சென்னை: வழக்கின் அசல் ஆவணங்களை பெறுவதற்காக புழல் சிறையில் இருந்து அழைத்து செல்லப்பட்ட செந்தில்பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்:
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த முறை வழக்கு விசாரணையின்போது வங்கியின் அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை சமர்ப்பித்த வங்கி ஆவணங்களுக்கும் வேறுபாடு உள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, அசல் ஆவணங்களை வழங்க நீதிமன்றம் தயாராக உள்ளதாக கூறியிருந்தார். மேலும், ஏப்.22-ல் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
செந்தில்பாலாஜி ஜாமின் மனுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதுவரை 33 முறை அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நீட்டிப்புக்கும் காணொலி காட்சி மூலம் மட்டுமே அவர் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
செந்தில் பாலாஜியிடம் அசல் ஆவண நகல் ஒப்படைப்பு:
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களின் நகல் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆவணங்களை பெற்றுக் கொண்டு செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். அசல் ஆவணங்களின் நகல் எடுக்கப்பட்டு நீதிமன்ற முத்திரையுடன் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் காவல் ஏப்.25 வரை நீட்டிப்பு:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்.25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். ஏப்.25ம் தேதி காணொலி மூலம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் முடியும் ஏப்ரல் 25ம் தேதி காணொலியில் ஆஜராகும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
விடுவிக்க கோரிய மனு – ஓரிரு நாளில் வாதம்:
விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் ஓரிரு நாட்களில் வாதங்களை துவங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 25ம் தேதி வாதங்கள் முன்வைக்கப்படும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.25 வரை 34வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
The post சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கியின் அசல் ஆவணங்களின் நகல் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைப்பு; ஏப்.25 வரை காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.