×

மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து

*தெலங்கானாவில் அதிகாலை பரபரப்பு

திருமலை : தெலங்கானாவில் அதிகாலையில் மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் வீட்டின் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தனியார் பேருந்து 30 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் அமலாபுரத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பேருந்து நேற்று அதிகாலை சூர்யாபேட்டை மாவட்டம் முனகல கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டுருந்தபோது திடீரென குறுக்கே எருமை மாடு வந்தது.

அப்போது டிரைவர் அதன் மீது மோதாமல் இருக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பாழடைந்த வீட்டின் மீது மோதியது. அதன் அருகில் இருந்த மினகம்பியும் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மாற்று பேருந்தில் அனைவரையும் அமலாபுரம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து முனகல போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.வீட்டின் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Telangana Tirumala ,Telangana ,Telangana state ,Hyderabad ,Andhra state ,Amalapuram ,
× RELATED தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்