சென்னை: சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6ம்தேதி இரவு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் ஆசைதம்பி, முருகன், சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பாஜ மாநில தொழில்துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், தாம்பரம் பாஜ நிர்வாகியும், கட்டுமான நிறுவன உரிமையாளருமான ஜெய்சங்கர் ஆகியோரும் பணத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 8 பேரும், ஒரு வாரத்திற்குள் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாள் அவகாசம்கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பி இருந்தார். இதையடுத்துஅவரது ஓட்டல் ஊழியர்கள் ஆசைதம்பி, ஜெய்சங்கர், முருகன் ஆகியோர் தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் நெல்சன், ஆய்வாளர் பால முரளி சுந்தரம் ஆகியோர் முன்ஆஜராகினர். முருகனிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. ஆசைதம்பி, ஜெய்சங்கர் ஆகிய 2 பேரையும் தான் அனுப்பி வைத்ததாகவும், ஆனால் பணம் குறித்து எதுவும் தெரியாது எனவும் அவர் வாக்குமூலத்தை எழுத்து பூர்வமாக எழுதிக்கொடுத்து சென்றுள்ளார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2வது சம்மன் அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
The post ரூ.4 கோடி சிக்கிய வழக்கில் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் 3 பேர் போலீசில் ஆஜர் appeared first on Dinakaran.