×
Saravana Stores

சித்திரை திருவிழா பாதுகாப்பு: அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு: விஐபி பாஸ் வழங்குவது, அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் கட்டுப்பாடு

மதுரை: சித்திரை திருவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளுடன், விஐபி பாஸ் வழங்குவதில் கட்டுபாடுகள் தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த வக்கீல் மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பு, நடமாடும் மருத்துவ சேவை, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்வதை உறுதி செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’’ என்று கூறியிருந்தனர். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘பாரம்பரிய முறையிலான தோல் பை கைவிசை மூலமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். செயற்கை முறையில் பிரஷர் பம்ப் கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கக் கூடாது. இவ்வாறு செய்தால் உபகரணங்களை பறிமுதல் செய்து அவர்கள் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலர் சாயம் மற்றும் ரசாயனம் கலந்த நீர், பால், தயிர் போன்றவை பீய்ச்சி அடிக்கக் கூடாது. வெறும் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்ச வேண்டும். குழந்தைகள், வயதானவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது. வேண்டுமென்றே தவறான நோக்கில் பெண்கள் மற்றும் கும்பலாக நிற்கும் மக்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள் முன்பதிவு செய்ய தேவையில்லை. அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் போது அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பேட்ஜ் மற்றும் விஐபி பாஸ் என 2,400 பாஸ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலம் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையை தவிர்த்து கூடுதலாக எவரையும் வரையறுக்கப்பட்ட முன் அனுமதி பெறப்பட்ட இடத்திற்குள் அனுமதிக்க கூடாது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும். எந்த ஒரு பக்தருக்கும் காயம் கூட ஏற்படாத வகையிலும் மற்றும் எந்தவொரு புகாருக்கும் இடமளிக்காத விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பொதுவாக ஆழகர் ஆற்றில் நிகழ்ச்சியின் போது வைகை ஆற்றில் விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் விடப்படுகிறது. இனி வரும் காலங்களில் பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும். அழகர் ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சி நிறைவான பிறகு பெருமளவு பக்தர்கள் கூட்டம் கலையும் வரை போலீசார் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். தாழ்வாக செல்லும் மின்கம்ப வயர்கள் சரிசெய்தல், நடமாடும் மருத்துவ முகாம், குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை கண்காணித்து அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும். கடந்த 21ம் தேதி விழா ஏற்பாடுகள் குறித்து நாங்கள் நேரில் ஆய்வு செய்தோம். மாவட்ட நிர்வாகம், போலீஸ், கோயில் நிர்வாகம் ஆகியவை தகுந்த நடவடிக்கைகள் எடுத்திருந்தன. இவை திருப்திகரமாக இருந்தது. பாராட்டுக்கள்’’. இவ்வாறு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்தனர்.

The post சித்திரை திருவிழா பாதுகாப்பு: அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு: விஐபி பாஸ் வழங்குவது, அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Chitrai ,festival ,ICourt branch ,Govt. ,Madurai ,iCourt ,Manikandan ,Sivaganga ,KK Ramesh ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...