ஊட்டி: நீலகிரி வனகோட்டத்திற்கு உட்பட்ட நடுவட்டம் அருகே வனப்பகுதியில் மர்ம கும்பல் ஒன்று வனவிலங்குகள் வேட்டையாட நுழைந்துள்ளதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 21ம் தேதி அதிகாலை சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பில் வனத்துறையினர் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த பைசல் மற்றும் சாபு ஜேக்கப் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தங்கிருந்த குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டு வாசல்படியின் அருகே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒற்றைக்குழல் துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து ஒற்றை குழல் துப்பாக்கிக்குரிய வெடிக்காத 11 தோட்டாக்கள், 2 வெடித்த தோட்டாக்கள், கத்தி, ரத்தக்கரை படிந்த கோடாரி, நெற்றி டார்ச் லைட், டார்ச் லைட், பர்ஸ் மற்றும் ஒரு ஏர் கன் (காற்று குழல் துப்பாக்கி) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து வனத்துறையினர் விசாரித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் எஸ்டேட் கணக்கர் பரமன் (எ) பரமசிவன் என்பவரையும் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள எஸ்டேட் உரிமையாளர் சஜீவன், சுபைர், ஸ்ரீகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாட முடிவு செய்து எஸ்டேட் உரிமையாளர் சஜீவனுக்கு நெருக்கமான சுபைர் காக்கா என்பவரிடம், பைசல் துப்பாக்கி ஒன்றை கேட்டுள்ளார். அவர் கூடலூர் புளியம்பாறை பகுதியை சேர்ந்த பாபா என்ற குமார் என்பவரிடம் இருந்து கள்ள நாட்டு துப்பாக்கியை வாங்கி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ குமாரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, மூன்று தோட்டாக்களை பைசல் வாங்கி இருக்கிறார். 4 மாதங்களுக்கு முன்பு காபி தோட்டத்தில் சருகுமானை சாபு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி உள்ளார். பத்து தோட்டாக்களையும் பரமசிவம் மூலம் பைசல் வாங்கியுள்ளார். இதனிடையே சாபு ஜேக்கப் பாக்கு தோட்டத்தில் நுழைந்த காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி உள்ளார். பைசலும், சாபுவும் சேர்ந்து கோடாரி, சூரி கத்தி ஆகியவற்றை பயன்படுத்தி காட்டு மாட்டை துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவதற்கு தேவையான கறியை எடுத்துக் கொண்டு உடல் பாகங்களை பிக்கப் வாகனம் மூலம் சுமார் 2 கிமீ.,தொலைவில் புதர் பகுதியில் வீசியுள்ளனர்.
எஸ்டேட் உரிமையாளர் சஜீவன், கணக்கர் பரமன் என்கிற பரமசிவம், ஸ்ரீ குமார் மற்றும் சுபைர் காக்கா ஆகியோரை பிடிக்க தனிப்படையினர் விரைந்தனர். ஆனால் பரமன் மட்டும் பிடிபட்டார். கைது செய்யப்பட்ட பைசல், சாகு ஜேக்கப், பரமன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள சஜீவன், ஸ்ரீகுமார் மற்றும் சுபைர் ஆகியோரை தனிப்படை அமைத்து வனத்துறையினர் தேடி வருகின்றனர். தலைமறைவான எஸ்டேட் உரிமையாளர் சஜீவன், அதிமுக வில் மாநில வர்த்தகர் அணி நிர்வாகியாக உள்ளார். இவர் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக விசாரிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் காட்டுமாடு, சருகுமான் வேட்டையாடிய மூவர் கைது: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் தலைமறைவு; கொடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் appeared first on Dinakaran.