புதுடெல்லி; இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பா.ஜவை மிரட்டுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பா.ஜவை மிரட்டுவதாகவும், அதிகமாக திட்டுவதாகவும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பா.ஜ தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா நேற்று டெல்லியில் உள்ள பா.ஜ தலைமை அலுவலகத்தில் கூறியதாவது:
இந்தியா கூட்டணி தலைவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் மிரட்டல் அரசியலில் ஈடுபடுவதால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் நஸ்ருல் இஸ்லாம், பிரதமர் மோடியை 400 அடிக்குக் கீழே புதைக்கப் போவதாக சமீபத்தில் வெளிப்படையாக மிரட்டினார். நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைக் கொன்று புதைக்கப் போவதாக மிரட்டியதன் மூலம், ஜேஎம்எம் மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவரான நஸ்ருல் இஸ்லாம், நாட்டின் மக்கள் சக்தி யை அவமதித்துள்ளார்.
அவரின் கருத்து இந்தியா கூட்டணியின் மனநிலையை காட்டுகிறது. தேர்தல் ஆணையம் நஸ்ருல் இஸ்லாமின் கருத்துகளை தானாக முன்வந்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மோடியை கொல்வதாகப் பேசினார். இதுதவிர சமீபத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது சகோதரர் டி.கே. சுரேசுக்கு வாக்களிக்காவிட்டால் தண்ணீர் வழங்க முடியாது என்று ஹவுசிங் சொசைட்டியில் வசிப்பவர்களை மிரட்டினார்.
கர்நாடக அமைச்சர் சுதாகர் பேசுகையில், ‘ காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்காவிட்டால் ரூ.25 கோடி சிறப்பு மானியம் வழங்கப்பட மாட்டாது என்று மிரட்டல் விடுத்தார். இது தேர்தல் நடத்தை விதிமீறல். தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். டிகே சிவக்குமார் மற்றும் மற்ற கர்நாடக அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
The post ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார் appeared first on Dinakaran.