பெரம்பூர், ஏப்.24: வியாசர்பாடி கூட்ஸ் ஷெட் ரோடு உட்புறம் உள்ள முட்புதரில் தலையில் பலத்த காயத்துடன் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதாக நேற்று காலை எம்.கே.பி நகர் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்.கே.பி நகர் உதவி கமிஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார், முட்புதரில் சிக்கி கிடந்த அந்த நபரை தூக்கிப் பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது. பீர் பாட்டிலை உடைத்து, அவரது கழுத்தில் குத்தப்பட்டிருந்தது. அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 60வது பிளாக் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் நவீன் குமார் (எ) வாழைப்பழ அப்பு (27) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளாக எம்கேபி நகர் பகுதியில் இல்லாமல் மாத்தூர் அருகே உள்ள எம்எம்டிஏ பகுதியில் வசித்து வந்துள்ளார். 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு மரவேலைகள் செய்யும் இடத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும், திருமணமாகாதவர் என்பதும் தெரிய வந்தது. இவர் மீது எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்பட 6 குற்ற வழக்குகள் உள்ளன என்பதும் தெரிந்தது. மேலும் விசாரணையில், வியாசர்பாடி தேபர் நகர் முதல் தெருவை சேர்ந்த குமரேசன் (38), சத்தியமூர்த்தி நகர் 63வது பிளாக் பகுதியை சேர்ந்த அங்கப்பன் (30), அதே பகுதியை சேர்ந்த தமிமுன் அன்சாரி (32) ஆகியோர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. செங்குன்றம் வடகரை அருகே பதுங்கி இருந்த அவர்களை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட நவீன் குமார், கைது செய்யப்பட்ட மூன்று பேருடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி உள்ளார். அப்போது குமரேசன் என்பவரிடம் அடிக்கடி மது வாங்கி தரும்படி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் பணம் இல்லை என்று கூறினால், உன்னை கொலை செய்து விடுவேன், உனது குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே குமரேசன் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில் மதுபாட்டில்களை வாங்கிய குமரேசன் நண்பர்களான அங்கப்பன் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருடன் சேர்ந்து நவீன் குமாரையும் அழைத்து மது அருந்தியுள்ளார். அப்போது, நவீன் குமாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன், அங்கப்பன் இருவரும் சேர்ந்து பீர்பாட்டிலை எடுத்து உடைத்து நவீன் குமாரை சரமாரியாக கழுத்தில் குத்தி உள்ளனர். தமிமுன் அன்சாரி யாராவது வருகிறார்களா என வேவு பார்த்துள்ளார். கொலை செய்து முடித்த பின்பு மூன்று பேரும் தப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.