சென்னை, ஏப். 23: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அனைத்து காய்கறிகளும் வருகின்றன. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், வரத்து திடீரென்று குறைந்ததாலும் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு கிலோ வெங்காயம் ₹22க்கு விற்கப்படுகிறது. இதேபோல் தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, புடலங்காய், சேமகிழங்கு, பீர்க்கங்காய், கொத்தவரங்காய் ₹40க்கும், பீட்ரூட், அவரைக்காய், முருங்கைக்காய், பச்சைமிளகாய், குடை மிளகாய் ₹50க்கும், பீன்ஸ் ₹160க்கும், எலுமிச்சை ₹120க்கும், பட்டாணி ₹100க்கும், வண்ண குடமிளகாய் ₹90க்கும், சேனைக்கிழங்கு ₹68க்கும், சவ்சவ், முட்டைகோஸ், பாகற்காய் ₹35க்கும், காராமணி, வெள்ளரிக்காய், கோவக்காய் ₹30க்கும், வெண்டைக்காய், கத்தரிக்காய், சுரக்காய், காலிபிளவர், நூக்கல் ₹25க்கும் விற்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘கர்நாடகா மாநிலத்திலிருந்து 70 சதவீத காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகின்றன. வரும் 26ம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அன்று விவசாயிகள் காய்கறிகளை அறுவடை செய்ய மாட்டார்கள். அதனால் 27ம் தேதி மீண்டும் வரத்து குறைந்து காய்கறிகளின் விலை உயர வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ பீன்ஸ் ₹160க்கு விற்பனை appeared first on Dinakaran.