மார்பளவு உயரமான இடத்தில் வலது அல்லது இடது கையை மடித்து ஊன்றிக்கொண்டு, மற்ற கையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பது மனம் ஓய்வான நிலையில் கவலைகள் அற்று, கடமைகள் முடிந்து நிறைவான மனம் இன்பத்தில் நிலைபெற்றுள்ள நிலையை உணர்த்துவதாகும். பழைய காலத்துப் பெரிய மனிதர்களின் புகைப்படங்களில் கையை உயரமான பூச்சாடி மேடையில் வளைத்து ஊன்றிக்கொண்டு மற்ற கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு நிற்கும் நிலையைக் காணலாம். இதுவே சுந்தர வேடம் என்று போற்றப்படுகின்றது. இவ்விடத்தில் வேடம் என்பது நிலைபெற்றிருத்தல் என்ற பொருளில் வந்ததாகும். இறைவன் தனக்கு துணை நிற்கும் விடைமீது ஒரு கையை ஊன்றிக்கொண்டு மற்றதை இடையிலோ செண்டேந்திய வாறோ நிற்பதே சுந்தர வேடமாகும்.
சிவபெருமான் விவசாயிக் கோலத்திலும், ஆயன் கோலத்திலும் சுந்தர வேடத்துடன் நிற்கிறார். திருமால் மன்னார் குடியில் ராஜகோபாலனாக பசுவின் முதுகில் கையை ஊன்றிக் கொண்டு செண்டேந்தி சுந்தரவேடச் செல்வனாக விளங்குகிறார்.இறைவன் கண்ணாடியில் தோன்றிய தனது உருவத்திற்கு உயிர் அளித்து அழைத்து அணுக்கத் தொண்டனாக ஆக்கிக்கொண்டார். அவருக்கு ஆலால சுந்தரர் என்பது பெயர்.
அவர் இறைவன் ஆணையால் மண்மீது வந்து பிறந்து, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டுத் தலங்கள்தோறும் சென்ற இறைவனை வழிபட்டுத் தேவாரப் பாடல்கள் அருளிச்செய்தார். அவருடைய உருவத்தை அமைத்தவர்கள் இறைவனின் வடிவமாகவே அவரையும் அமைத்தனர். தலையில் கொண்டையை முடிந்தவராக கையில் செண்டேந்தியவராகவே அமைத்தனர். அவர் அருளிய இறுதிப் பதிகத்தில் ‘‘சுந்தர வேடங்களால் துரிசே செய்யும்’ `தொண்டன்’ என்று குறித்துள்ளார். சோழர்கால சுந்தரரைக் சுந்தர வடிவினராகவே காண்கிறோம். பின்னாளில் வந்தவர்கள் செண்டாயுதத்திற்குப் பதில் மலரையும் ஊன்றிய கையின் கீழ் ஊன்றுகோலையும் அமைத்துவிட்டனர்.
அற்புத சுந்தரவேடச் சுந்தரரை அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் ஆலயத்தில் காண்கிறோம். ராஜகோபாலன் எனப்படும் திருமால் வடிவம் மாப்பிள்ளை சுவாமி எனப்படும் சிவபெருமானின் வடிவம், சுந்தரம் எனப் படும் ஆலால சுந்தரர் வடிவம் ஆகிய மூன்றும் ஏறத்தாழ ஒரே வடிவானதாகும். இவற்றில் திருமால் மார்பில் வத்சம் இருக்கும். சிவ வடிவின் காதுகளில் ஓலைக் குழையும், மகரக் குண்டலமும் விளங்கும், சுந்தர காதுகளில் அகன்ற பெரிய தோடுகள் இருக்கும். திருமாலுக்கு சௌந்தரராஜன் என்றும், சிவபெருமானுக்கு சுந்தரபாண்டியர் என்றும், சுந்தரேசுவரர் என்றும் பெயர்கள் வழங்குகின்றன.
நாகலட்சுமி
The post சுந்தர வேடம் appeared first on Dinakaran.