நன்றி குங்குமம் தோழி
புகைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் விருது
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். அப்படிப்பட்ட புகைப்படம் எடுக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் சென்னையில் புகைப்பட போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து புகைப்பட கலைஞர்கள் குறிப்பிட்டுள்ள தலைப்பிற்கு ஏற்ப தங்களின் புகைப்படங்களை பதிவு செய்யலாம். சிறந்த புகைப்படங்களுக்கு விருதுண்டு. இந்த விருதினை 2019ம் ஆண்டு முதல் சென்னை போட்டோ பினாலே (CPB) என்ற அமைப்பு நிகழ்த்தி வருகிறது. முழுக்க முழுக்க புகைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் புகைப்பட கலைஞர்களுக்கு விருது அளிப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கான பல திட்டங்களை இயற்றி வருகிறார்கள். அமைப்பின் ஒரு இணை நிறுவனரான சுச்சி கபூர் அமைப்பின் செயல்பாடு மற்றும் விருது குறித்து பகிர்ந்து கொண்டார்.
‘‘என்னையும் சேர்த்து மூன்று பேர் இணைந்து இந்த அமைப்பினை உருவாக்கினோம். நாங்க மூவருமே வெவ்வேறு துறையை சார்ந்த புகைப்பட கலைஞர்கள். கலை சார்ந்த எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் தில்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சென்னையிலும் அதுபோன்ற நிகழ்வினை ஏற்படுத்த விரும்பினோம். மார்கழி மாத கச்சேரியை போல் புகைப்பட திருவிழா அமைக்க வேண்டிதான் இதனை துவங்கினோம். அமைப்பில் விருதுகள் வழங்குவது மட்டுமில்லாமல் புகைப்பட துறை சார்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
பொதுவாக விருதுகள், செய்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறதே தவிர புகைப்பட கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் புகைப்படம் சார்ந்த அமைப்பான CPBல் 2019 முதல் புகைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்க திட்டமிட்டோம். முதல் வருடம் பிரபல ஆங்கில பத்திரிகை, புகைப்பட நிருபர்களுக்காக விருதை ஏற்று நடத்தியது. அதன் பிறகு CPB இதனை நடத்தி வருகிறது. இதன் மூலம் புகைப்பட நிருபர்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற துறை புகைப்பட கலைஞர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்க விரும்பினோம்.
கடந்த வாரம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் செய்தி, காலநிலை சுற்றுச்சூழல், போர்ட்ெரயிட், வைல்ட் லைப், தினசரி வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் குறித்த தலைப்புகளில் விருது வழங்கினோம். இந்த வருடம் செய்தி மற்றும் சுற்றுப்புறச்சூழல் தவிர மற்ற தலைப்புகளை அறிமுகம் செய்ததால் கிட்டத்தட்ட 10 ஆயிரம் புகைப்படங்கள் விருதுக்காக இந்தியா முழுக்க விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இதற்கு நாங்க எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.
தலைப்பிற்கு ஏற்ப பத்து சிறந்த புகைப்படங்களுக்கு விருது வழங்கினோம். பொதுவாக விருது குறித்து டியர் 2 மற்றும் 3 நகர புகைப்பட கலைஞர்களுக்கு தெரிவதில்லை. அதனால் நான் அந்த இடங்களுக்கு சென்று அங்குள்ள புகைப்பட கலைஞர்களுக்கு விருது குறித்து தெரிவித்தேன். விளைவு 10 ஆயிரம் விண்ணப்பங்கள். வரும் ஆண்டுகளில் மேலும் பல தலைப்புகளில் அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மாதம் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு மார்ச் மாதம் விருது வழங்கப்படும். அதற்கான செய்தி எங்க இணையத்தில் வெளிவரும்’’ என்றார் சுச்சி கபூர்.
அகிலன் தியாகராஜன், போர்ட்ரெயிட் புகைப்பட கலைஞர்
‘‘ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு புகைப்படம் எடுப்பதில் தனிப்பட்ட ஆர்வம் அதிகம். குறிப்பாக மக்கள் மற்றும் செல்லப்பிராணிகள். CPBயில் எனக்கு விருது பெற்றுத் தந்த புகைப்படம் இருவரின் உள்ளத்தில் உள்ள காதலை வெளிப்படுத்தக்கூடிய படம். சென்னை மெரினாகடற்கரையில் மாசிமகம் திருவிழாவின் போதுதான் இந்த புதுமண தம்பதியினரை சந்தித்தேன். இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் மாசிமக திருவிழாவிற்காக வந்திருந்தனர்.
அவர்கள் முகத்தில் கொப்பளித்த வெட்கம்… நாணம் பார்க்கவே அழகாக இருந்தது. அவர்களை புகைப்படம் எடுக்க விரும்புவதாக சொன்ன போது, அடுத்த நிமிடம் கணவன் பீச் மணலில் மண்டியிட்டு தன் காதலை மனைவியிடம் வெளிப்படுத்தினான். அவளும் அதனை வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ள. இருவரின் சந்தோஷ தருணத்தைதான் நான் என் கேமராவில் பதிவு செய்தேன். அதற்கு எனக்கு விருது கிடைத்துள்ளது. இந்தியா முழுக்க பயணித்து அங்குள்ள மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தையும் படம் பிடிக்க விரும்புகிறேன். ’’
சின்கி சுக்லா, ஆவணப் புகைப்பட கலைஞர்
‘‘நான் தில்லி பொண்ணு. என்னுடைய புகைப்பட பயணம் 2007ல் துவங்கியது. இந்தியாவில் அணு ஆயுத சோதனை செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அணுக் கதிர்வீச்சினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடந்த 12 வருடமாக புகைப்படங்கள் மூலம் ஆவணம் செய்து வருகிறேன். முதல் பிராஜக்ட் ஜார்கண்டில் உள்ள ஜாதுகாடா பகுதியில் உள்ள யுரேனியம் சுரங்கம் மற்றும் அணுக் கதிர்வீச்சு குறித்து செய்தேன்.
அங்கு வசிக்கும் பழங்குடியினர், இதனால் உடல் ரீதியாக என்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை புகைப்படங்கள் மூலம் ஆவணம் செய்தேன். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில், போக்கிரான் அணு சோதனை செய்யப்பட்ட இடங்களை படம் பிடித்தேன். அணு சோதனை செய்யப்பட்டதால், அங்குள்ள மக்கள் இன்றும் ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்கிறார்கள். போக்கிரான் சோதனைக் குறித்து நான் எடுத்த ஒரு புகைப்படத்திற்கு தான் இந்தாண்டு CPBயின் இமாமி ஆர்ட் ரீஜினல் தலைப்பில் விருது கிடைத்தது.
நாட்டின் அணு வளத்திற்காக பல சோதனைகளை செய்கிறோம். முதல் அணு சோதனை 1974லும், இரண்டாவது 1998லும், தற்போது 25 வருடங்களுக்கு முன்புகூட அணு சோதனை நடைபெற்றுள்ளது. அதன் தாக்கம் இன்று வரை அந்தப் பகுதி மக்களை பாதித்து வருகிறது. இங்குள்ள மக்கள் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளது. அதை என் புகைப்படம் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறேன். நான் இது குறித்து ஆவணம் செய்யப்போகிறேன் என்று வீட்டில் சொன்ன போது அவங்க ரொம்பவே பயந்தாங்க.
பல ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட அணு சோதனையின் தாக்கம் இன்றும் அங்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிப்பு எனக்கும் ஏற்படும் என்று பயந்தாங்க. நான் பிடிவாதமாக இருந்ததால், அனுமதி கொடுத்தாங்க. இங்குள்ள மக்கள் புற்றுநோய், செரிபிரல் பால்சி, ஜெனிடிக் மியுடேஷன் மற்றும் இதர உயிர் கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு முதல் நான் இது குறித்து புகைப்படம் எடுத்து வருகிறேன். அங்கு வசிக்கும் மக்களில் ஒரு சிலர் தேசப்பற்று காரணமாக நாட்டின் எதிர்கால வளத்திற்காக நாங்க உயிரைக் கொடுக்க தயார் என்கிறார்கள். அதே சமயம் தங்கள் கண் முன் நடைப்பிணமாக இருக்கும் தங்களின் குழந்தைகளின் நிலையைப் பார்த்து இது போன்ற சோதனை அவசியமற்றது என்று சிலர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.
CPB, நான்கு வருடங்களாக சிறந்த புகைப்படங்களுக்கு விருது அளித்து வருவது குறித்து கேள்விப்பட்டேன். இது எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு சிறந்த பிளாட்பார்ம். எனக்கு விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக பங்குபெறவில்லை. அணு சோதனையால் பாதிப்படைந்த மக்களின் நிலை குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் கலந்து கொண்டேன். இவர்களை குறித்து போட்டோ புத்தகம் ஒன்றை வெளியிட இருக்கிறேன். இதுபோல் அணு சோதனை மற்றும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளையும் ஆவணம் செய்ய இருக்கிறேன்.’’
நிதின் ஜெயின், இயற்கை மற்றும் வனவிலங்கு புகைப்பட கலைஞர்
‘‘12 வருடமா கேமராவுடன் பயணிக்கிறேன். எனக்கு இயற்கை மற்றும் வைல்ட்லைஃப் மேல் ஈடுபாடு அதிகம் என்பதால் இந்தியா மட்டுமில்லாமல் ஆப்ரிக்காவிற்கும் பயணித்து இருக்கிறேன். எனக்கு பறவைகளை படம் பிடிப்பதில் அதிக ஈடுபாடு உண்டு. அவர்களின் குணாதிசயங்ளை நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். பொதுவாக இயற்கை மற்றும் வனவிலங்கு குறித்து புகைப்படம் எடுக்கும் போது நம்முடைய ேகமராவைப் பற்றியும் வனவிலங்கு மற்றும் பறவைகள் குறித்து நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். பறவைகள் மற்றும் விலங்குகள் எந்த நேரத்தில் எப்படி ரியாக்ட் செய்யும் என்று கணிக்க முடியாது. அதை மறுபடியும் போஸ் கொடுக்க சொல்ல முடியாது.
எனக்கு விருது பெற்றுத் தந்திருக்கும் புகைப்படம் ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரியில் எடுக்கப்பட்டது. நான் ஒரு போட்டில் கேமராவை கையில் பிடித்தபடி காத்திருந்தேன். அந்த சமயத்தில் ஐபிஸ் பறவை தவளையை வேட்டையாட, அதை பறிக்க முயன்றது பருந்து ஒன்று. பருந்து தானாக இறையை வேட்டையாடாது. மற்ற பறவை வேட்டையாடுவதை இது பறித்துக் கொள்ளும். அதை என் கேமராவில் பதிவு செய்தேன். அதற்குதான் எனக்கு இயற்கை மற்றும் வனவிலங்கு தலைப்பில் விருது கிடைத்தது.
CPB விருது குறித்து கேள்விப்பட்டு விண்ணப்பித்தேன். எனக்கு புகைப்படம் எடுப்பது பொழுதுபோக்கு. அடிப்படையில் நான் கிராபிக் டிசைனராக வேலை பார்க்கிறேன். இயற்கை மற்றும் வைல்டுகலையை தேர்வு செய்ய காரணம் நான் கல்லூரி படிக்கும் போது போட்டோகிராபி படித்து இருக்கேன். அப்போது என்னிடம் இருந்த சின்ன கேமராவால் பறவைகளை படம் பிடித்தேன். அதை விரும்பிய கோணத்தில் படம் பிடிக்க த்ரிலிங்காக இருந்தது. அதனாலே எனக்கு இயற்கை மற்றும் வனவிலங்குகளை புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜஸ்தானில் உள்ள பரக்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், வியட்நாம், நமீபியா மற்றும் மலேசியா போன்ற இடங்களுக்கு சென்று அங்குள்ள பறவைகளை படம் பிடிக்க வேண்டும்.’’
தொகுப்பு: ப்ரியா
The post சென்னை போட்டோ பினாலே! appeared first on Dinakaran.