×
Saravana Stores

வாழைத்தோட்டம், பாக்கு மரங்களை சூறையாடிய காட்டு யானை கூட்டம்

 

கூடலூர், ஏப்.21: கூடலூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருதால் வனவிலங்குகள் உணவு தேடி, தேயிலை மற்றும் வாழைத்தோட்டம், குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. இதனால் மனித-விலங்கு மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனத்தை விட்டு வெளியேறிய நான்கு காட்டு யானைகள் கூடலூரை அடுத்துள்ள ஏழுமுறம் பகுதியில் வசிக்கும் ஜேக்கப் ஜோஸ் என்பவரது விவசாய நிலத்தில் புகுந்து சுமார் 600க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

அறுவடைக்கு சுமார் ஒரு மாதம் உள்ள நிலையில் குலை தள்ளி இருந்த நேந்திரன் வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அருகில் இருந்த மற்றொரு தோட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களையும் சேதப்படுத்தி உள்ளன. தொடர்ந்து இரவில் மொளபள்ளி, குனில் வயல் பகுதிக்கு சென்ற காட்டு யானைகள் அங்கு வசிக்கும் ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் என்பவரது வீட்டின் முன்பிருந்த பாக்கு மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் விரட்டினாலும் இரவு நேரத்தில் அவை மீண்டும் ஊருக்குள் வந்து விடுவதாகவும் கவலை தெரிவித்துள்ள விவசாயிகள் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ பகுதிக்கு வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் சென்று பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்துள்ளனர்.

The post வாழைத்தோட்டம், பாக்கு மரங்களை சூறையாடிய காட்டு யானை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,
× RELATED கடலூரில் அருந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி நாய்கள் பலி...