×
Saravana Stores

கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை

கோவில்பட்டி: கோவில்பட்டியில் இன்று அதிகாலை வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள், தோட்டத்தில் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோவையும் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் மாரிச்செல்வம் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ஊத்துப்பட்டியில் சொந்தமாக நிலம் வாங்கிய இவர், அங்கு தோட்டம் அமைக்க நிலத்தை சுற்றிலும் பென்சிங் போடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக தனது லோடு ஆட்டோவை அங்கேயே நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் மாரிச்செல்வம் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் பைக்குகளில் வந்த மர்மநபர்கள், திடீரென்று அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இவை வீட்டின் சுவர் மீது பட்டு தீப்பற்றி எரிந்தது. மேலும் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கின. அதன்பிறகு அந்த கும்பல் வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரின் லோடு ஆட்டோவை மாரிச்செல்வத்தின் லோடு ஆட்டோ என நினைத்து அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு மாரிச்செல்வம் மற்றும் குடும்பத்தினர் வெளியில் வந்தனர். இதனைப்பார்த்த கும்பல் அதே பைக்குகளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். தொடர்ந்து அவர்கள், ஊத்துப்பட்டி சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாரிச்செல்வத்தின் லோடு ஆட்டோவை தீ வைத்து எரித்தனர். இதில் ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரேசன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், மாரிச்செல்வத்தின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. அதாவது கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் இருந்து விருதுநகருக்கு லோடு ஆட்டோவில் கும்பல் ரேசன் அரிசி கடத்திச் சென்றுள்ளது. அவர்களை விருதுநகரில் வைத்து பறக்கும் படையினர் மடக்கி பிடித்தனர். மாரிச்செல்வம் தான் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும் என நினைத்த அந்த கும்பல், அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதோடு, ஊத்துப்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவையும் தீ வைத்து எரித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிந்து தலைமறைவாக உள்ள கும்பலை தேடி வருகின்றனர். வழக்கறிஞர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Tuticorin District, Kovilpatti Rajiv Nagar 3rd Street ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி நகராட்சி கூட்டம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்