கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் அண்ணாமலை நேற்று சுல்தான்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பிரசாரம் செய்தார். அவர் சின்ன வதம்பசேரி கிராமத்தில் திறந்தவேனில் நின்றபடி பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர்,‘குடிநீர் இணைப்பு இலவசம் என்று கூறுகிறீர்கள். ஆனால், ரூ.3 ஆயிரம் கேட்கின்றனர். நீட் தேர்வு மூலம் ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். இப்படியிருக்க ஏன் அதனை கட்டாயப்படுத்துகிறீர்கள். அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி எதற்கு?. நதிநீர் இணைப்பு திட்டம் அறிவித்ததோடு சரி, ஏன் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை,’ என அண்ணாமலையிடம் அடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அப்போது, அண்ணாமலை, ‘இந்த கேள்விகளை எல்லாம் கடந்த 70 ஆண்டுகளாக கேட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இருப்பினும், பரவாயில்லை. எத்தனை கேள்வி கேட்டாலும் நீங்கள் சமாதானம் ஆகும் வரை பதில் அளிக்கிறேன். எத்தனை பேர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வேண்டாம் என்கிறீர்கள். முதலில் ஆறு வரியாக செலுத்தி வந்தது. ஜிஎஸ்டி என ஒரே வரியாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இல்லாமல் எப்படி மக்கள் பணியை செய்வது. ராணுவ வீரர், அரசு அதிகாரிகள், போலீசாருக்கு எப்படி சம்பளம் தர முடியும். மோடி என்ன தனியாக ரூபாய் நோட்டு அச்சடித்து வருகிறாரா?. எங்களின் உயிரே போனாலும் நீட் தேர்வை எக்காரணம் கொண்டும் ரத்து செய்ய மாட்டோம். முதன் முறையாக நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்கின்றனர். நீட் தேர்வை எடுத்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்றால், அது போன்ற அரசியல் எங்களுக்கு தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வினால் கடந்த 7 ஆண்டில் 22 குழந்தைகள் இறந்துள்ளனர். நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் விலக்கு அளிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவைக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, இந்தியா கூட்டணியின் வாக்குறுதியாக தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்றால், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணாமலை உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* பாமகவினர் அதிர்ச்சி
பாஜ கூட்டணியில் உள்ள பாமகவும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் அண்ணாமலை உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என கூறி உள்ளார். இதேபோல், 2026ல் பாமக தலைமையில் தமிழகத்தின் ஆட்சி என்று அன்புமணி கூறி வருகிறார். ஆனால் அண்ணாமலையோ பாஜ தலைமையில்தான் ஆட்சி என்று கூறி வருகிறார். பாஜ-பாமக கூட்டணியில் இருந்தாலும் அன்புமணி சொல்வதற்கு எல்லாம் அண்ணாமலை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது பாமகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
The post உயிரே போனாலும் நீட் ரத்து செய்ய மாட்டோம்: அண்ணாமலை திமிர் appeared first on Dinakaran.