×
Saravana Stores

மலைக்கிராமங்களுக்கு குதிரை, கழுதையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 400 வருடங்கள் பழமையான வெள்ளக்கெவி, மஞ்சம்பட்டி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இவ்வூர்களுக்கு வாகனங்கள் செல்ல சாலை வசதி கிடையாது. கொடைக்கானலில் இருந்து 15 கிமீ தூரம் நடந்தே செல்ல வேண்டும். இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி இம்மலை கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலில் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்கள், பழநி யூனியன் அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

கொடைக்கானல் வரை வாகனத்தில் கொண்டு வந்த தேர்தல் அலுவலர்கள் அதன்பின் குதிரைகள் மூலம் பொருட்களை ஏற்றிக் கொண்டு நடந்தே சென்று வாக்குச்சாவடி மையங்களை அடைந்தனர். உடன் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார், துணை ராணுவத்தினர் சென்றனர். இதேபோல் நத்தத்தில் இருந்து 5 கிமீ தூரத்திலுள்ள மலைக்கிராமமான எல்.மலையூருக்கும் சாலை வசதி கிடையாது. இவ்வூருக்கும் குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி சென்றனர்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தளி சட்டமன்றத் தொகுதியில் பெட்டமுகிலாளம் ஊராட்சி கடமகுட்டை கிராமத்தில், 294 எண் கொண்ட வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 32 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 90 வாக்காளர்கள் உள்ளனர். மலை மீது அமைந்துள்ள கடமகுட்டை கிராமத்திற்கு, போதிய சாலை வசதி இல்லாததால், கழுதை மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், தேவையான பொருட்களை தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் தலைச்சுமையாக கொண்டு சென்றனர்.  வனத்துறை மற்றும் போலீஸ் பாதுகாப்புடன், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடமகுட்டை கிராமத்தை நடந்தே சென்றடைந்தனர். தேனி மாவட்டம், போடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கொழுக்குமலை, முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் 7 வாக்குச்சாவடி மையங்களுக்கும்,

அகமலை கிராம ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, அண்ணா நகர், சொக்கன் அலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் நேற்று பிற்பகல் போடி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 40 பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. போடியில் இருந்து குரங்கணி வரை வேன் மற்றும் ஜீப் மூலமாக வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. குரங்கணியிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள முதுவாக்குடிக்கு ஒரு வாக்கு இயந்திரம் மற்றும் உபகரணங்கள் குதிரைகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

The post மலைக்கிராமங்களுக்கு குதிரை, கழுதையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் appeared first on Dinakaran.

Tags : Dindigul District ,Kodaikanal Hills ,Vellakevi ,Manjambatti ,Chinnur ,Periyur ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள...