- கோயம்புத்தூர்
- ராமநாதபுரம்
- நெல்லை
- அண்ணாமலை
- நயினார்
- சென்னை
- OPS
- நாயனார் நாகேந்திரன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- AIADMK...
- நெல்லமலை
- தின மலர்
சென்னை: கோவை, ராமநாதபுரம், நெல்லை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பணம் விநியோகம் செய்தனர். நேற்று இரவும் விடிய விடிய பணம் விநியோகத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேற்றப்பட்டதால், அதிமுக அணியில் இருந்த பல்வேறு கட்சிகளை பாஜ இழுத்து தனி அணி அமைத்தது.
ஆனாலும் 3வது அணியான பாஜவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததால், கணிசமான ஓட்டுக்கள் வாங்கியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் தங்களது அணியில் சேர்ந்துள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே போட்டியிட மேலிடம் வலியுறுத்தியது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடாமல் ஒதுங்க ஆரம்பித்தார். ஆனால் அவரையும் கோவையில் தலைமை களம் இறக்கியது.
இதனால் ஓட்டுக்காக பல்வேறு வகையான யுக்திகளை கையாளத் தொடங்கினர். புதுக்கோட்டையில் உள்ள மணல் பிரமுகர் ஒருவர் மூலம் 10 நாட்களுக்கு முன்னரே சுமார் 1300 பேரை இறக்கி வீடு வீடாக பிரசாரம் மட்டுமல்லாது, பண விநியோகம் குறித்து துல்லியமாக கணக்கெடுத்து வந்தனர். மேலும் மணல் பிரமுகர் பல நூறு கோடி ரூபாயை செலவுக்காக கொடுத்துள்ளார். இதனால் பாஜ நிர்வாகிகளுக்கு பணம் தண்ணீராய் தேர்தலுக்காக செலவு செய்யப்பட்டது. பிரசாரம் முடிந்ததை தொடர்ந்து வெளியூர்காரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டதால், கோவை நகர், புறநகர் பகுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
இதனால் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் கோவையை விட்டு வெளியேறினர். அவர்கள் பட்டியலை பாஜ நிர்வாகிகளிடம் கொடுத்து விட்டுச் சென்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை பல்வேறு வகைகளில் பணம் விநியோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
எப்படியாவது வெற்றிபெற்றால்தான் அதிமுகவுக்கு உரிமை கோர முடியும் என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள திருச்சுழி தொகுதிக்கு ஓட்டுக்கு ரூ.200, பரமக்குடி தொகுதிக்கு ஓட்டுக்கு ரூ.500, திருவாடானை தொகுதிக்கு ஓட்டுக்கு ரூ.1000, ராமநாதபுரம், முதுகொளத்தூர் பகுதிகளுக்கு ரூ.1300 வீதம் வழங்கி வருகின்றனர். அதில் திமுக அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில்தான் குறைவான பணம் விநியோகித்துள்ளனர். தனது சமுதாய மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு ஓட்டுக்கு ரூ.1000, ரூ.1300 வழங்கியுள்ளார்.
அதோடு கிராம தலைவர்கள் 800 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை வரை தொகுதியில் உள்ள 70 சதவீதம் பேருக்கு பணம் விநியோகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேபோல நெல்லையில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் ஓட்டுக்கு ரூ.500 வீதம் வழங்கி வருகிறார். அவரும் பெரும்பாலானவர்களுக்கு பணம் விநியோகம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூர், வேலூர் தொகுதியிலும் ரூ.1000 முதல் ரூ.500 வரை விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
* டோக்கன் டிடிவி
தமிழகத்தில் 20 ரூபாய் டோக்கனை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அறிமுகம் செய்தார் டிடிவி தினகரன். தேர்தலுக்கு முதல்நாள் 20 ரூபாய் டோக்கனை அவரது ஆதரவாளர்கள் விநியோகித்தனர். தேர்தல் முடிந்ததும் இந்த 20 ரூபாயை கொடுத்தால் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கமே போகவில்லை.
சொன்னபடி ரூ.2 ஆயிரமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன் தனக்கு பணம் இல்லை என்று அண்ணாமலையிடம் கூறியுள்ளார். அவரோ பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். ஆனால், சொன்னபடி தேர்தல் செலவுக்கு பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேனி தொகுதி முழுவதும் அவரது ஆதரவாளர்கள் நேற்று ஒரு ஸ்வீட் ஸ்டால் பெயரில் 60 ரூபாய் டோக்கனை விநியோகித்தனர்.
அந்த டோக்கனில் சீரியல் நம்பர் இருக்கும். தேர்தல் முடிந்து 15 நாட்களுக்குள் வந்து இந்த டோக்கனை கொடுத்தால் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால் சொன்னபடி பணத்தை கொடுப்பார்களா அல்லது ஆர்.கே.நகர் மக்களுக்கு அல்வா கொடுத்ததுபோல தேனி தொகுதி மக்களுக்கும் அல்வாதானா என்பது போகப் போகத்தான் தெரியும் என்கின்றனர் தேனி தொகுதி வாக்காளர்கள்.
The post கோவை, ராமநாதபுரம், நெல்லையில் வீடுவீடாக அண்ணாமலை, ஓ.பி.எஸ், நயினார் ஆதரவாளர்கள் பணம் விநியோகம் appeared first on Dinakaran.