புதுடெல்லி: மக்களவை 2ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 89 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. அங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் 543 தொகுதிகளில் மக்களவை தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஏப்.19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடந்தது. அதில் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது. 2ம் கட்டமாக 89 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 13 மாநிலங்களில் இந்த தேர்தல் நடக்கிறது.
கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 இடங்களிலும், ராஜஸ்தானில் 13 இடங்களிலும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 8 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 7 இடங்களிலும், அசாம் மற்றும் பீகாரில் தலா 5 இடங்களிலும், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களிலும் மணிப்பூர், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் தலா 1 இடத்திலும் தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி(வயநாடு),சசி தரூர் (திருவனந்தபுரம்), கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் (காங்.), கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி (ஜேடிஎஸ்), ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (திருவனந்தபுரம்), பாஜவின் தேஜஸ்வி சூர்யா (கர்நாடகா), ஹேமமாலினி மற்றும் அருண்கோவில் (இருவரும் உத்தரப் பிரதேசம்) ஆகியோர் முக்கிய வேட்பாளராக உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அங்கு நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* 2ம் கட்ட தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளில் 2019ல், பா.ஜ 56 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 24 இடங்களையும் வென்றது.
* மூன்றாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
* பீகார் ஓட்டுப்பதிவு நேரம் அதிகரிப்பு
வெப்ப அலை காரணமாக பீகார் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள பங்கா, மாதேபுரா, ககாரியா, முங்கர் தொகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெப்ப அலையை பரிசீலித்து சில பூத்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
The post மக்களவை 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை ஓட்டுப்பதிவு appeared first on Dinakaran.