பந்தலூர், ஏப்.18: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
150க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை கொண்ட ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுதோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், கோடைக்காலங்களில் ஊராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதுவரைக்கும் ஊராட்சி பகுதியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஊராட்சிக்குட்பட்ட பிதர்காடு ஓடோடும் வயல், காரமூலா, கைவட்டா, ஸ்கூல் ரோடு செருகுன்னு, நம்பியார்குன்னு, புதுச்சேரி, ஆணப்பன்சோலை,சோலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஊராட்சி தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,“இந்த திட்டத்தின்மூலம் வீட்டிற்கு ஒரு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் சீரான குடிநீர் கிடைத்து வருகிறது. இது எங்களுக்கு பயனுள்ள திட்டமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
ஊராட்சி பகுதிகளில் பல இடங்களில் திட்டம் சிறப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒருசில கிராமங்களில் பணிகள் முழுமை பெறாமல் இருந்து வருகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் அதனையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
The post நெலாக்கோட்டை ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் 6 ஆயிரம் குடிநீர் இணைப்பு appeared first on Dinakaran.