×
Saravana Stores

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு சி.வி.சண்முகம் எதிர்ப்பா..? எடப்பாடிக்கு எழுதிய கடிதம் வைரல்

விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக பாக்கியராஜ் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் இந்த மாவட்டத்திற்கும், இப்பகுதிக்கும் அறிமுகம் இல்லாதவர் என ஆரம்பத்திலேயே அதிமுகவில் புகைச்சல் இருந்தன. இந்நிலையில் வேட்பாளருக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் பெயரில் எடப்பாடிக்கு எழுதியதாக சமூக வலைதளங்களில் நேற்று மாலை முதல் கடிதம் வைரலானது.

அந்த கடிதத்தில், ‘விழுப்புரம் தொகுதி வேட்பாளராக பாக்யராஜ் அறிவிக்கப்பட்டதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மாவட்ட செயலாளரான என்னிடம் ஆலோசனை மேற்கொள்ளாமல் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுகவின் நடத்தைகளுக்கு மாறாக அவர் செயல்படுகிறார். பொய்யான கல்வித் தகுதிகளை அதிமுக சுவரொட்டிகளில் பயன்படுத்தி களங்கம் விளைவிக்கிறார்.

அதிமுக கூட்டங்களில் மிகவும் தரக்குறைவாக அவர் பேசுகிறார். விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பாக்யராஜ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆகையால் தேர்தல் பணிகளை செவ்வனே செய்ய எவரும் முன்வர மறுக்கின்றனர். இவரின் வேட்பாளர் நியமனம் விழுப்புரம் தொகுதியில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி கையெழுத்திட்டு அனுப்பப்பட்டதாக உலா வரும் கடிதம் நேற்று வேட்பாளர்கள் பிரசாரம் முடிவடைந்து மாலை 6 மணிக்கு மேல் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு பரவி வருகின்றன. இதுவிழுப்புரம் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த கடிதத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதிகா செந்தில், சி.வி.சண்முகம் தரப்பில் மேற்கு காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தார். திட்டமிட்டு வேண்டும் என்றே எங்கள் வெற்றியை பாதிக்கும் வகையில், இந்த கடிதத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.

The post விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு சி.வி.சண்முகம் எதிர்ப்பா..? எடப்பாடிக்கு எழுதிய கடிதம் வைரல் appeared first on Dinakaran.

Tags : CV ,AIADMK ,Villupuram ,Edappadi ,Pakyaraj Kalam ,ADMK ,former ,minister ,district secretary ,Shanmugam ,Dinakaran ,
× RELATED சி.வி.சண்முகம் திடீர் கைது