ராணிப்பேட்டை: ஒரே நபர் 2 ஓட்டு போட்ட முயன்றதை தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீஸ் வேன் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை நகராட்சி மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் கங்காதரா நிதியுதவி தொடக்கப்பள்ளியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் இறந்துபோன மற்றும் வெளியூர் சென்றுவிட்ட நபர்களின் பெயரில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதாக பாமக, அதிமுக பூத் ஏஜெண்ட்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் அங்கு வந்த பாமக வேட்பாளர் பாலு, அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினரிடம் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும், கள்ள ஓட்டு போட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி அதிகாரி கள்ளஓட்டு போட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் வாக்குப்பதிவு நிறுத்தப்படாததால் வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் பாமக வேட்பாளர் பாலு, பாமகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாமக மற்றும் பாஜவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் வழக்கம் போல் வாக்குப்பதிவு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது பொட்டலூரணி அருகே உள்ள மீன்பதன ஆலைகளை அகற்றகோரி அந்த கிராம மக்கள் நேற்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மதிய நேரத்தில் ஒரு காரில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது பொதுமக்கள் வாகனத்தை முற்றுகையிட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
ஏழு பேரையும் வேனிலிருந்து கீழே இறக்கி விட கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் மறுத்ததை தொடர்ந்து வேன் கண்ணாடியை உடைத்தும், டயர்களில் காற்றை பிடுங்கி விட்டும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 7 பேர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல், சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியம் புக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிடுவதற்காக, மேச்சேரி ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாச பெருமாள், தனது காரில் நேற்று மாலை சென்றுள்ளார்.
அந்த வாக்குச்சாவடியில் ஏற்கனவே அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த ஒருவர் மீண்டும், வாக்களிக்க வந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாச பெருமாள், வாக்குப்பதிவு அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டதுடன், கள்ள வாக்கு அளிப்பதை தடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பின்னர், வேறு பகுதிக்கு செல்ல சீனிவாச பெருமாள் காரில் வந்த போது, பாமகவை சேர்ந்த கார்த்தி, கண்ணன், தீனா, மற்றொரு கண்ணன் மற்றும் ஏராளமானோர், பெரிய கல்லை தூக்கி வந்து காரின் முன் பகுதியிலும், பின் பகுதியில் வீசி தாக்கினர். இதில் கார் சேதமடைந்தது.
The post ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது appeared first on Dinakaran.