×
Saravana Stores

வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா புதுவை தேர்தலை ரத்து செய்யக்கோரி கலெக்டர் ஆபீசில் அதிமுக தர்ணா: வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தால் பிடித்து கொடுக்க சொல்வதாக புகார்

புதுச்சேரியில் பாஜ சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பணம் பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் அக்கட்சியின் வேட்பாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நேற்று ராஜீவ்காந்தி சிக்னலிருந்து பேரணியாக புறப்பட்ட அதிமுகவினர் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். பின்னர், முதல்மாடியில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறை முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது மாநிலம் முழுவதும் ஓட்டுக்கு பாஜ பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கனை அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து, இவ்விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை காண்பித்தும், ஏற்கனவே அளித்த புகார் மனுவை காண்பித்தும் முறையிட்டனர்.

அதன்பிறகு வெளியே வந்த புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில்,‘இந்தியாவில் தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் புதுச்சேரியில் ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜ ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகிறது. எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் பணம் கொடுக்கப்படுகிறது.

இதற்கான வீடியோ ஆதாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காட்டி உள்ளேன். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை கையில் வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் பாதுகாப்பாக பணம் பட்டுவாடா செய்கின்றனர். இதுவரை ஏற்கனவே 3 முறை நானே நேரில் புகார் அளித்துள்ளேன். பணம் பட்டு வாடாவை ஆதாரத்துடன் முறையிட்டால் பிடித்துக் கொடுங்கள் என்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இத்தேர்தலை உடனே ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக கட்சித் தலைமையிடம் ஆலோசித்து தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்,’என்றார்.

The post வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா புதுவை தேர்தலை ரத்து செய்யக்கோரி கலெக்டர் ஆபீசில் அதிமுக தர்ணா: வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தால் பிடித்து கொடுக்க சொல்வதாக புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK dharna ,BJP ,Puducherry ,AIADMK ,Minister ,Namachivayam ,Puduwa elections ,Dinakaran ,
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...