கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை சிலர் மிதிக்காமல் வணங்கி தாண்டிச் செல்வது ஏன்?
– நாராயணன், கூறைநாடு.
கோயில் நுழைவாயில் மட்டுமல்ல, நமது வீட்டில் உள்ள நுழைவாயில் படியினையும் மிதிக்கக் கூடாது. வாயில்படியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். “துவார மகாலட்சுமி’’ என்று சொல்வார்கள். வாயிற்படி அமைக்கும்போது அதற்கு கீழே தங்கம், வெள்ளி முதலான பஞ்சலோகத்தையும் முத்து, பவழம் உள்ளிட்ட நவரத்தினங்களையும் வைத்து அதன்மீது வாயில்படியை நிறுத்துவார்கள். வெள்ளிக்கிழமைகளில் நம் வீட்டுப் பெண்கள், வாயிற்படிக்கு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைப்பதும், வாயிற்படியில் விளக்கேற்றி வைப்பதும், விசேஷ நாட்களில் மாலை அணிவித்து வணங்குவதும் மகாலட்சுமி வாயிற்படியில் வாசம் செய்கிறாள் என்ற நம்பிக்கையில்தான். அதனால்தான் நம்மவர்கள் கோயில் உட்பட அனைத்து இடங்களிலும் வாயில் படியினை மிதிக்காமல் தாண்டிச் செல்கிறார்கள்.
முன்னோர் வழிபாட்டிற்கு எள்ளு உபயோகிப்பதன் காரணம் என்ன? வேறு தானியங்களைக் கொண்டு தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்யக்கூடாதா?
– நடராஜன், திருச்சி.
மகாவிஷ்ணுவின் வியர்வைத் துளி பூமியில் விழுந்து, அதில் இருந்து உருவானது எள்ளுச் செடி என்கிறது சாஸ்திரம். ஆயுள்காரகன் ஆன சனிக்கு உரிய தானியம் ஆகவும் எள் திகழ்கிறது. மோட்சத்தைத் தருபவர் மகாவிஷ்ணு என்பதால், அவருடைய ரோமத்திலிருந்து உதிர்ந்த எள்ளினை பித்ரு காரியத்திற்கு பயன்படுத்துகிறோம்.
நம்மில் சிலர், வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபாடு நடத்துகிறோம். ராசிப்படி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால்தான் இறைவன் அருள் கிட்டும் என்று சிலர் சொல்கிறார்களே?
– வாசன், தென் எலப்பாக்கம்.
அவரவர் ராசி அறிந்து கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால், இறைவனின் அருள் சிலருக்கு மட்டுமே கிட்டும். கண்ணுக்குப் புலப்படாத பராசக்தியின் அருள் நிரம்பியதாகவே இவ்வுலகு உள்ளது என்று தேவி மகாத்மியம், 11-வது அத்தியாயத்தில் கூறப்படுகிறது. ‘‘சிதி ரூபேண யா க்ருத்ஸனம் ஏதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்’’. எனவே, ராசிப்படியோ அல்லது எப்படியானாலும் அனைவரும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்குச் சென்று
வழிபடத்தான் வேண்டும்.
தொகுப்பு: அருள்ஜோதி
The post கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை சிலர் மிதிக்காமல் வணங்கி தாண்டிச் செல்வது ஏன்? appeared first on Dinakaran.