- கலாஷேத்திரா கல்லூரி
- சென்னை
- ஆஸ்திரேலியா
- ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி
- கலாசேத்திரா அறக்கட்டளை
- திருவான்மியூர், சென்னை...
சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் படித்தபோது பாலியல் தொந்தரவு செய்ததாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் மாணவி அளித்த புகாரின்படி, முன்னாள் நடன பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி மாணவிகள் பலர் பேராசிரியர் ஹரிபத்மன் மற்றும் உதவி நடன கலைஞர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் என 4 பேர், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு புகார் அளித்தனர்.
இதில் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பிறகு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் மாநில மகளிர் ஆணைய இ-மெயிலில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி கலாஷேத்ரா கல்லூரியில் படித்து தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் முன்னாள் மாணவிகள் பலர் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். பாதிக்கப்பட்ட மாணவி உயர் நீதிமன்றத்திற்கும் புகாரை ஆன்லைன் மூலம் அனுப்பி இருந்தார். அதன்மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி மகளிர் போலீசார் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முன்னாள் மாணவியிடம் காணொலி மூலம் விசாரணை நடத்தினர். அதில் 1995 முதல் 2007 வரை கலாஷேத்ரா பவுண்டேஷனில் பரதநாட்டியம் படித்தபோது, நடன பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா சிறப்பு வகுப்பு என தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
நிர்வாணமாக படங்கள் எடுத்து மிரட்டியும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு பயந்து கல்லூரியை விட்டு விலகி குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். மாணவிகள் போராட்டம் நடத்தியது தெரிந்து, தன்னை 12 ஆண்டுகள் இடைவிடாமல் சீரழித்த பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா மீது உரிய ஆவணங்களுடன் ஆஸ்திரேலியா மாணவி ஆன்லைனில் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் நடன பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா மீது ஐபிசி 376 (பாலியல் பலாத்காரம்) வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் வசித்து வந்த ஸ்ரீஜித் கிருஷ்ணாவை (51) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், ஆஸ்திரேலியா மாணவி யார் என்று தெரியாது என்று கூறியுள்ளார். பிறகு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மாணவி அளித்த ஆதாரங்களை காட்டியதும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவர் பல மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்தள்ளதால், 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 15 ஆண்டுக்கு பின் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் நடன பேராசிரியர் கைது: 5 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு appeared first on Dinakaran.