கவுகாத்தி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் பிரதமர் மோடி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ராஜஸ்தானில் பேசிய பிரதமர் மோடி, முஸ்லீம் சமூக மக்களை குறிவைத்து வெறுப்பு பேச்சு பேசினார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏராளமான புகார்கள் குவிந்து வருகிறது. ஆனால் எந்தவித நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
இதையடுத்து பிரதமர் மோடி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் தெரிவித்தார். நேற்று அவர் இதுபற்றி கூறியதாவது: தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் மக்களின் முழுமையான நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும். அந்த நம்பிக்கை அசைந்தால் அதை மீட்டெடுக்க அவர்கள் உழைக்க வேண்டும். பிரதமர் மோடி ராஜஸ்தானில் வெறுப்புப் பேச்சுகளை பேசினார்.
எனது சகாக்கள் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளோம். அவர்கள் எங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், சட்டப்பூர்வ தீர்வுகளை நாங்கள் பார்த்து வருகிறோம். இது ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பா.ஜ மீது சிறிய நடவடிக்கையாவது தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். ஒரு நபர் தனது வாக்கு விரும்பிய இடத்திற்கு செல்லவில்லை என்று கூறினாலும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களின் பொறுப்பு. 100 சதவீத விவிபேட் வாக்குகளை எண்ண எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்கவில்லை.
இவ்வாறு கூறினார்.
The post தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் மோடி மீது சட்ட நடவடிக்கை: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.