர்க்க பார்க்கிறார் என மோடி மீது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வந்த நிலையில், இந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் இப்போது விசாரணையை தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
The post மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.