வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கண்டமனூர் தடுப்பணை பகுதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கிடைக்கும் மழை நீர் மூல வைகையாக உற்பத்தியாகி, ஆண்டிபட்டி அருகே உள்ள அணையைக் கடந்து வைகை ஆறாக பயணிக்கிறது. வைகை ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வருசநாடு, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை மூல வைகைக்கு நீர் வரத்து இல்லாததால் கடலைக்குண்டு, மயிலாடும்பாறை, கண்டமனூர் பகுதிகளில் தண்ணீர் வரத்து குறைந்து ஓடை போல காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மூல வைகைக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இதனால் ஓடை போல காணப்பட்ட பகுதிகளில் தற்போது நீர் வரத்து அதிகரித்து தண்ணீர் இருகரை தொட்டுச் செல்கிறது. கண்டமனூர் பகுதியிலும் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக தடுப்பணையைக் கடந்து மறுகால் பாய்ந்து செல்கிறது. இதனால் மூல வைகை செல்லும் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மூலவைகையில் தொடர்ச்சியாக நீர் வரத்து அதிகரித்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 869 கன அடி நீர் திறந்துவிடப்பட்டாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53 அடியை நெருங்கியுள்ளது.
The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை மூல வைகையில் அதிகரிக்கும் நீர்வரத்து appeared first on Dinakaran.