பல்லாவரம்: பல்லாவரம் அருகே மதுபோதை தகராறில், டிரைவருக்கு மதுபாட்டில் குத்து விழுந்தது.
பல்லாவரம் அருகே அனகாபுத்தூர், காமராஜபுரம், திருநீர்மலை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (26). இவர், அதே பகுதியில் ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் டிரைவர் செல்வம் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, அனிஸ்டன் என்பவருடன் செல்வம் பேசியுள்ளார்.
அதற்கு மற்ற நண்பர்கள், ‘நாங்கள் இருக்கும்போது, நீ எப்படி பேசலாம்’ என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமான நண்பர்கள், காலி மதுபாட்டில்களை உடைத்து, டிரைவர் செல்வத்தை சரமாரி குத்தியுள்ளனர். இதில் அவருக்கு தலை, முதுகு, காது ஆகிய இடங்களில் சரமாரி குத்து விழுந்ததில் அலறியபடி மயங்கி விழுந்துள்ளார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். மதுபோதையில் இருந்த நண்பர்கள் தப்பியோடி விட்டனர்.
படுகாயம் அடைந்த டிரைவர் செல்வத்தை மீட்டு, குரோம்பேட்டையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, தலைமறைவான செல்வத்தின் நண்பர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு: டிரைவருக்கு பாட்டில் குத்து; நண்பர்களுக்கு வலை வீச்சு appeared first on Dinakaran.