பூந்தமல்லி: டிராக்டரில் குடிநீர் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில், 2 பேரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). இவரது நண்பர் ஜெயக்குமார். இருவரும் சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டிராக்டர் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விற்பனை செய்கின்றனர். சென்னீர்குப்பம் ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கோட்டீஸ்வரி அன்பு உள்ளார். இவரது மருமகன் மணிகண்டன் (35). இவர் அதே பகுதியில் டிராக்டர் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விற்பனை செய்கின்றார்.
இதுதொடர்பாக வெங்கடேசனுக்கும் மணிகண்டனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. நேற்றுமுன்தினம் வெங்கடேசனின் அலுவலகத்துக்கு சென்ற மணிகண்டனின் நண்பர்கள் சிலர்,வெங்கடேசன், ஜெயக்குமார் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயம் அடைந்த அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குபதிவு செய்து பேரை கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.
இந்த சம்பவத்துக்கு காரணமான அதிமுக ஊராட்சி தலைவியின் மருமகன் மணிகண்டனை கைது செய்யக்கோரி வெங்கடேசனின் உறவினர்கள், ஆவடி-சென்னீர்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்து பரபரப்பு நிலவியதால் பூந்தமல்லி போலீசார் சென்று மறியலில் செய்தவர்களை சமாதானப்படுத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிட்டு சென்றனர்.
The post டிராக்டரில் குடிநீர் விற்பனை செய்வதில் தகராறு; 2 பேருக்கு சரமாரி வெட்டு: உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.