சென்னை, ஏப்.24: முதல் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் மற்றும் விமான பாதைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கிண்டி கத்திப் பாரா சந்திப்பில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் 2015ம் ஆண்டு முதல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. மெட்ரோ ரயில் பொது போக்குவரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயன்பாட்டில் உள்ளது. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2ம் கட்ட திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வழித்தடத்தின் ஒருபகுதியான கிண்டி கத்திப்பாரா சந்திப்பின் குறுக்கே மெட்ரோ பணிகளை மேற்கொள்வதற்காக ரயில்வே மற்றும் விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது, என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடம் கிண்டி கத்திப்பாரா வழியாக செல்கிறது. இந்த பகுதி ஏற்கனவே உள்ள முதல் கட்ட மெட்ரோ திட்டம், கிண்டி தெற்கு ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் அருகில் உள்ளது. இதனால் விமான நிலையத்தின் விமானப்பாதை மற்றும் முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் கிண்டி வழியாக செல்லும் ரயில் பாதையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளவது சவாலாக உள்ளது. எனவே ரயில்வே பாதுகாப்பு மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஏனென்றால் இப்பகுதி விமான பாதையாக உள்ளதால் உயர் தூண்கள் அமைக்கப்படும் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு தூண்கள் கட்ட கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. குறிப்பாக அனுமதிக்கப்பட்ட உயரத்திற்குள்ளே தூண்கள் கட்டப்பட வேண்டியும் உள்ளது.
இதுபோன்ற ஒரு சில இடங்களில் குறுக்கில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அமைகிறது. ஏற்கனவே உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் பயணிகள் மற்றும் திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பாடக்கூடாது என்பதற்காக இரவு நேரங்களில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, மாதவரம், அண்ணாநகர், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து மடிப்பாக்கம், கீழ்கட்டளை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட நகரத்தின் தெற்குபகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினர்.
The post கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி appeared first on Dinakaran.