புதுடெல்லி: முஸ்லீம்களை இழிவுபடுத்தும் வகையில் மோடி பேசியதற்கு, ராகுல், கார்கே, ஒவைசி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி:
‘நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. தனிநபர்களின் சொத்துக்கள், நம் பெண்களுக்கு சொந்தமான தங்கம், பழங்குடியின குடும்பங்களுக்குச் சொந்தமான வெள்ளி, அரசு ஊழியர்களின் நிலம் மற்றும் பணம் ஆகியவற்றைக் கண்டறிந்து மறுபங்கீடு செய்ய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. தேசத்தின் வளங்கள் மீது முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று கடந்த 2006ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.
அதாவது அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்டவர்களுக்கும் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறுகிறது. இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?’ என்ற அடிப்படையில் முஸ்லீம்களை இழிவுபடுத்தும் வகையில் மோடி பேசினார். இவரது வெறுப்பு பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஐதராபாத் எம்பி ஒவைசி வெளியிட்ட பதிவில், ‘முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், பல குழந்தைகளை கொண்டவர்கள் என்றும் மோடி கூறியுள்ளார். கடந்த 2002 முதல் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வாக்குகளைப் பெறுவது மட்டுமே மோடி உத்தரவாதமாக உள்ளது.
மோடியின் ஆட்சியில் நாட்டின் செல்வம் யாவும், அவரது பணக்கார நண்பர்களுக்கு செல்கிறது. 1% இந்தியர்கள் தான் நாட்டின் செல்வத்தில் 40% வைத்துள்ளனர்’ என்று குற்றம்சாட்டினார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், ‘இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த பிரதமரும் தங்களது பதவியின் கண்ணியத்தை குறைத்து பேசியதில்லை. தற்ேபாது மோடி பேசிய பேச்சானது, அவரது அவநம்பிக்கை வெளிப்படுத்துகிறது. வெறுப்பு கருத்துகளை விதைத்துள்ளார். வாக்காளர்களின் கவனத்தை திசை திருப்பும் திட்டமிட்ட தந்திரமாகும். அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பற்காக பொய் சொல்வது, எதிரிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது என்பது பாஜகவின் கொள்கையாக உள்ளது’ என்றார். மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘மோடியின் பொய்களின் அளவு தரம்தாழ்ந்துவிட்டது. பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப விரும்புகிறார். காங்கிரசின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது’ என்றார்.
The post முஸ்லீம்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய விவகாரம்; மோடி அளவுக்கு தரம் தாழ்ந்து எந்த பிரதமரும் பேசியதில்லை: ராகுல், கார்கே, ஒவைசி உள்ளிட்டோர் கண்டனம் appeared first on Dinakaran.