×
Saravana Stores

24 நாட்களில் 8,465 கி.மீ. பயணம் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் பெரும் வரவேற்பு: திமுக தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து திமுக வெளியிட்ட அறிக்கை: திமுக இளைஞர் அணிச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தான் தனித்தன்மை வாய்ந்த பிரசார நாயகனாக நாட்டிற்கு அடையாளம் காட்டியது. ஊடகங்களின் விவாதங்களிலும் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் பேசும் பொருளாகியது. பிரசாரத்தின்போது கூடியிருந்த மக்கள் பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே, அந்த அமைதியுடன் நின்றபடியே கேட்டு ரசித்தனர்.

கூட்டம் அமைதியாகக் கேட்டு கைதட்டி மகிழ்ந்தது. இறுதி வரை கலையாமல் அவருடைய பேச்சைக் கேட்டது. மற்றொரு முக்கியச் சிறப்பாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு எளிமையான தமிழில் அமைந்திருந்தது. அடுக்கு மொழிகள் இல்லை. ஆனால், அர்த்தம் செறிந்ததாக இருந்தது. மேம்போக்கான பேச்சாக இல்லை. ஆழமான சிந்தனையைத் தருவதாக அமைந்திருந்தது. அதனால் மக்கள் ரசித்தனர். கட்டுக்கோப்புடன் கேட்டு மகிழ்ந்தனர். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு முத்தமிழறிஞர் கலைஞரை நினைவுபடுத்துவதாகவே அமைந்தது. அந்தந்தப் பகுதிகளின் கட்சித் தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைத்து உரிமையுடன் பேசினார்.

தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார். கலைஞரை போலவே, தொண்டர்களுடன் நம் உதயா கலந்துரையாடி மகிழ்கிறார் என்று அவர்களும் பெருமையுடன் பேசிக் கொண்டார்கள். உதயநிதி ஸ்டாலின் 24 நாட்களில், 8,465 கி.மீ. பயணம் செய்து, 38 மாவட்டங்களில், 122 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி 24 நாட்களில், 7,720 கி.மீ. பயணம் செய்து, 33 மாவட்டங்களில், 55 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்துள்ளார்.

பாஜவின் அண்ணாமலை 20 நாட்களில் 3,264 கி.மீ. பயணம் செய்து, 18 மாவட்டங்களில் 25 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, ஒன்றிய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் கட்டாததை அனைவரும் அறியும் வகையில் பொதுமக்களிடம் ஒற்றைச் செங்கல் காண்பித்து, பிரசாரம் செய்த விதம் மையமாக அமைந்தது. பொதுமக்களிடம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த ஒற்றைச் செங்கல் பிரசாரம் அந்தத் தேர்தலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோன்று இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி வசூலாக 1 ரூபாய்க்கு 29 பைசாதான் திருப்பித் தருகிறது என்றும், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதை எடுத்துக்கூறி, இனிமேல் மோடியை மிஸ்டர் 29 பைசா என நாம் அழைக்க வேண்டும்.

நீங்கள் அழைப்பீர்களா? எனப் பொதுமக்களிடம் கேட்டுப் பிரசாரம் செய்தது மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. திராவிட மாடல் அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள், சாதனகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் செய்தது மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இவையெல்லாம் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரத்தில் காணப்பட்ட தனி யுக்திகள். எல்லா வகையிலும் பிரசாரப் பயணத்தை ஒரு வெற்றிப் பயணமாக நிறைவேற்றி மக்கள் மனதில் -பத்திரிகை ஊடகங்களில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றதில் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகும்.

The post 24 நாட்களில் 8,465 கி.மீ. பயணம் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் பெரும் வரவேற்பு: திமுக தகவல் appeared first on Dinakaran.

Tags : Yatra ,Udayanidhi Stalin ,DMK ,Chennai ,Tamil Nadu ,Udhayanidhi Stalin ,DMK Youth Team Secretary ,Youth Welfare and ,Sports Development Department ,
× RELATED நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய...