1 தமிழ்நாட்டில் பாஜ 2வது இடத்தை பிடிக்கும் என அண்ணாமலை மேடைக்கு மேடை சொல்கிறாரே?
சொல்லப்போனால் 3வது இடத்திற்கு தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் பாஜவுக்கும் சீமானுக்கும் தான். ஆகவே 2வது இடத்திற்கான போட்டி என்று ஒன்று இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் பாஜ வளர்வதற்கு எந்த ஒரு முகாந்திரமும் கிடையாது. மண்ணில் விதைத்தால் அது செடி, கொடியாக வளரும். பாறையில் விதைத்தால் அது வீணாகத் தான் போகும். தமிழ்நாடு என்ற இறுகிய பாறையில் பாஜ என்ற எந்த விதையும் இங்கு முளைக்காது, வளராது, வாழாது. இன்னும் ஒரு மாதத்திற்கு அண்ணாமலையின் கனவை யாரும் கலைக்க வேண்டாம். சந்தோஷமாக இருந்துவிட்டு போகட்டும்.
2 பாஜவும்-மோடியும் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதைப்பற்றிய உங்கள் கருத்து?
நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் முழு சுயநலவாதியாக வாழும் கூட்டம் தான் பாஜ. தேச பக்தியோ மக்களை மன்னிக்கும் மனோபாவமோ இல்லாத பாசிச கூட்டம். அதாவது ‘கண்டேன் சீதையை’ என்ற ஒரு வாக்கியத்தை அனுமன் கூறியதுபோல ராமயணத்தில் கம்பன் சொல்லி இருப்பார். அதுபோல பாஜவும் மோடியும் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என முதல்வர் கூறி இருப்பது மிக சரியான கருத்து தான்.
3 தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் கைக்கு போய்விடும் என அண்ணாமலை கூறியிருப்பது பற்றி?
டிடிவி தினகரனே அதிமுவுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை எனக் கூறிவிட்டு தனிக்கட்சி ஆரம்பித்து தனி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறார். ஆனால், டிடிவி தான் அதிமுகவின் அடுத்த வாரிசு என இவர்கள் கூறுவது வேடிக்கையும் வினோதமாகவும் உள்ளது. ஜோதிடர்களின் வேலையை இவர் பிடித்து விட்டார். எனவே இதற்காக பயப்பட வேண்டியது ஜோதிடர்கள் தான்.
4 அண்ணாமலையை எதிர்த்து பேசும் எடப்பாடி, மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட
பேசாதது ஏன்?
எடப்பாடிக்கும் அவர் உடன் இருப்பவர்களுக்கும் ஏதோ ஒரு அச்சம் இருக்கிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ரெய்டில் அதிமுகவினர் பயந்துபோய் உள்ளனர். இதனால் தான் அவர்கள் மோடியை எதிர்க்க பயப்படுகிறார்கள். இவர்களிடம் நேர்மையும் உண்மையும் இருக்குமேயானால் மோடியை எதிர்க்க முடியும். அது இல்லாத காரணத்தினால் தான் இப்படி பயப்படுகிறார்கள்.
The post 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி தமிழ்நாட்டில் பாஜ வளர்வதற்கு எந்த ஒரு முகாந்திரமும் கிடையாது: திருச்சி வேலுசாமி காங்கிரஸ் மூத்த தலைவர் appeared first on Dinakaran.