சீர்காழிக்கு அருகே விளங்கும் திருத்தலம், திருநாங்கூர். இந்த ஊரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த ஊரைச் சுற்றிலும் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் மேலும் 5 திவ்ய தேசங்கள். ஆக மொத்தம், பதினொன்று! பல மலர்கள் சேர்ந்த ஒரே கொத்தாக இந்த திவ்ய தேசங்கள் திகழ்கின்றன. ஒரே பகுதியில் உள்ள திவ்யதேசங்கள்தானென்றாலும், ஒன்றுக்கொன்று நெடிய தொலைவில்தான் அமைந்திருக்கின்றன.
இதுதான் அந்த திவ்ய தேசங்களின் பட்டியல்:
1. திருக்காவளம்பாடி, 2. திரு அரிமேய விண்ணகரம், 3. திருவண்புருடோத்தமம், 4. திருச்செம்பொன்செய் கோயில், 5. திருமணிமாடக் கோயில், 6. திருவைகுந்த விண்ணகரம், 7. திருத்தேவனார்த் தொகை, 8. திருத்தெற்றியம்பலம், 9. திருமணிக்கூடம், 10. திருவெள்ளக்குளம், 11. திருப்பார்த்தன்பள்ளி.
இந்தப் பட்டியலில் முதலில் நாம் தரிசிக்கப் போவது திருமணிமாடக் கோயிலை. திவ்ய தேச விழாக்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாததுமான பதினோரு பெருமாள்கள் தரிசனம் ஒவ்வொரு வருடமும் இங்கே காணக்கிடைக்கிறது. ஆமாம், பதினொரு பெருமாள்களும் தத்தமது கருட வாகனமேறி இங்கு எழுந்தருளி, பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார்கள். இந்த முக்கியத்துவத்தை முன்னிருத்தி, முதலில் இந்த திவ்ய தேசப் பெருமாளை தரிசனம் செய்வோம். ராஜகோபுரத்தைக் கடந்து சற்றுத் தொலைவு நடந்து சென்றுதான் பெருமாளை நாம் சேவிக்க முடியும். இந்த ராஜகோபுரம் இந்த இடத்தில் நிலைகொண்டது, பின்னாளில்தான். அப்போதெல்லாம், உள்ளே தள்ளி இருந்திருக்கிறது என்றும், பதினொரு திவ்ய தேசப் பெருமாள்களும் ஒன்றாய் இங்கு எழுந்தருள வசதியாக இப்போதைய இடத்தில் ராஜகோபுரத்தை அமைத்ததாகவும் சொல்கிறார்கள். இடது பக்கம் துவாதசி கட்டடம் காணப்படுகிறது. முந்தின நாள் ஏகாதசி விரதம் ஏற்று, மறுநாள் துவாதசியன்று பாரணை மேற்கொள்ளும் வழக்கத்தில் இங்கே பெரிய அளவில் அன்னதானம் நடைபெற்றிருக்கிறது. முந்தின நாள் ஏகாதசி விரதம் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் மறுநாள் இங்கு துவாதசி பாரணை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இப்போது அந்த அன்னதானம் நடைபெறுவதில்லை; ஆனாலும் பழமை வழக்கத்தின் சாட்சியாக மட்டுமே இந்தக் கட்டடம் நிற்கிறது. இப்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள், எப்போது அன்னதான கைங்கரியத்தை மேற்கொள்கிறார்களோ, அந்த நாட்களில் மட்டும், இந்த துவாதசி கட்டடத்தில் அதை நிறைவேற்று
கிறார்கள். அருகே புண்டரீக வல்லித் தாயார் தனி சந்நதியில் கொலுவிருந்து, பக்தர்களின் குறைகளை ஒரு தாயின் பரிவோடு, பெருமாளுக்கு சமர்ப் பித்து, அவர்களது நல்வாழ்வுக்காக சிபாரிசும் செய்கிறாள். இழந்த செல்வத்தை மீட்க, வழக்குகளில் வெற்றி பெற, அநியாயமான முறையில் பதவி இழந்தவர்கள், தம் பதவியைத் திரும்பப் பெற, தாயார் பேருதவி கோயிலின் மூலவர் நாராயணப் பெருமாள். பத்மாசனத்தில் அமர்ந்த கோலம். ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராய் எழிலார்ந்து வீற்றிருக்கிறார். பெருமாளின் தொங்கவிடப்பட்ட இடது பாதத்தை தரிசிப்பது பெரும் பாக்கியம் என்கிறார்கள். தினமும் காலை 7 முதல் 9 மணிவரை ஆதவன் இந்தப் பெருமாளைத் தன் கிரணங்களால் வழிபடுவதும் அற்புதமான அமைப்புதான்.
வட இந்தியாவில் பத்ரிகாசிரமத்தில் கோயில்கொண்டிருக்கும் பத்ரி நாராயணனே இங்கும் கொலுவிருக்கிறார். அங்கும் பெருமாளுக்கு நாராயணன் என்றே பெயர்; இதே அமர்ந்த கோலம். ஆகவே திருமணிமாடக் கோயில் என்ற இந்தத் திருத்தலம் பத்ரி தலத்திற்கு ஒப்பானதாகவே கருதப்படுகிறது.
இதனாலேயே திருநாங்கூர் பகுதியில் அமைந்திருக்கும் 11 திவ்ய தேசங்களில் இந்த திருமணிமாடக் கோயில் முதன்மை பெற்றிருக்கிறது. அதனாலேயே திருநாங்கூர் திருப்பதிகளைத் தொகுத்துக் கூறிய திவ்யசூரி சரிதம், இந்த திவ்ய தேசத்திற்கென்றே பிரத்யேகமாக ஒரு பாசுரம் கொண்டிருக்கிறது. அதாவது, இந்த தலத்திலுள்ள பெருமாள், தன் திருவடி நிழலைத் தன் பக்தர்களுக்கு மட்டுமே அருள்வான்; அவன்மீது பக்தி செலுத்தாத பிறர் இந்த பாக்கியத்தைப் பெற இயலாது, என்ற பொருளில்,
‘‘இவ்வுத்தமன் தன்பூவடியை அன்பினருக்கு அன்றிப் புறத்து
ஒருவர் மேவ அருளாத மேலோன், திருநாங்கூர்க்
காவல் புரிந்து அருளும் கார்வண்ணன்’’
என்று அமைகிறது அந்தப் பாடல்.
இந்தக் கோயிலை நாராயணப் பெருமாள் கோயில் என்றே பொதுவாக அழைக்கிறார்கள். ஏனென்றால், ஸ்ரீ மன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாக்ஷர மந்திரமாக்கி உபதேசம் செய்தார். யாருக்கு? தனக்கே! அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி, தனக்கே உபதேசம் செய்துகொண்ட அற்புதம்! அதாவது உலகின் எல்லா ஜீவராசிகளிலும் தானே நிறைந்திருக்கும் உண்மையை விளக்கும் தத்துவம்.ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்ததால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, அது நீங்க, சிவபெருமான், உமையுடன், கோகர்ணம் என்ற தலத்தில், திருமாலைக் குறித்து தவம் இயற்றினார். அவர் முன் தோன்றிய திருமால், அவரை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று, பதினொரு ருத்ர தோற்றங்கள் கொண்டு அசுவமேத யாகத்தைச் செய்யுமாறும், அது நிறைவுறும் சமயத்தில், தான் வந்து அவரது தோஷத்தை நீக்குவதாகவும் வாக்களித்தார். அதன்படி, சிவபெருமானும் பதினொரு ருத்ர ரூபங்கள் கொண்டு யாகத்தை இயற்றினார். யாகம் முடியும் தறுவாயில்,ஸ்ரீ மன் நாராயணன், பிரணவ விமானத்தில் காட்சியளித்து, சிவனுடைய தோஷத்தைப் போக்கினார் என்கிறது தல புராணம். தான் கொண்ட பதினொரு ருத்ர உருவங்களுக்கு தனித்தனியே, அதாவது பதினொரு வடிவில் அருள் புரிந்ததால், திருமால், இந்த திவ்ய தேசத்தில் பதினொரு அர்ச்சா மூர்த்தங்களாக விளங்க வேண்டும் என்று சிவபெருமான் கேட்டுக் கொண்டார். பின்னாளில், பக்தர்கள் பதினொரு ருத்ரனுக்குக் காட்சி தந்த பதினொரு நாராயணன்களை தரிசித்து அனைத்துப் பேறுகளையும் பெற வேண்டும் என்பது சிவபெருமானின் விருப்பம். அதன்படி பெருமாள் கொண்ட கோலங்கள்தான் இப்போது பதினொரு திவ்ய தேசங்களாக திருநாங்கூரில் அமைந்துள்ளன. அவற்றில் பிரதானமானது திருமணிமாடக் கோயில். இங்கே திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்குத் தனி சந்நதி அமைந்திருக்கிறது. ஸ்ரீ ராமானுஜருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்தவராயிற்றே! தானே தன் நாமத்தை மந்திரமாகத் தனக்கே உபதேசித்துக் கொண்ட திருமாலின் தலத்திற்கு நம்பிகள் வருகை தராது இருப்பாரா என்ன! வேறெந்த திவ்ய தேசத்துக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த திருமணிமாடக் கோயிலுக்கு உண்டு. தை மாத அமாவாசைக்கு அடுத்த நாளில், திருநாங்கூரின் பிற பத்து திவ்ய தேசப் பெருமாள்களும் தத்தமது கருட வாகனங்களில் வந்து இங்கே கூடும் அதியற்புதமான விழாக் கொண்டாட்டம்தான் அது. அஷ்டாக்ஷரமான நாராயண மந்திரத்தை உபதேசித்த நாராயணன் கம்பீரமாகக் கோலோச்சும் இந்தத் தலத்திற்கு, திருநாங்கூரிலுள்ள பிற பத்து பெருமாள்களும் வருகை தரும் வைபவம்தான் அந்த கருட சேவை. திருநகரி என்ற திருநாங்கூர் பகுதியிலுள்ள ஊரில் அவதரித்தவர் திருமங்கையாழ்வார். திருமால் மேல் தீவிரக் காதல் கொண்டு, வைணவம் தழைக்க அரிய பல சேவைகளைப் புரிந்தவர் இவர். ஸ்ரீ ரங்கத்து மதில் சுவர்களை நிர்மாணித்த இவர், பல திவ்ய தேசங்களுக்கு விஜயம் செய்து அந்தப் பெருமாள்கள் மீது பாசுரங்கள் பாடி, அருந்தொண்டாற்றியிருக்கிறார். பிற தலங்களில் உள்ள பெருமாள்களையே மனம் நெகிழ தரிசித்தவர் என்றால், சொந்த ஊரிலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் கோயில் கொண்டிருக்கும் பெருமாள்களைத்தான் எப்படி நயந்து, நயந்து பாடி மகிழ்ந்திருப்பார்! இந்த அவருடைய நெகிழ்ச்சியை, மேலே குறிப்பிட்ட கருட சேவை வைபவத்தின் போது பார்த்து இன்புறலாம். ஆமாம், இந்த நிகழ்ச்சிக்காக, திருமங்கையாழ்வார், விக்ரக ரூபனாக திருநகரியிலிருந்து புறப்பட்டு மணிமாடக்கோயிலுக்கு வந்து சேருவார். பதினொரு பெருமாள்களையும் ஒரு சேர தரிசித்து அப்படியே மனம் குளிர்வார். தான் ஒவ்வொரு திவ்ய தேசமாகப் போய் அந்தந்தப் பெருமள்களை சேவித்து அவர்களை மங்களாசாசனம் செய்வித்த சம்பவங்கள் இப்போதும் கூடியிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அவர் அப்பாடல்களை மீண்டும் பாடுவார். ஒவ்வொரு பெருமாளாகத் தனித்தனியே வலம் வந்து அவர்களைத் தம் பாசுரங்களால் மீண்டும்
மங்களாசாசனம் செய்வார்.
இந்தச் சம்பவம் எப்படி நடக்கும்?
மணிமாடக் கோயிலில் இந்த பதினொரு பெருமாள்களும் குறிப்பிட்ட நாளன்று, மதியம் 1 மணி முதல் 6 மணிக்குள்ளாக, ஒவ்வொருவராக கருட வாகனத்தில் வந்து சேருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம், அலங்காரம் என்று நடைபெறும். அதன் பிறகு அவர்கள் ஒருவர்பின் ஒருவராக ஊர்வலம் வருவார்கள். அப்படி ஊர்வலம் புறப்படும்போதுதான் திருமங்கையாழ்வார் ஒவ்வொருவருக்கும் மங்களாசாசனம் செய்வார். முதலில் ஒரு பெருமாளைப் பாடியபடியே வலம் வருவார்; வலம் வந்து நேருக்கு நேர் நின்று சேவிப்பார். பிறகு கற்பூர ஆரத்தி காட்டப்படும். பெருமாள், ஆழ்வார் செய்த மங்களாசாசனத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு அருள் புரிவார். ஆழ்வாருக்கு உரிய மரியாதையையும் செய்வார். அந்த மரியாதையை ஏற்றுக்கொள்ளும் ஆழ்வார், அவரை மீண்டும் வலம் வந்து வணங்கி, அடுத்து வரும் பெருமாளுக்காகக் காத்திருப்பார். இப்படி தனித்தனியே கருட வாகனத்தில் வரும் பதினொரு பெருமாள்களையும் பாடி, மரியாதை பெற்று, வலம் வந்து மனம் கனிவார் ஆழ்வார். இதைப் பார்த்துகொண்டிருக்கும் பக்தர்களுக்குத் தாமும் ஆழ்வார் காலத்துக்கே போய்விட்ட சந்தோஷமும்,
பெருமிதமும் ஏற்படும். மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தப் பெருமாள்கள் மீண்டும் தத்தமது கருட வாகனத்தில் தத்தமது திவ்ய தேசங்களுக்குப் புறப்பட்டுச் செல்வர்.இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிட்டுகிறது. அதாவது இங்கு சேவை சாதிக்கும் பெருமாள்களை தரிசித்தால் அதற்கொப்பான இன்னொரு திவ்ய தேசப் பெருமாளையும் தரிசிக்கும் பேறும் கிடைத்துவிடுகிறது. ஸ்ரீ மத் குடந்தை ஆண்டவன் சுவாமிகள் திருவாக்குப்படி, மணிமாடக் கோயில் எம்பெரு மானை வழிபடுவதால், இமயமலையின் பத்ரிநாத்திலுள்ள திருவதரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும். வைகுந்த விண்ணகரப் பெருமாளை வணங்கியோர் அந்த ஸ்ரீ வைகுந்தத்து நாயகனையே வணங்கிய அருள் பெறுவர்.அரிமேய விண்ணகரப் பெருமாள், தன்னை சேவிப்பவர்களுக்கு வடநாட்டிலுள்ள வடமதுரைப் பெருமாளை சேவித்த பாக்கியத்தை அருள்கிறார். திருத்தேவனார் தொகை பெருமாள், தன்னுடன், கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தைப் பெருமாளையும் சேர்த்து தரிசிக்கும் அருளை நல்குகிறார். திருவண் புருஷோத்தம நாயகனை வழிபட்டோர், ராமன் அவதரித்த அயோத்தி திருத்தலத்தை வழிபட்ட பேறு அடைவர்.செம்பொன்செய் கோவில் பெருமாள், காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார். திருத்தெற்றியம்பலம் அருளாளன், ஸ்ரீ ரங்கத்து அரங்கனை தரிசித்த சிறப்புகளை அருள்கிறார். திருவெள்ளக்குளம் திருமால், திருப்பதி திருவேங்கடவனை வழிபடும்
பாக்கியத்தை நல்குகிறார். திருமணிக்கூட நாயகன், காஞ்சி வரதனை வணங்கிய நற்பலன்களை
வழங்குகிறார். திருக்காவளம்பாடிப் பெருமாள், காஞ்சியிலுள்ள திருப்பாடகப் பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார். திருப்பார்த்தன்பள்ளி எம்பெருமான், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வணங்கிய பெரும் பேறளிக்கிறார். இப்படிப்பட்ட பேரருளை பக்தர்களுக்கு வழங்குவதற்காகவே வருடத்துக்கு ஒருமுறை இந்த பதினொரு பெருமாள்களும் ஒன்றாய் கூடும் தலமாகப் பெருமை பெற்றிருக்கிறது மணிமாடக் கோயில். இந்தக் கோயிலைப் பற்றி திருமங்கையாழ்வார் பாடிய 12 பாசுரங்களில் ஒன்று இங்கே:
நந்தா விளக்கே அளத்தற் கரியாய்
நரநா ரணனே கருமா முகில்போல்
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
இமையோர் பரவுமிடம் எத்திசையும்
சுந்தாரமந் தேனிசைபா டமாடே
களிவண் டுமிழற் றநிழல் துதைந்து
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கென் மனனே
‘ஸ்ரீ மந் நாராயணன் ஒரு விளக்கு, யாராலும் தூண்டப்படத் தேவையில்லாத, என்றென்றும் குன்றாமல் நிரந்தரமாய் ஒளி வீசிக்கொண்டிருக்கும் விளக்கு. அதாவது நித்யமும், ஸ்வயம் பிரகாசமான ஞானத்தை உடையவன். அவனது கடைக்கண் பார்வை எங்கெல்லாம் பரவுகிறதோ, அங்கெல்லாம் அவனருளும் பாய்கிறது. அப்படிப்பட்ட ஒரு தலமான மணிமாடக் கோயில் எனும் இத்தலம், இனிமையாக ரீங்காரமிட்டு பாடிக் களிக்கும் வண்டுகள் மொய்க்கும் மணமிகு மலர்கள் கொண்ட சோலைகளால் சூழப்பட்டது. இத்தகைய அற்புதத் தலத்தில் ஒளிவீசிக்கொண்டிருக்கும் எம்பெருமானை என்றென்றும் வணங்கு மனமே,’ என்கிறார்.
எப்படிப் போவது?
சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவு. சீர்காழி, மூவக்கரை செல்லும் பேருந்துகளிலும் சென்று ‘நாராயணப் பெருமாள் கோயில்’ என்று கேட்டு இறங்கிக்கொள்ளலாம். ஆட்டோ
வசதியும் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8.00 முதல் 10.30 மணிவரையிலும், மாலை
5 முதல் 7.30 மணிவரையிலும்.முகவரி: அருள்மிகு நாராயணப் பெருமாள் திருக்கோயில், நாங்கூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609106.
தியான ஸ்லோகம்
மணிமாடக்கோயிலுக்குப் போய் நாராயணனை தரிசிக்கும்வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:
விக்யாதே மணிமண்டபே விஜயதே நந்தா ப்ரதீபோ ஹரி:
தீர்த்தம் ருத்ர ஸரோ விமாநமபி வை தத்ர ப்ரகாசாஹ்வயம்
ஆஸீநோ ஹரிதிங் முகச்ச தயிதா ஸ்ரீ புண்டரீ காபிதா,
ருத்ரேணாகில தேவப்ருந்த விநுத: ஸாக்ஷாத் க்ருதே பாஸதே
The post திருமணிமாடக் கோயில் நாராயணன் appeared first on Dinakaran.