நன்றி குங்குமம் தோழி
க்யூப் விளையாட்டை சொல்லிக் கொடுத்து பல மாணவர்களையும் அந்த விளையாட்டில் சாதனையாளராக்கி வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ரஹமத் துனிசா பேகம். சாதனையாளர்கள் பலரை உருவாக்கி வருவதால், இவருக்கு சிறந்த பயிற்சியாளருக்கான கோல்டன் ஐகானிக் விருது கிடைத்திருக்கிறது. இதே நிகழ்வில் இவருடைய மகன் செய்யத் முகமதுவும் க்யூப் போட்டியில் வேர்ல்டு ரெக்கார்ட் செய்துள்ளார். தாயும் மகனும் க்யூப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று வருகிறார்கள்.
‘‘நான் க்யூப் விளையாட்டிற்கான தனிப்பட்ட பயிற்சி அளித்து வருகிறேன். என்னுடைய அகாடமி பெயர் ‘ஸ்டார் கோச்சிங்’ மையம். எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. நான் 12ம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். அதற்கு பிறகு என்னால் மேலும் படிக்க முடியவில்லை. வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் வீட்டில் இருந்தபடியே சின்னச் சின்ன வேலைகளை செய்து வந்தேன். அதன் பிறகு திருமணமானது. என் மகன் செய்யத் முகமதுவுக்கு க்யூப் விளையாட்டு மேல் அவனுடைய சிறு வயதில் இருந்தே தனிப்பட்ட ஆர்வம் உண்டு.
அவன் அந்த விளையாட்டினை நன்றாக விளையாடுவான். அதனால் அவனுக்கு அந்த விளையாட்டிற்கான தனிப்பட்ட பயிற்சி அளிக்க விரும்பினேன். எங்க ஊரில் அருகில் இருக்கும் க்யூப் பயிற்சி மையங்களில் இதற்கான பயிற்சி குறித்து விசாரித்தேன். ஆனால் அவர்களோ என் மகனுக்கு இருக்கும் ஆர்வத்தை பற்றி சீரியசாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ‘சிறு வயதில் குழந்தைகள் அப்படித்தான் இருப்பார்கள்.
அதன் பிறகு அவர்களுக்கு அந்த விளையாட்டின் மேல் பெரிய அளவில் ஈடுபாடு இருக்காது’ என்று ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டார்கள். ஆனால் எனக்கு தெரியும் என் மகனுக்கு அந்த விளையாட்டில் தனிப்பட்ட திறமை இருக்கிறது என்று. அதனால் நான் என் முயற்சியை கைவிடாமல் அவனுக்கு பயிற்சி அளிப்பது குறித்து அதற்கான பயிற்சி மையங்கள் குறித்து தேட ஆரம்பித்தேன்.
அந்த சமயத்தில் எங்க குடும்பத் தோழி ஒருவர் க்யூப் பயிற்சி அளிப்பவர் குறித்து என்னிடம் சொன்னார். அவரின் உதவியோடு என் மகனை நான் பயிற்சிக்கு அனுப்பினேன். அவரும் என் மகனுக்கு இந்த விளையாட்டின் மேல் இருக்கும் ஆர்வத்தினை புரிந்துகொண்டு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அவனும் நன்றாகவே கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். சில மாதங்களிலேயே க்யூப் விளையாட்டில் தேசிய அளவில் முதல் பரிசு என் மகனுக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உலக சாதனை விருதினையும் பெற்றான். அதனைத் தொடர்ந்து க்யூப் விளையாட்டில் பல மாணவர்களுடன் சேர்ந்து ஒரு சாதனையை செய்தான். அது கின்னஸ் சாதனைக்காக நடைபெற்ற போட்டி’’ என்றவர், க்யூப் விளையாட்டின் மேல் ஆர்வம் ஏற்பட அவரும் அதனை கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
‘‘க்யூப் விளையாட்டு கடல் போன்றது. அது பலவித விளையாட்டுகள் கொண்டது. அதாவது, 2*2, 3*3, மிரர் க்யூப், பிரமிடு என பலவிதமான விளையாட்டுகளை இந்த ஒரு க்யூப் கொண்டு விளையாடலாம். பொதுவாக நம்மில் பெரும்பாலோருக்கும் வலதுகைப் பழக்கம்தான் இருக்கும். அந்த கையினைதான் அனைத்து விஷயத்திற்கும் நாம் பயன்படுத்துவோம். ஆனால் நம்முடைய மூளையில் இரண்டு பிரிவு உள்ளது. சிறு மூளை மற்றும் பெரு மூளை.
நாம் இரண்டு கைகளை பயன்படுத்தும் போதுதான் இரண்டு மூளையும் செயல்படும். ஆனால் நாம் பெரும்பாலும் இரண்டு கைகளையும் பயன்படுத்துவதில்லை. அதனாலேயே சுறுசுறுப்பாக இல்லாமலும், கற்றல் திறனில் சோர்வாகவும் இருக்கிறோம். க்யூப் விளையாட்டை இரண்டு கைகள் கொண்டுதான் விளையாட முடியும். அதனால் இரண்டு கைகளையும் பயன்படுத்துகிறோம். இதனால் கவனம் முழுவதும் ஒரு இடத்தில் இருக்கும். அப்படி இருந்தால்தான் இந்த விளையாட்டினை வெல்ல முடியும். பொதுவாக கவனச்சிதறல் இல்லாமலும், சுறுசுறுப்பாக இருக்கவும்தான் இந்த விளையாட்டினை விளையாட கற்றுத் தருவார்கள்.
க்யூப் விளையாட்டு நிறங்களை ஒன்று சேர்க்கும் விளையாட்டு என்பதைத் தாண்டி மனம், கண், கைகளை ஒரே சமயத்தில் இயங்க வைக்கக்கூடியது. என் மகன் இந்த விளையாட்டிற்கான பயிற்சி பெற ஆரம்பித்ததும், அவனால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடிகிறது. நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடிகிறது. அதற்கு பெரும் உதவியாக இருப்பது இந்த க்யூப் விளையாட்டுதான். திருநெல்வேலியை பொறுத்தவரை அதிகமாக இந்த விளையாட்டை யாரும் சொல்லித் தருவதில்லை. அப்படியே சொல்லித் தந்தாலும் அதற்கு அதிகமாக பணம் வாங்குகிறார்கள்.
பலருக்கு இந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வு இல்லை. மேலும் இதற்கான பயிற்சிக் கட்டணமும் அதிகம் என்பதால் யாரும் இதனை கற்றுக்கொள்ள முன் வருவதில்லை. என் மகனைப் போல் மற்றவர்களும் இந்த விளையாட்டில் பயிற்சியினை பெற வேண்டும் என்று எண்ணினேன். அதனால் நான் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். நான் தையல் பயிற்சி, ஆரி வேலைப்பாடு மற்றும் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வருகிறேன். என்னிடம் டியூஷன் பயிலும் மாணவர்களுக்கு இதை கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன்.
க்யூப்பை முதல் முறையாகக் கையாளும் குழந்தைகள், அதை ஒன்று சேர்க்க 20 நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்வார்கள். பயிற்சிகள் மூலம் 20 விநாடிகளுக்குள் சேர்க்கும் வழக்கத்திற்கு வந்துவிடுவார்கள். என்னிடம் இதற்கான பயிற்சி எடுக்கும் மாணவர்கள் இந்த விளையாட்டில் மட்டுமில்லாமல் அவர்களின் அன்றாட பழக்கவழக்கங்களிலும் நல்ல மாற்றம் தென்பட்டது. டி.வி மற்றும் செல்போன் அதிக நேரம் பார்ப்பதை தவிர்க்க ஆரம்பித்தார்கள்.
படிப்பில் கவனம் செலுத்த முடிவதால், நன்றாக படிக்கவும் செய்தார்கள். இந்த விளையாட்டை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களையும் சாதனைகள் செய்ய வைக்க வேண்டும் என்பதில் முழு முயற்சியோட செயல்பட்டு வருகிறேன். மேலும் நான் எங்க ஊரில் இந்த விளையாட்டினை பலருக்கும் சொல்லித் தருவதால், சென்னையில் நடைபெற்ற வேர்ல்டு ரெக்கார்ட் நிகழ்ச்சியில் சிறந்த பயிற்சியாளருக்கான கோல்டன் ஐகானிக் விருது கிடைத்தது. எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லித் தரவேண்டும் என்பதற்காகவேதான் நான் இந்தப் பயிற்சி மையத்தினை துவங்கினேன். இந்த விளையாட்டு மூலம் உலகளவில் சாதனை படைக்க முடியும் என்பதை என் மாணவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்” என்கிறார் ரஹமத் துனிசா பேகம்.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post க்யூப் விளையாட்டில் சாதனை படைத்து வரும் அம்மாவும் மகனும்! appeared first on Dinakaran.