சென்னை: வாக்குச்சாவடி மையத்தின் அருகில் கட்சியின் சின்னமோ, பெயரோ இருக்க கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளருக்கு ஒரு வாகனமும், அவரது முகவர் பயன்பாட்டிற்கு ஒரு வாகனமும் மற்றும் அவரது கட்சி தொழிலாளர்கள், முகவர்கள் கட்சி தொண்டர்கள் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லா சட்டசபை தொகுதிகளிலும் ஒரு வாகனத்தை பயன்படுத்தலாம்.
எந்தவொரு வேட்பாளரும் வாகனத்திலோ அல்லது அவருக்கென அனுமதிக்கப்பட்ட வாகனத்திலோ வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தாலோ, வாக்குச் சாவடியிலிருந்து அழைத்து சென்றாலோ மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஊழல் குற்றம். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தற்காலிக சேவை மையம் அலுவலகத்தை வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் 2 நபர்களை கொண்டு அமைத்துக் கொள்ளலாம்.
அவர்கள் பாக்கெட்டுகளில் கட்சியின் சின்னமோ, பெயரோ இருக்க கூடாது. தேவையற்ற கூட்டங்களை சேர்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அத்தகைய அலுவலகங்களை கையாள்பவர்கள் அந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். குற்றக்குறிப்பு நிலுவையிலுள்ள நபர்களை அத்தகைய சேவை மையத்தை கையாள அனுமதிக்கக்கூடாது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட தொகுதிக்குள் எத்தவொரு பொது இடத்திலும் சட்டவிரோதமான கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு தேவையேற்படின் குற்றவியல் நடைமுறைசட்டத்தின் கீழ் தேர்தல் நடக்கும் அலுவலரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். வாக்குச் சாவடியில் சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் அல்லது பிற பிரசாரப் பொருட்கள் எதுவும் காட்சிப்படுத்தக் கூடாது. மேலும் எந்தவொரு தனிநபரின் வீடு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது.
The post வாக்குச்சாவடி மையத்தின் அருகில் கட்சியின் சின்னமோ, பெயரோ இருக்க கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.