×
Saravana Stores

கத்தாரில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.28 கோடி மதிப்பு கொகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது

சென்னை: கத்தார் நாட்டிலிருந்து ரூ.28 கோடி மதிப்புடைய கொகைன் போதைப் பொருளை கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்த்துறை தனிப்படை அதிகாரிகள் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28) என்ற பயணி, தோகாவிலிருந்து வந்து, மற்றொரு விமானத்தில் டெல்லி செல்வதற்காக டிரான்சிட் பயணியாக விமான நிலையத்திற்குள் அமர்ந்திருந்தார். அவரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த பைக்குள் சுமார் ஒரு கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள், அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து, அவரை தனி அறைக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்தப் பயணி வைத்திருந்தது ஹெராயின் போதைப் பொருள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அதை பரிசோதித்த போது, அது விலை உயர்ந்த கொகைன் போதைப் பொருள் என்று தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.28 கோடி என கூறப்படுகிறது. இந்த இளைஞர் சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post கத்தாரில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.28 கோடி மதிப்பு கொகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Qatar ,Chennai ,Rajasthan ,Central Revenue Intelligence Department ,Chennai airport ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ; ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!!