×
Saravana Stores

சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!

இவ்வருடம் சித்திரை மாதம், ஏப்ரல் 23ம் தேதி சித்ரா பெளர்ணமி நாள். அடிப்படையில் பார்த்தால் அன்று எமனிடம் கணக்கு எழுதும் சித்திரகுப்தன் பிறந்தநாள். அவனை பூஜித்து, ‘பாவ புண்ணிய கணக்குகளை பார்த்து எழுதுப்பா’ என கோரிக்கை வைக்கும் தினம்தான் சித்ரா பெளர்ணமி. சித்திரகுப்தன் என்பவர் யார்?யமனுடைய உதவியாளர். மேலும் நாம் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிடுபவர்தான் சித்திரகுப்தர். தனக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என எமன் சிவனிடமும் அன்னையிடமும் வேண்டினார். தங்களின் இரு பிள்ளைகளில் ஒருவரை அனுப்ப முடிவு செய்தனர்.

பிள்ளையார் சங்கடங்களை களைபவர். முருகன் முன்ேகாபக்காரர். பிரம்மனிடம் ‘பிரணவத்திற்கு’ பொருள் கேட்டு அவருக்கு விடை தெரியாததால் அவர் தலையில் குட்டியவர். யமனுக்கே சங்கடம் ஏற்படுத்தக்கூடியவர். அதனால் புதிதாக ஒரு மகனை உருவாக்க நினைத்தனர். பொற்பலகையில் சிவன் ஓவியம் வரைய அந்த ஓவியத்தில் உள்ள உருவத்திற்கு தன் மூச்சினை தந்து உயிர் கொடுத்தாள் அன்னை.

உயிர் கொடுத்த அன்னை அவரைப் பார்த்து “சித்திரகுப்தா வெளியே வா…” என அழைத்தார். சித்திரத்திற்கு உயிர் வந்ததுடன், பலகையிலிருந்து வெளிவந்து நடமாடினான் சித்திரகுப்தன். பிறகு தனக்கு உருவம் மற்றும் உயிர் கொடுத்த அம்மை அப்பனை வணங்கினான். “நீயும் எங்கள் மகனே. நீ என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வாய். அத்துடன் யமனுக்கு உதவியாளனாக நீ பணிபுரிய வேண்டும். அனைத்து உலகங்களிலும் உள்ளவர்களை கூர்ந்து கவனித்து, அவர்களின் பாவ புண்ணியங்களை கணக்கிட வேண்டும்” என வாழ்த்தினர்.

அதனால்தான் சித்திரகுப்தனின் உருவ அமைப்பு, வலது கையில் தங்க நிற எழுத்தாணியும், இடது கையில் ஓலைச்சுவடியுடன் இருக்கும். மேலும் தங்களை பூஜிப்பது போலவே இவரையும் மக்கள் வருடத்திற்கு ஒரு நாள், அவரின் பிறந்த நாளன்று பூஜிப்பர் என்று ஆசீர்வதித்தனர். அன்று இரவு இந்தக் கதையினை படித்தால் புண்ணியம் கூடும் என்பது நம்பிக்கை. அன்று பலர் உப்பில்லா விரதம் இருந்து மாலை சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் அல்லது பயத்தம் பருப்பு பாயசம் செய்து நைவேத்யம் செய்து தங்களின் விரதத்தினை முடிப்பர். சித்திரகுப்தனுக்கு நீலாவதி, கர்ணாவதி என இரு மனைவியர். காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் கோயிலில் அவரை கர்ணாவதியுடன் தம்பதி சகிதமாக தரிசிக்கலாம்.

இந்தக் கோயில் மூன்று நிலை கொண்ட கோபுரம் கொண்டது. உள்ளே கர்ப்பகிரகத்தில் சித்திரகுப்தர் அமர்ந்த நிலையில் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஓலைச்சுவடியுடன் காட்சியளிக்கிறார். இந்தக் கோயில் 9ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. 1911ல் கோயில் புதுப்பிக்கப்பட்ட போது பல உற்சவ சிலைகளுடன் சித்திரகுப்தன் அவரின் மனைவி கர்ணாவதியின் உலோக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1994ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அமாவாசையன்று விசேஷ பூஜை நடந்தாலும், சித்ரா பெளர்ணமிதான் கோயிலின் முதன்மை திருவிழாவாகும்.

– ராஜி ராதா, பெங்களூரூ.

The post சித்ரா பெளர்ணமி சிறப்புகள்! appeared first on Dinakaran.

Tags : Chitra Pelarnami ,Chitragupta ,Eman ,
× RELATED கேங்ஸ்டர் பேன்டசி கதையில் ஒரு படம்