×
Saravana Stores

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்: நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றி தான் என்று பேட்டி

சென்னை: சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவியுடன் வரிசையில் நின்று நேற்று காலை வாக்களித்தார். அப்போது, ‘நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றி தான்’ என்று கூறினார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கான தேர்தல் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் தேனாம்பேட்டை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து நடந்தே வாக்களிப்பதற்கு வந்தார். தொடர்ந்து அவர் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களோடு, பொதுமக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து வெளியே வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தற்கு அடையாளமாக விரலில் போடப்பட்ட மையை அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் உற்சாகமாக காண்பித்தார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘‘நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்றார். பின்னர் நிருபர்கள், திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றி தான்’’ என்று பதில் அளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்’’ என குறிப்பிட்டுள்ளார்.

The post சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்: நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றி தான் என்று பேட்டி appeared first on Dinakaran.

Tags : SIET College ,Chennai, Thenampet ,Chief Minister ,M. K. Stalin ,India ,CHENNAI ,Principal ,M.K.Stalin ,Thenampet, Chennai ,Puducherry, Tamil Nadu ,Chennai, Tenampet ,
× RELATED பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு