×
Saravana Stores

வாழ்வு சிறக்க மூன்று வழிகள்

உலகிலேயே மனித தேகம் மிகவும் உயர்வானது. மற்ற உயிர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பெரும்வரம், மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதுவே மனித தேகமாகும். மற்ற உயிர்களுக்கும் தேகமிருந்தாலும் அவற்றால் அதைவைத்துப் பக்தி செலுத்தவோ தானம் செய்யவோ அல்லது தவம் செய்யவோ இயலாது.

ஆனால், மனித தேகத்தால் இயலும். ஆகவே, இத்தேகத்தை முறையே பயன்படுத்தி வாழ்வை வளமுடையதாக ஆக்கிச் சிறக்கவேண்டும். அதாவது மரணமிலாப் பெருவாழ்வை நோக்கிப்
பயணிப்பதாகும்.இத்தகு வாழ்வைச் சிறப்புடையதாக ஆக்கு வதற்கு வள்ளல்பெருமான் முப்பெரும் வழிகளைக் காட்டியுள்ளார். அதன்வழி நடந்தால் நம் வாழ்வு சிறக்கும் என்பது திண்ணம். மூன்று வழிகளாவன,

1.பக்தி
2.தவம்
3.தானம்
இந்த மூன்று வழிகளையும் முறையே பின்பற்ற வேண்டும்.

பக்தி

பக்தி என்றால் வேண்டுதல் பட்டியலில் ஒன்றுவிடாமல் நம் எல்லாத் தேவைகளையும் நிரப்பி, அந்த வேண்டுதலை இறைவனிடம் ஒப்படைப்பதோ அல்லது நம் பெயர், நட்சத்திரம், இராசி முதலானவற்றை எழுதிக்கொடுத்து அர்ச்சகரிடம் அர்ச்சனை செய்யச் சொல்வதோ அன்று.மாறாக, ஆண்டவனை இடைவிடாமல் துதிப்பது ஆகும். இன்று பலரும் கிழமைக்கு ஒரு கடவுள் என்றும் இராகு காலம் மற்றும் எமகண்டத்திற்கு ஒரு கடவுளென்றும் கட்சி மாறி பக்தி செலுத்துகின்றனர். மரத்திற்கு மரம் தாவும் குரங்கைப்போலச் செலுத்தும் இதற்குப் பக்தி என்று பெயரல்ல.

கணவன் தன் மனைவி மீது மட்டுமே காதல் கொள்ளும் கண்ணியத்தைப் போன்று ஒரே கடவுளின் (அருட்பெருஞ்சோதி ஆண்டவர்) மீது பக்தி செலுத்தவேண்டும். அதுவும் இடைவிடாமல் தொடர்ந்து அடர்ந்த பக்தி செலுத்தவேண்டும்.அண்மையில், சாதம் வடிக்கலாம் என்று சட்டியை வாங்கிய என்னிடம், “டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் நீர் வைத்து, அரைமணிநேரம் வேகவைக்க வேண்டும்” என்று சொன்னார் கடைக்காரர். நானும் அவர் சொன்னபடி அரிசியும் நீரும் வைத்து கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு சரியாகப் பதினொரு மணிக்கு உலை வைத்தேன். என் நண்பன் வந்தான் என்பதற்காகச் சட்டியை 11.10க்கு இறக்கிவிட்டு காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு மீண்டும் 11.20க்குச் சட்டியை அடுப்பில் வைத்தேன்.

மறுபடி வேறொரு நண்பர் வந்தார் என்பதற்காக 11.30க்குச் சட்டியை இறக்கி காஃபி போட்டு விட்டு மீண்டும் 11.40க்குச் சட்டியை அடுப்பில் வைத்து, முதல் 10 நிமிடம், இரண்டாவது பத்து நிமிடம், இப்போது பத்து நிமிடம் ஆக மொத்தம் அரைமணி நேரம் ஆகிவிட்டது என்று 11.50க்கு இறக்கிப் பார்த்தால் சட்டியில் அரிசி அரிசியாகவே இருக்கிறதே தவிர, அன்னமாக வேகவில்லை. கடைக்காரர் சொன்னபடி அரைமணிநேரம் வெந்தும் சாதம் தயாராகவில்லை. காரணம் அரிசி தொடர்ந்து வேகவில்லை. ஒரு அரிசியே அரைமணிநேரம் இடைவிடாமல் வெந்தால்தான் சோறாகும் எனில் இந்த பாவப்பட்ட மனிதர்களாகிய நாம் இடைவிடாமல் இறைவன்மீது பக்தி செலுத்தினால்தான் வாழ்வு வளமாகும்.

தனி நபர்களின் பெயரால் அர்ச்சனை செய்யவேண்டாம் என்று முன்பு கண்டோம். அதற்கு மாறாக, இறைவனைப் போற்றிப் புகழவேண்டும். அப்படிப் புகழும்போது பெருமானார் அருளிய ஆறு திருமுறைகளை மனம், மொழி, மெய் ஒன்றப் பாடவேண்டும். பாட இயலாதோர் “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” என்ற மகா மந்திரத்தையாவது நாவார மனதாரச் சொல்லவேண்டும்.ஆண்டவனை முழுவதுமாகப் புகழ்ந்தாலே போதும். பிறரைப் புகழ்ந்து அடிபணிய வேண்டிய அவசியமில்லை. ஆண்டவனைப் புகழ்வதற்கும் அற்பமான மானிடப் பிறவியில் உள்ள அடுத்தவர்களைப் புகழ்வதற்கும் வேறுபாடு உண்டு.

*அடுத்தவரைப் புகழ்வது என்பது சுயநலத்திற்காக;

* ஆண்டவனைப் புகழ்வது என்பது பொதுநலத்திற்காக.

*வள்ளல்பெருமான் ஆண்டவனைப் புகழ்ந்து பாடும்போது பொதுநலத்திற்காகவேதான் பாடினார்.

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்
புரிதல் வேண்டும்ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்”
போன்ற பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.“யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்”
என்றார் திருமூலர்,
“எல்லாவுயிர்களும் இன்புற்றிருக்க –
நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே”

– என்றார் தாயுமானவர். இப்படி ஞானியர்களின் புகழ்ச்சியெல்லாம் ஞாலம் நலம் பெறவேண்டும் என்பதற்காகவே அமைந்தது.

இப்படி ஆண்டவனை மட்டுமே புகழ்வது, அதாவது பொதுநலனுக்காகப் புகழ்வது என்ற நிலை வந்துவிட்டால் அங்கு தன்னலம் என்பது தரைமட்டமாகிவிடுகிறது. ஆண்டவன்தான்
நமக்குப் புகலிடம் என்ற புரிதல் ஏற்படும். அப்போது ஆண்டவனின் அடியில் நம் முடியை வைத்து சரணாகதி அடைவோம். வள்ளற்பெருமான் அப்படித்தான் சரணாகதி அடைந்தார். அதனை,

“இப்பாரில் உடல்ஆவி பொருளும் உன்பால் கொடுத்தேன்
மற்று எனக்கென்று இங்கே
எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை”
என்று பதிவு செய்துள்ளார்.

இத்தகு சரணாகதிக்குப்பின் நாம் ஒன்றுமேயில்லை; நாயகன்தான் அனைத்தும் என்று தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் பக்குவம் ஏற்படும். அதனால்தான் வள்ளல்பெருமான், ‘இவ்வுலகில் இறைவன் ஒருவரே ஆண்; மற்ற நாம் அனைவரும் பெண்’ என்ற கருத்தில் தன்னைத் தாழ்த்திக்கொண்டு பெண்களைப் போன்று இருக்க வேண்டும் எனத் தன் தலையைத் துணியால் மூடிக்கொண்டார்.

பாடும்போதுகூட பல இடங்களில் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டே பாடினார். தன்னைத் தாழ்த்தும்போதுகூட நாயைவிடவும், ஈயைவிடவும் சிறியவன் என்றார்.

“நாயிற் கடையேன்; ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி”

என்று நம் மலத்தில் உட்கார்ந்து உண்ணும் ஈயையும், தன் மலத்தைத் தானே உண்ணும் நாயைவிடத் தான் சிறியவன் என்று தாழ்த்திக்கொண்டார். இப்படி நான் ஒன்றுமே இல்லையென்று காலியான பாத்திரமாக நாம் மாறினால்தான் நம்முடைய பாத்திரத்தில் இறைவனின் கருணை என்ற நீர் கிடைக்கும். இதற்குப் பக்தி இன்றியமையாதது.

தவம்

பக்தி செலுத்த வேண்டும் என்று முன்பு கண்டோம். சரி, பக்தியை எந்தக் கடவுள்மீது செலுத்துவது என்ற தெளிவு ஏற்படவேண்டும். ஏனெனில் எல்லாத் தெய்வங்களும் ஏற்புடையன அல்ல. அதாவது சிறுதெய்வங்கள்.அச்சிறுதெய்வ வழிபாட்டை முற்றிலுமாகச் சாடியவர் வள்ளற்பெருமான் அவர். காரணம் அங்கு ஆண்டவனின் பெயரால் பலிகொடுக்கப்படுகிறது. கோயில் கொலைக்களம் ஆகிறது.‘எனக்குப் பலி கொடுக்கவேண்டும்; அப்படிக் கொடுத்தால்தான் நான் காப்பாற்றுவேன்’ என்ற கொள்கையில் ஒரு தெய்வம் இருக்க முடியுமா? அல்லது கைம்மாறு கருதிக் கொண்டிருப்பதை நாம் ‘கடவுள்’ என்று எப்படி அங்கீகரிக்க முடியும்? இத்தகு பலியிடுதல் என்பது ஏமாற்றுவேலை. தான் உண்ணவேண்டும் என்று உயிர்களைக் கொல்வது.அப்படி பலிகொடுக்கும்போது அங்கேயே முழுப்பிணத்தையும் (வெட்டப்பட்ட மிருகத்தின் சடலம்) போட்டுவிட்டு வராமல், எடுத்து வந்து அப்பிணத்தைச் சுட்டு, தன் வயிற்றையும் சுடுகாடு ஆக்குகிறார்கள். இது சிறுதெய்வ வழிபாட்டால் நடைபெறுவதால் பெருமானார் இதைத் தவிர்த்தார். ஆகவே, யார் கடவுள் என்ற தெளிவு ஏற்பட ‘தவம்’ மேற்கொள்ள வேண்டும். தவம் செய்வதற்கு நேரமில்லை என்று சொல்லும் நமக்குத் தவறு செய்ய நேரமுண்டு. ஆகவே, தவம் என்ற வழியின்மூலம்தான் பரம்பொருள் யாரென்று அடையாளம் காணமுடியும்.அதன்மூலம்தான் பிற சமயக் கடவுளர்களும் நம் பரம்பொருளின் கிளைகள் என்று அனை வரையும் ஏற்கும் சமரசம் மனத்தில் தோன்றும். வள்ளல்பெருமான் அப்படி சமரசப்பட்டு,

“பெருகிய பேரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகை என்கணவர் திருப்பெயர் புகல்
என்கிறாய்
அருகர் புத்தர் ஆதியென்பேன்; அயன்
என்பேன் நாராயணன்
என்பேன் அரண் என்பேன்; ஆதிசிவன்
என்பேன்”
என்று பாடியிருக்கிறார்.

இதற்கு அடித்தளம் தவம்தான்; இந்தத் தவமாகிய பயிரை விளைவிக்க நாம் 4 வகை உழுதல்களைச் செய்தல் அவசியமாகும். அவைதான் நான்கு வகை ஒழுக்கங்கள். அவையாவன,

1.இந்திரிய ஒழுக்கம்
2.கரண ஒழுக்கம்
3.ஜீவ ஒழுக்கம்
4.ஆன்ம ஒழுக்கம்

இந்த ஒழுக்கங்கள் முறையே ஐம்புலன்களை நெறிப்படுத்துவது, மனத்தை நெறிப்படுத்துவது, பிற மனிதர்களுக்காக இரங்குவது, அனைத்து உயிர்களுக்காகவும் இரங்குவது.
இத்தகு படிகளின் மூலம் தவத்தை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தவத்தின்மூலம் சத்விசாரம் கைகூடும்.

தானம்

இந்த உலகமே இரண்டு காரணிகளால்தான் தங்கியிருக்கிறது என்கிறார் திருவள்ளுவர். ஒன்று தானம், மற்றொன்று தவம். இதில் முதன்மைபெறும் தானமே பொதுநலம் மிக்கது. இதை ‘பரோபகாரம்’ என்கிறார் வள்ளல்பெருமானார்.ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்ற அளவுக்குத் தானம் செய்யலாம். பசுவுக்குப் பசும்புல் தரலாம். இல்லாவிடில் உண்ணும்போது ஒரு உருண்டை உணவையாவது பிறருக்கு வழங்கலாம். இதுவும் முடியாதெனில் இன்சொல்லாவது கூறலாம். இன்சொல்லும் பெரும் தானந்தான். இதைத்தான் திருமூலர்,

“யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே” என்கிறார்.

இன்னொருவருக்குக் கொடுக்காமல் இருப்பது குற்றம். அதைவிடப் பெருங்குற்றம் இன்னொருவர் கொடுக்கும்போது நாம் இடையூறாக நின்று தடுப்பது. அதனால்தான் பாவங்களைப் பட்டியலிட்ட நம் பகவானார்,

“தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனே”

என்று மனுமுறை கண்ட வாசகத்தில் பாடுகிறார்.

ஆகவே, தானம் செய்வது வாழ்வு சிறக்க ஓர் வழி. பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஏற்றமிகு எண்ணம் எப்போது எழுமென்றால், இன்னொரு உயிரைக் கண்டு இரங்கும்போதுதான். அப்படி இரங்கும் நிலை எப்போது வாய்க்கும் எனில் இன்னொரு உயிரைத் தன்னுயிர்போல் கருதும்போதுதான். அப்படிக் கருதுவதற்குப் பெயர்தான் ஜீவ காருண்யம் என்றார் அடிகளார்.  இப்படி இன்னொரு உயிரைத் தன்னுயிராகவே பாவிக்கும் உள்ளம்தான் இறைவன் வாழும் இல்லமாகும். இதை,

“எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி,
உள்ளே
ஒத்து உரிமையுடையவராய் உவக்கின்றார்
யாவர்
அவர் உளம்தான் சுத்த சித்துருவாய்
எம்பெருமான்
நடம்புரியும் இடம்”
என்றார் அடிகளார்.

இன்னொருவருக்கு ஈந்து இன்பமுடன் வாழ்வதுதான் இறைநிலை. அதுதான் சொர்க்கம். கடவுளர்களுக்குக் கரங்கள் நான்கு, எட்டு, பத்து, பன்னிரண்டு என்று சொன்னதற்குக் காரணம் அவர்கள் வழங்கும் திறத்தைக் காட்டுவதற்காகவே என்று உரைநடையில் உரைக்கிறார் அடிகளார்.ஆகவே, கைபெற்ற பயனை நாம் செய்யவேண்டும். கைக்கு அழகு கங்கணமோ, கை கடிகாரமோ, மோதிரமோ அல்ல; மாறாக மற்றவர்க்கு கைகளின்மூலம் வாரி வழங்குவதே ஆகும்.

அப்படி வழங்கும்போது நான் உயர்ந்தவன் என்ற எண்ணத்துடன் வழங்கக்கூடாது. தமிழ் மூதாட்டி ஔவையார் எண்ணிலடங்கா சாதியை வெறும் இரண்டாகப் பிரித்தார். ஒன்று உயர்ந்த சாதி; மற்றொன்று தாழ்ந்த சாதி. உயர்ந்த சாதி இது என்று சொல்லும்போது பிறருக்குக் கொடுப்பவர்கள் உயர்ந்த சாதி என்றார்.ஆனால் தாழ்ந்த சாதி யார் என்று கூறும்போது பெறுபவர்கள் என்று கூறவில்லை. மாறாக, கொடுப்பதற்குப் பொருளிருந்தும் கொடுக்காமல் இருப்பவர்கள் தாழ்ந்த சாதியினர் என்றார்.

“சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”
ஆகவே கொடுக்கிறவர்களே உயர்ந்த சாதியினராகக் கருதப்படுவர்.

சரி, நாம் இன்னொருவருக்குக் கொடுக்கும்போது, ‘நான் கொடுக்கிறேன்; அதனால் நான் உயர்ந்தவன்; வாங்குகிறவன் தாழ்ந்தவன் என்று எண்ணக்கூடாது. அப்படி எண்ணுவதற்குப் பெயர்தான் ஆணவம்.இந்த ஆணவத்துடன் செய்யும் எந்தவொரு அறத்திற்கும் நமக்குப் பலன் கிடைக்காது. ஆணவத்துடன் அறம் செய்யும்போது நம் மனம், விளம்பரத்தைத் தேடும். 5000 ரூபாய்க்குத் தானம் செய்துவிட்டு 10,000 ரூபாய்க்கு அதை விளம்பரப்படுத்த மனம் உந்தும்.

ஆகவே, தானம் செய்வதைத் தனக்குக் கிடைத்த வரம் என்று கருதிச் செய்யவேண்டும். இன்று தானம் செய்யும் பலர், அதை ‘தான் செய்தேன்’ என்பதை உலகுக்கு அறிவிக்கவே தானம் செய்கின்றனர். பத்துப் பைசா மதிப்புடைய விபூதிப் பொட்டலத்தைக் கோயிலுக்குக் கொடுத்தால்கூட, அதிலும் தன் பெயர், முகவரி போன்ற விளம்பரங்களைத் தவறாமல்
அச்சிடுகின்றனர்.

பலர் கோயிலுக்கு ‘உபயம்’ என்ற பெயரில்லாமல் பொருட்களை வழங்குவதில்லை. ஆண்டவன் கொடுத்த அபயம்தான் இவ்வாழ்வு என்பதை உணரவேண்டும். ஆகவே, தானம் செய்கின்றபோது இறைநினைவுடன் செய்யவேண்டும். இதைத்தான்,

“……………. கரவாது
இடுவாய் வடிவேல் இறைதான் நினைவாய்”
என்று பாடுகிறார் அருணகிரிநாதர். வள்ளல்பெருமான் தான் எல்லா உயிர்களுக்கும் தானம் செய்யவேண்டும்; அதற்கு இறைவா! நீ அருள வேண்டும் என்று.

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்
புரிதல் வேண்டும்ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல்
வேண்டும்”
என வேண்டுகிறார்.

இறை நினைவுடன் கொடுக்கவேண்டும். அதற்குப் பக்தி வேண்டும். அதையும் அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய பரம்பொருளிடத்தில் செலுத்த வேண்டும். அவரை உணரத் தவம் மேற்கொள்ள வேண்டும். அதனால் தயை ஏற்பட்டு தானம் கைகூடும்.வணங்கும் கரங்களைவிட, வழங்கும் கரங்களையே இறைவன் அதிகமாக நேசிக்கிறார்.

சிவ.சதீஸ்குமார்

The post வாழ்வு சிறக்க மூன்று வழிகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED எத்திக்கும் கொண்டாடும் தித்திக்கும் தீபாவளி