×
Saravana Stores

அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல பொதுமக்களும் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பிரசாரம் செய்தால் 2 ஆண்டுகள் தண்டனை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி: இன்று (18ம் தேதி) மாலை 6 மணி வரை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தபால் வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். முன்னதாக இன்று மாலையில் இருந்து வாக்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
பத்திரிகைகளில் 19ம் தேதி வரைகூட அனுமதி பெற்று அரசியல் கட்சியினர் விளம்பரம் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிவி, இணையதளங்களில் 17ம் தேதி (நேற்று) மாலை 6 மணியுடன் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களிலும் வாக்கு சேகரிக்க கூடாது.

இது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பொருந்தும். வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் ஸ்டேட்டஸ் வைத்து பொதுமக்கள் பிரசாரம் செய்ய கூடாது. மீறினால், 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடி மையங்களில், பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 44,800 மையங்களில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 65 சதவீதம் ஆகும். மீதம் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படும். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெப்கேமரா மற்றும் வீடியோ கேமராவில் பதிவாகும் காட்சிகளை சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தமிழக தலைமை அலுவலக தேர்தல் அதிகாரிகள் 16 தொலைக்காட்சிகளில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* கள்ள ஓட்டை தடுப்பது எப்படி?
வாக்குச்சாவடியில் வாக்களிக்க வருபவர், அந்த பகுதியில் இல்லாத நபர் என்று கட்சி ஏஜென்டுக்கு சந்தேகம் இருந்தால் தலைமை வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் அளிக்கலாம். குறிப்பிட்ட ஏஜென்ட், ரூ.2 கட்டணம் செலுத்தி ‘சேலஞ்ச் ஓட்டு அதாவது 49-பி’ புகார் அளிக்கலாம். பின்னர் வாக்குச்சாவடி அலுவலர், சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி, அவர் கள்ள ஓட்டு போட வந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி தெரிந்து கொள்வார். கள்ள ஓட்டு போட வரவில்லை என்று உறுதியான பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். இல்லையென்றால் போலீசில் ஒப்படைக்கப்படுவார். ‘டெண்டர் ஓட்டு – 49-ஓ’ என்ற நடைமுறையின்படி, ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் அனைத்து ஆவணங்களையும் வாக்குச்சாவடி அலுவலரிடம் காட்டி, பேப்பர் வாக்குச்சீட்டில் (பார்ம் 17பி) தனது ஓட்டை அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

The post அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல பொதுமக்களும் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பிரசாரம் செய்தால் 2 ஆண்டுகள் தண்டனை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Facebook ,Chief Electoral Officer ,Tamil ,Nadu ,Satyapratha Sahu ,Chief Secretariat ,Chennai ,Election Commission ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியல்...