×

ஒன்றிய அரசின் 18% ஜிஎஸ்டி, 20% மூலப்பொருட்களின் விலை உயர்வு: தள்ளாடும் ஃபவுண்டரி தொழில்; 40% உற்பத்தி பாதிப்பு; குமுறும் உரிமையாளர்கள்; வேலை இழக்கும் தொழிலாளர்கள்

இயந்திர தொழில்களுக்கு தேவையான வார்ப்படங்கள் (ஃபவுண்டரி) தயாரிக்கும் தொழிலில் கோவை மாவட்டம், நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. கோவை மாவட்டத்தில் கணபதி, சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம், வேலாண்டிபாளையம், பீளமேடு, தண்ணீர்பந்தல், அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறு, சிறு ஃபவுண்டரிகள் நிறுவனங்கள் என 400க்கும் மேற்பட்டவை உள்ளன. நடுத்தர மற்றும் பெரிய அளவிலான ஃபவுண்டரிகள் சுமார் 70 உள்ளன. இவை எல்லாவற்றையும் சேர்த்து, மொத்தமாக 500 ஃபவுண்டரி நிறுவனங்கள் உள்ளன.

இத்துறையில் நேரடியாக மற்றும் மறைமுகமாக தலா ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இத்துறை சார்பில், ஆட்டோமொபைல், கிரைண்டர், மோட்டார், பம்புசெட், ஜெனரல் இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கப்படுகின்றன. மாதம்தோறும் ரூ.800 கோடி மதிப்புள்ள ஒரு லட்சம் டன் காஸ்டிங் உற்பத்தி செய்யும் கட்டமைப்பை இத்தொழிற்சாலைகள் பெற்றுள்ளன. இத்துறை சார்பில், ஆண்டுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. இத்துறைக்கு தேவையான மூலப்பொருட்கள் நிலக்கரி, பிக் அயன், ஸ்கிராப், பெர்ரோ சிலிக்கான், சிலிக்கா மணல், பெர்ரோ சிலிக்கான் மெக்னீஷியம் ஆகியவை உள்ளூரில் கிடைப்பதில்லை.

இவை, வட மாநிலங்களில்தான் அதிகளவில் கிடைக்கிறது. அதனால், இங்குள்ள ஃபவுண்டரி ஆலை அதிபர்கள் வடமாநிலங்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் இந்த மூலப்பொருட்களின் விலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. மூலப்ெபாருட்களின் விலையில் அடிக்கடி ஏற்ற, இறக்கம் ஏற்படுவதால் இத்தொழிலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. அத்துடன், மின்கட்டணமும் உயர்ந்துவிட்டது. இத்துறை சார்பில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது, இத்துறையினருக்கு பெரும் சுமையாக உள்ளது. அதிகளவில் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியுள்ளதால், இத்துறையின் உற்பத்தி தள்ளாட்டம் காண துவங்கியுள்ளது.

அதனால், ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மூலப்பொருட்கள் விலையை குறைத்து சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என இத்துறையினர் முத்தான மூன்று கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனர். ஆனால், ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. தொழில் செய்வதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் கோவையில் உள்ளன. ஆனால், தொழில் மந்தநிலை காரணமாக ஜாப்ஆர்டர் இல்லாதது பெரும் பிரச்னையாக உள்ளது. இத்துறையில், தொழில்நுட்ப அறிவு பெற்ற இளைஞர்கள் மட்டுமின்றி, 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் அதிகளவில் வேலைக்கு சேர்ந்து வந்தனர்.

ஆனால், அவர்களும் கடந்த சில ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்ற முன்வருவதில்லை. இத்துறையில், முன்பு 3 ஷிப்ட் தொழிலாளர்கள் பணிபுரிவது வழக்கம். ஆனால், தற்போது 2 ஷிப்ட் பணிபுரியக்கூட ஆட்கள் இல்லை. சுமார் 20 சதவீத ஆட்கள் தட்டுப்பாடு உள்ளது. ஜாப் ஆர்டர்களும் பெரிய அளவில் இல்லை. அதனால், இத்துறையில் மந்தநிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே, ஒன்றிய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இத்தொழில் படாதபாடு பட்டது. கொஞ்சம் சீரடைந்து வந்த நிலையில், மூலப்பொருள் விலை உயர்வும், ஜி.எஸ்.டியும் இத்துறைக்கு மென்மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இத்துறையில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுந்தபடி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது.

இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு ஃபவுண்டரி ஆலை அதிபர்கள் சங்க தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது: ஜிஎஸ்டி விதிப்பு மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக இத்துறை சீராக இயங்கவில்லை. கடும் தடுமாற்றத்துடன் செயல்பட்டு வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தி இழப்பு ஏற்பட துவங்குகிறது. இத்துறையில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டால், அது, இத்துறையை மட்டும் பாதிக்காது. இத்துறையை சார்ந்துள்ள ஆட்டோமொபைல், கிரைண்டர், மோட்டார், பம்புசெட், ஜெனரல் இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சங்கிலி தொடர் போல் அனைத்து துறைகளிலும் பாதிப்பு ஏற்படுவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும். இதற்கு, ஒன்றிய அரசும், மாநில அரசும் விரைவான நடவடிக்கை எடுப்பது நல்லது.

ஒன்றிய அரசால், சமீபத்தில் குறு, சிறு தொழில்களுக்காக (எம்.எஸ்.எம்.இ) அறிவிக்கப்பட்ட 43பி சட்டப்படி, விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கு 45 நாட்களுக்குள் பேமண்ட் செலுத்தப்பட வேண்டும். இல்லையேனில், ஐ.டி பெனால்டி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இச்சட்டத்தால், குறு மற்றும் சிறு பவுண்டரி நிறுவனங்களிடமிருந்து, பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்வதை குறைத்துக்கொண்டுள்ளன. அதனால், குறு மற்றும் சிறு ஃபவுண்டரி ஆலைகளில் இருந்து 25 சதவீதத்திற்கும் மேல் பொருட்கள் கொள்முதல் செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.

இச்சட்டத்தின்படி, 45 நாட்களுக்குள் பணம் செலுத்தப்பட்டதா? என்பதை வருடத்திற்கு ஒருமுறை வருமான வரி சான்றிதழ் மூலமாகத்தான் அறிய முடியும். எனவே, வருடம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஜி.எஸ்.டி 18 சதவீதம் என்பது அபரிமிதமானது. இதை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தற்போதுள்ள மின்சார சட்டத்திலும் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும். இப்படி வரி குறைப்பு செய்தால், வியாபார பரிவர்த்தனை அதிகரிக்கும். குறு, சிறு ஃபவுண்டரி ஆலைகள் வளர்ச்சி அடைய உறுதுணையாக இருக்கும். குறு மற்றும் சிறு ஃபவுண்டரி தொழிலை காப்பாற்றவும், அதன் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் தனி வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* புறநகர் தொழிற்பேட்டை
ஒன்றிய அரசின் நிதியுதவி மற்றும் தொழில்துறையினரின் பங்களிப்புடன் நகருக்கு வெளியே ஃபவுண்டரி தொழிற்சாலைகளுக்கு என தனி தொழிற்பேட்டை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. சூலூர் அருகே கள்ளப்பாளையத்தில் 30 ஏக்கரில் குறு சிறு ஃபவுண்டரிகளுக்கும், அரசூரில் 80 ஏக்கரில் பெரிய ஃபவுண்டரி ஆலைகளுக்கு தனி தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஃபவுண்டரி ஆலைகள் இப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.

* மாசு கெடுபிடியால் தவிப்பு
கோவை மாநகரில், ஃபவுண்டரி ஆலைகள் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மாநகர் பகுதியில் சுமார் 60 ஆண்டுக்கு முன்பு இந்த ஆலைகள் துவக்கப்பட்டபோது, சுற்றிலும் குடியிருப்புகள் கிடையாது. ஆனால், நாளடைவில், சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் உருவாகி விட்டதால், இந்த ஆலைகள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிவரும் காற்று நச்சுத்தன்மையை உருவாக்குகிறது என குடியிருப்புவாசிகள் புகார் கொடுக்கும் நிகழ்வு தொடர்கிறது. அதனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த ஆலைகளில் ஆய்வுசெய்துவிட்டு, ஆலைகளை நகருக்கு வெளியே கொண்டுசெல்லுங்கள் என உத்தரவிடுகின்றனர். ஆலைகளை இடமாற்றம் செய்வது பெரும் செலவினம் என்பதால், சிறு சிறு தொழில்முனைவோர், தங்களது ஆலைகளை இடமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

The post ஒன்றிய அரசின் 18% ஜிஎஸ்டி, 20% மூலப்பொருட்களின் விலை உயர்வு: தள்ளாடும் ஃபவுண்டரி தொழில்; 40% உற்பத்தி பாதிப்பு; குமுறும் உரிமையாளர்கள்; வேலை இழக்கும் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Coimbatore district ,Ganapati ,Saravanampatti ,Avarampalayam ,Velandipalayam ,Beelamedu ,Antaripandal ,Arasur ,Union government ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு மருத்துவம் படித்தோருக்கான...