×

தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.50 லட்சம் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முழுவதையும் வெப்கேமரா மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களவைக்கு முதல் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

அதன்படி, முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றம், விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மக்களவைக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெறும். இதைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு 39 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு பிறகும் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கள் வழங்கப்பட்டு எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.06 கோடி ஆண் வாக்காளர்களும், 3.17 கோடி பெண் வாக்காளர்களும், 8,267 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இந்த தேர்தலில் 18 முதல் 19 வயது வரை உள்ள 10.92 லட்சம் இளம்வாக்காளர்கள் முதன் முதலாக வாக்களிக்க உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் 4,61,771 பேரும், 85 வயதுக்கு மேல் 6,14,002 பேரும் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 1,08,804 பேர் தபால் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடி மையங்களில் 3.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 874 ஆண்களும், 76 பெண்களும் உள்ளனர்.

தேர்தலை கண்காணிக்க 39 பொது பார்வையாளர்கள், 20 போலீஸ் பார்வையாளர்கள், 58 தேர்தல் செலவின பார்வையாளர்கள், மாநிலம் முழுவதும் கண்காணிக்க சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் ஒருவரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து, அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு 50 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மட்டுமே தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை பணியில் இருப்பார்கள்.

மீதமுள்ள துணை ராணுவ வீரர்கள் மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். வாக்குப்பதிவு முடிந்ததும், ஒவ்வொரு தொகுதிக்கான சென்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். முதல் பகுதியில் துணை ராணுவ வீரர்களும், 2, 3 கட்ட பாதுகாப்பில் உள்ளூர் போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள், 181 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு கூடுதல் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அங்கு வெப்கேமரா பொருத்தப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடி மையங்களில் 44,801 மையங்களில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் வாக்குப்பதிவை சென்னை, தலைமை செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்ற ரூ.173.85 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1,084 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூ.35 கோடி பரிசு பொருட்கள், ரூ.1.80 கோடி மதுபான வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 26,50,943 கார்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் voterhelpline app மூலம் தங்கள் வாக்குச்சாவடி எங்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2009ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 73.02 சதவீதம், 2014 தேர்தலில் 73.74 சதவீதம், 2019 தேர்தலில் 72.47 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழக அரசு போலீசார் 1 லட்சம் பேர், முன்னாள் ராணுவ வீரர்கள் 12,220 பேர், ஓய்வுபெற்ற போலீசார் 2,000 பேர், கேரளா, ஆந்திரா, தெலங்கானா போலீசார் 3,500 பேர், ஊர்காவல் படை வீரர்கள் 450 என மொத்தம் 1.30 லட்சம் பேரும், இவர்களுடன் 190 கம்பெனி துணை ராணுவ வீரர்களும் (20 ஆயிரம் பேர்) ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* அரசு பஸ்சில் இலவச பயணம்
தமிழகத்தில் 68,321 வாக்குப்பதிவு மையங்களில 1,58,568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 81,159 கட்டுப்பாட்டு இயந்திரம், 86,858 விவிபேட் பயன்படுத்தப்படும். விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 325 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வுதளம், வீல் சேர், தன்னார்வலர் ஒருவர், தண்ணீர் வசதி, சாமியானா, பிளாஸ்டிக் சேர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கர்ப்பிணிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க நேரில் வர முடியாவிட்டால், 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் வீடுகளுக்கே வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு, ஓட்டு போட ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர்களை வீட்டுக்கே அழைத்து சென்று விடப்படும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அதேபோன்று மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாக்காளர் அடையாள அட்டையை காட்டினால், அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்து வாக்களிக்கலாம்.

* 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு
தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரங்களை நீதிமன்ற உத்தரவுப்படி பலமுறை அரசியல் கட்சியினர் முன்னிலையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதில் ஒரு தவறுகூட கண்டுபிடிக்கப்படவில்லை. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் முன், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்.

அப்போது, வேட்பாளர்களின் ஏஜென்டுகள் வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 50 வாக்குகளை பதிவு செய்து சோதனை செய்வார்கள். அதில் இயந்திரம் 100 சதவீதம் முறையாக வேலை செய்கிறது என்று தெரிந்தபிறகே, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.

* ‘செல்பி பாயிண்ட்’
புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்கள் வாக்களித்ததை செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்ய விரும்புவார்கள். இதை கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியே ‘செல்பி பாயிண்ட்’ வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேநேரம், வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லவோ, படம் எடுக்கவோ அனுமதி இல்லை. தற்போது, வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பொதுமக்களும் அதற்கு தயாராக வாக்குச்சாவடிக்கு வர வேண்டும். முன்னெச்சரிக்கையாக வயதானவர்கள், கர்ப்பிணிகள் அவர்களுக்கு தேவையானதை கையில் கொண்டு வந்தால் எந்த பிரச்னையும் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

* காலையில் சீக்கிரமாக வாக்கு செலுத்துங்கள்
கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காலை 7 மணிக்கே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் காலையில் எழுந்தவுடன் தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்காளர் அடையாள அட்டை உட்பட 13 ஆவணங்களில் எதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு சீக்கிரமாக வந்து வாக்களியுங்கள். காலதாமதம் மற்றும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் காலையிலேயே வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.

* மக்களவை முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று நடக்க உள்ளது.

* மொத்தம் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

* தமிழ்நாடு, உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நிறைவடைகிறது.

* தமிழ்நாட்டில் 39, ராஜஸ்தானில் 12, உபியில் 8, மபியில் 6 தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், அசாமில் தலா 5 தொகுதிகளிலும், பீகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மணிப்பூரில் தலா 2 தொகுதிகளிலும், புதுச்சேரி, சட்டீஸ்கர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவு ஆகிய இடங்களில் தலா 1 தொகுதிக்கும் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

* அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 2 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடக்கிறது.

The post தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : 40 Lok Sabha ,Puduvai, Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu ,Puducherry ,Tamil Nadu, Puduvai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...