×
Saravana Stores

தைரிய வீரத்திற்கு வீரமாகாளியம்மன்

நாட்டின் நலத்திற்கும், மக்களின் நல்வாழ்விற்கும் இறைவழிபாடு முக்கியமாகிறது. நம் தமிழ்நாட்டில் பல கோயில்கள் உள்ளன. அக்கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புத்தன்மை பெற்று, பக்தர்களை நல்வழிப்படுத்துகின்றன. அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரமாகாளி கோயில் உள்ளது. பெரம்பூர் கிராமத்தின் மேற்கே கிள்ளனூர் கிராமமும், கிழக்கே ஆதனக்கோட்டையும், தெற்கே அண்டகுளம் கிராமமும், வடக்கே வத்தனாக் கோட்டை கிராமமும் அமைந்துள்ளன. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் வனதேவதைத்தெய்வத்தை வணங்கிய பின்புதான் உள்ளே செல்ல வேண்டும். வனதேவதைக்கு மஞ்சள், குங்குமம், அர்ச்சனை நடைபெறுகிறது.

வனதேவதை காலில் கொட்டி இருக்கும் மஞ்சள், குங்குமத்தை பக்தர்கள்தங்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள். வீரமாகாளி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூன்று தேங்காய் உள்ள அர்ச்சனைத் தட்டை வாங்கி வருகின்றனர். ஐயனார் சந்நதிக்கு ஒரு தேங்காயும், வீரமாகாளிக்கு ஒரு தேங்காயும், வீரமாமுனி சாமிக்கு ஒரு தேங்காயும் என்று மூன்று தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன.இக்கோயிலில் உள்ள பூசாரிகள், பக்தர்களின் கையில் உள்ள அர்ச்சனைத் தட்டை வாங்கி அதிலுள்ள தேங்காயை உடைத்து, பூக்களை அம்மனின் திருவாச்சியில் போட்டுவிட்டு சூடம் ஏற்றி, மணி அடித்து அம்மனுக்கு தீப ஆராதனை காட்டி விபூதி பிரசாதம் தருகிறார்கள். இறைவழிபாட்டுக்கு மந்திரம் ஓதுவது இல்லை.

இந்த கோயின் வரலாறைப்பற்றி பார்ப்போம். பல ஆண்டுகளுக்கு முன் செம்முனி என்ற ரத்தம் குடிக்கும் தெய்வம் வசித்து வந்தது. அது குழந்தைகளை வீட்டுக்கு ஒருவர் வீதம் வருடத்திற்கு ஒரு குழந்தையை காவு வாங்கிக்கொண்டு இருந்தது. அதனால் மக்கள் மிகவும் கவலையுடன் இருந்தனர். அது மனமின்றித் தாக்கத் தொடங்கியபோது, கிராமவாசிகளில் ஒருவர் தினமும் உணவாகச் செல்வதாக கிராம மக்கள் செம்முனியுடன் ஒப்பந்தம் செய்தனர். இதற்காக கிராமத்தில் பட்டியல் உருவாக்கப்பட்டது.ஒரு பிள்ளையைப் பெற்ற தாய் ஒருத்தி கணவனை இழந்து தன் குழந்தையை நம்பி வாழ்ந்து வந்தாள். செம்முனிக்கு அந்த வருடம் குழந்தையை பலிகொடுக்கும் முறை வந்தது. அந்தத் தாய் தன் குழந்தையைக் காப்பாற்ற வழி தெரியாமல் மனம் நொந்து பெரம்பூரில் உள்ள வாட்டாருடைய ஐயனார், வளர்த்தாரப்பன் கோயிலுக்கு வந்து என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று அழுதாள். அந்த தெய்வங்கள், அந்த தாயின் நிலைக்கு மனமிரங்கி “அம்மா.. எங்களால் இந்தக் முனியை அடக்க முடியாது. வீரப்பூருக்குச் சென்று வீரமலையில் தவம் செய்து கொண்டிருக்கும் வீரமாமுனியைக் கண்டு முறையிட்டு, அழுதால் உன் குறைதீரும் என்று கூறினார்.
அந்தத் தாய் வீரப்பூர் சென்று வீரமாமுனியிடம் தன் குறையைச் சொல்லி அழுதாள். அதற்குள் குழந்தையை காவு வாங்கும் நாள் வந்துவிட்டது. செம்முனி குழந்தையைத் தேடிச் சென்றது. குழந்தை அழியப்போவதை அறிந்த வீரமாமுனி, விஸ்வரூபம் எடுத்து வீரப்பூர் மலையில் ஒரு காலும், பெரம்பூரில் உள்ள செம்முனியின் தலையில் ஒரு காலும் வைத்தார். செம்முனி பூமிக்குள் அழுந்திவிட்டது. குழந்தை காப்பாற்றப்பட்டது. பெரம்பூர் மக்கள் மனம் மகிழ்ந்து வீரமாமுனியை தங்கள் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மக்களின் வேண்டுதலை ஏற்ற வீரமாமுனி, வருடத்திற்கு ஆறு மரக்கால் நெல்லும், ஒரு ஆட்டுக்கிடாவும் காவு வேண்டும் என்றும், வெள்ளி, திங்கள் கிழமைகளில் எனக்கு உதிரச் சோறு படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. அது தவிர, என்னால் பூமிக்குள் போன முனிக்கு, வருடம் ஒருமுறை இந்த நாளில் சிறுவன் ஒருவனின் தொடையைக் கிழித்து உதிரச் சோறு படைக்க வேண்டும் என்றும், வாரம் இருமுறை கெடா வெட்டிபடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. பெரம்பூர் மக்கள் வீரமாமுனியின் கட்டளைப்படி செய்வதாக ஒப்புக் கொண்டனர். வீரமாமுனி தன்னுடன் வீரமலையில் தவம்செய்த தன் தங்கை வீரமாகாளியை அழைத்து வந்து செம்முனி அழிந்த இடத்தில் நிறுத்தி அருள் தந்துவருகிறது.

பூமிக்குள் இருக்கும் முனியே பில்லி, சூன்யம் இவைகளை நீக்குவதாக மக்கள் நம்புகின்றனர். வீரமாமுனிக்கும், பூமி காளிக்கும் இன்றும் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் கெடாவெட்டி படைக்கின்றார்கள். பாலாபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள் பூமிக்குள் இருக்கும் முனிக்கு செய்கிறார்கள். வீரப்பூர் காளிக்கு பால், பொங்கல், தேங்காய் பழம் போன்றவைகளை வைத்துபடைக்கின்றார்கள்.ஆடிமாதம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், அம்மனுக்கு சிறப்பான அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை ஐந்து நாட்கள் சிறப்பாக திருவிழா நடைபெறுகிறது. இந்நாளில் இவ்வூரில் உள்ள வாட்டாரப்பன், வளத்தாரப்பன் என்ற கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி காவடி, பறவைக் காவடி எடுத்துவந்து, வீரமாகாளி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தினமும் பூமிக்குள் இருக்கும் காளிக்கு பகல் பன்னிரண்டு மணியளவில் உச்சிகால பூஜை நடைபெறுகின்றது.திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் வீரமாமுனிக்கு ஆட்டுக்கிடா வெட்டி காவு கொடுக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு நாள் வீரமாமுனிக்கு தனியாக ஒரு ஆட்டுக் கிடாவெட்டி ஆறு மரக்கால் நெல் வைத்து படையல் போடுகிறார்கள். இக்கோயிலில் நடைபெறுகின்ற கிடா வெட்டுத் திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான கிடாக்கள் பலியிடப்படுகின்றன. விழாவிற்கு முதல் நாளே கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்துவிடுகின்றனர். கிடா வெட்டுக்குப் பிறகு அவர்கள் குடும்பத்துடன் அசைவ உணவை சமைத்து படையலிட்டு உறவினர்களுக்கு வழங்குகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக பிரார்த்தனைச்சீட்டு திருக்கோயில் அலுவலகத்தில் வாங்கி, தங்களது வேண்டுதல்களை அதில் எழுதி அம்பாளின் அருகிலுள்ள சூலத்தில் கட்டி வேண்டிச் செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அம்பாளைத்தரிசித்து தங்களதுகாணிக்கைகளை செலுத்துகின்றனர்.

பெரம்பூர் கோயிலுக்கு பிரார்த்தனை சீட்டுகட்டுபவர் உள்ளூரில் இருப்பவராக இருந்தால் வாரம் இருமுறை என்று மூன்று வாரங்கள் தொடர்ந்து கோயிலுக்கு வந்து படிப்பணம் செலுத்தி வேண்டிக் கொள்ள வேண்டும். தீய சக்திகள் அனைத்தும் கிராமத்திற்குள் நுழைவதை அவள் தடுக்கிறாள் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். நோய்வாய்ப்பட்டவர்களைக் கோயிலுக்குக் கொண்டுவந்தால், குணமாகும் என்றும் நம்புகிறார்கள். கிராமத்தில் ஏதாவது திருடப் பட்டால், இழந்த பொருளின் விலையில் நான்கில் ஒரு பங்கைத் தருவதாகவும், அதை அம்மன் மீட்டுத் தருவதாகவும் வேண்டுகிறார்கள்.பக்கத்து ஊரில் உள்ளவர்களாக இருந்தால், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வந்து படிப்பணம் செலுத்தி வேண்டிக் கொள்ள வேண்டும். மூன்று முறை கோயிலுக்கு வந்தால் நாம் கேட்ட வரம் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எட்டாத தூரத்தில் இருந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூன்று முறை கட்ட வேண்டிய படிப்பணத்தை ஒரு முறையில் கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். மனதில் முழு நம்பிக்கையோடு வேண்டிக் கொள்பவர்களுக்கு நினைத்த காரியம் நடக்கிறது. இக்கோயிலுக்கு வரம் கேட்டு வந்தவர்கள் ஒரு நாளும் ஏமாற்றப்பட்டதில்லை என்று கூறுகின்றனர்.

கோயில் காலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழிபாட்டிற்காக திறந்திருக்கும். வீரமாகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் தாலுக்காவில் பெரம்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை நகரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து செல்ல தஞ்சை – திருச்சி செல்லும் வழியில் செங்கிப்பட்டி என்ற இடத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலும், கந்தர்வக்கோட்டையில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

The post தைரிய வீரத்திற்கு வீரமாகாளியம்மன் appeared first on Dinakaran.

Tags : Veeramakaliyamman ,Tamil Nadu ,Veeramakali temple ,Perambur ,Pudukottai district ,Veeramakaliamman ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...