ஊட்டி : தமிழக சுற்றுலா பயணிகள் குறைந்த போதிலும், அண்டை மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டதால் சுற்றுலா தலங்கள் களைகட்டின. கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு மாத காலமாக நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால், கடந்த ஒரு மாத காலமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி, ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.
இதனால், பெரும்பாலான மக்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றதாலும், சொந்த ஊர்களிலேயே இருந்ததாலும் பெரும்பாலான தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் யாரும் ஊட்டிக்கு வரவில்லை. அதே சமயம், வாக்குப்பதிவை முன்னிட்டு நீலகிரிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர தணிக்கைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், அண்டை மாநிலமான கேரள மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது.
மேலும், கேரள மாநிலத்தில் வரும் 26ம் தேதி வாக்குப்பதிவு என்பதால், இதனால், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அதேசமயம், ஊட்டி உள்ளூர் மக்கள் பலரும் ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில், ஊட்டி நகரில் மக்கள் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது.
The post சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள் appeared first on Dinakaran.