பல்லடம், ஏப்.21: அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் ஒட்டல்களில் உணவு பொருட்கள் இருமடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்லடம் அறிவொளி நகரில் வசிக்கும் ராஜசேகர் கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்திற்கு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 7ம் தேதி அரசு பேருந்து மூலம் பல்லடத்தில் இருந்து திருநெல்வேலி சென்றேன். தாராபுரம்- ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் ஒட்டல் ஒன்றில் பேருந்து நின்றது.
அங்கு இட்லி ஒன்று ரூ.15, தோசை ரூ.40, வாழைப்பழம் ரூ.15 என அனைத்து உணவு பொருட்களும் இருமடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்பட்டன. இது குறித்து ஒட்டல் உரிமையாளரிடம் கேட்டதற்கு இந்த விலைக்கு தான் விற்க முடியும். தேவையென்றால் சாப்பிடுங்கள். இல்லையெனில் திரும்பிச் செல்லுங்கள். வியாபார நேரத்தில் இங்கு சட்டம் பேச வேண்டாம் என்றார்.
திருப்பூர், மதுரை, திண்டுக்கல், கோவை அரசு போக்குவரத்து கழக தலைமை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் லஞ்சமாக தண்டம் கட்ட வேண்டிய நிலை உள்ளது. இது தவிர அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு லஞ்சமாக தண்டம் செலுத்துகிறோம். இந்த விலைக்கு விற்றால் தான் ஓட்டல் நடத்த முடியும். நீங்கள் எங்கு புகார் கொடுத்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று ஓட்டல் உரிமையாளர் கூறினார். ஆகவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
The post அரசு பேருந்துகள் நிறுத்தும் ஓட்டல்களில் உணவு பொருட்கள் இருமடங்கு விலை appeared first on Dinakaran.