வாரியார் சுவாமிகள் ஒருமுறை வண்ணாரப் பேட்டையிலுள்ள ஒரு வள்ளலின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அந்த வள்ளலைப் பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதைப் போல் ஆன்மிகப் பெரியோர்களும் புலவர்களும் சூழ்ந்திருப்பது எப்போதும் வழக்கம். அவ்வள்ளல், தன்னை நாடி வரும் பெரியோர்களுக்குத் தட்டில் பணத்தை வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வாராம். இதற்கான காரணம் என்ன? என்று வாரியார் சுவாமிகள் அந்த வள்ளலிடம் கேட்டபோது, “கொடுப்பவர்களின் கை மேலே இருக்கவேண்டும். வாங்குவோரின் கை கீழே இருக்கவேண்டும். அதனால்தான் இப்படிச் செய்கிறேன்” என்றார் அந்த வள்ளல்.
அதற்கு வாரியார் சுவாமிகள், “சரி! அப்படியானால் நீங்கள் பணத்தினை தட்டில் வைத்துக் கொடுக்காமல் கையால் எடுத்துக் கொடுத்தால் அல்லவா உங்கள் கை மேலே இருக்கும்?” என்று கேட்க, “நான் எங்கே கொடுக்கிறேன்? அவர்கள் அல்லவா எனக்குக் கொடுக்கிறார்கள்! அதனால்தான் எனது கைகள் கீழே இருக்குமாறு தட்டில் வைத்துப் பணம் தருகிறேன்” என்றார் அந்த வள்ளல்.
“அவர்கள் உங்களுக்கு என்ன தருகிறார்கள்? உங்களிடம் அல்லவா வாங்குகிறார்கள்” என்றார் வாரியார். அதற்கு அந்த வள்ளல், “சுவாமி! இங்கு வருபவர்கள் பெரியோர்கள். பல தலங்களுக்குப் போய் வந்தவர்கள். பல தீர்த்தங்களில் முழுகியவர்கள். தெய்வத்தமிழில் மூழ்கியவர்கள். அவர்கள் என்னிடமுள்ள அற்பமான பணத்தை எடுத்துக் கொண்டு, புண்ணியமான அருளை எனக்கு வழங்குகிறார்கள். பொருளைவிட அருள்தானே பெரியது. அதனால் அவர்களின் கைகள் மேலேயிருக்கும் வகையில் நான் தட்டில் பணத்தை வைத்து அவர்கள் கை மேலே இருக்கும்படி செய்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று தருகிறேன் சுவாமி!” என்றார் அந்த வள்ளல்.
இதைக் கண்டு வியந்த வாரியார் சுவாமிகள், இந்த அற்புதமான நுட்பத்தை எந்த நூலில் படித்துத் தெரிந்துகொள்ள முடியுமோ! என்று மனம் மகிழ்ந்தார். இவ்வரலாற்றின்மூலம் கொடுப்பது உயர்வானது என்பதுடன் ‘கொடுத்தேன்’ என்ற எண்ணமில்லாமல் பணிவாக இருப்பதுதான் உயர்ந்தது என்பதை அறியமுடிகிறது. இன்று நாம் பலரும் ‘கொடுக்கும்’ குணமுடையவர்களாக இருக்கிறோம். ஆனால், கொடுத்துவிட்டு, “நான் கொடுத்தேன்” என்ற கர்வத்தை விட்டோமா? என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். அதுவே நிம்மதியாக வாழ்வதற்கான வழி. ‘கொடுத்தோம்’ என்ற எண்ணம்தான் ஆணவத்தின் அடிப்படை அடையாளம். அந்த அடையாளத்தால்தான் ஆணவமும், பின் கோபமும் தொடர்ந்து பொறாமை முதலிய குணங்கள் தொற்றுநோய் போல் நம்மைத் தொடரும்.ஆகவே, கொடுப்பதைவிடக் ‘கொடுத்தேன்’ என்ற எண்ணத்தை விடுவதே உண்மையான கொடையாகும்.
தொகுப்பு: முனைவர் சிவ. சதீஸ்குமார்
The post கொடுப்பதைவிட உயர்வானது எது? appeared first on Dinakaran.